சஸ்பென்ஸ்- திரில்லர் ரகத் திரைப்படங்கள் பெரும்பாலும் யதார்த்தத்தை மீறியதாக இருக்கும். அதில் கதாநாயகன் காவல்துறை அதிகாரியாகவோ, உளவுத்துறை அதிகாரியாகவோ அல்லது சாமானியராகவோ இருந்தால்கூட அதிபுத்திசாலியாகவே இருப்பார். குற்றப் பின்னணியில் உள்ள தடயங்களை எல்லாம் கோத்து வில்லனைக் கையும் களவுமாகப் பிடித்துத் துவம்சம் செய்துவிடுவார்.
இதுபோன்ற எந்த அம்சமும் இன்றி யதார்த்தத் திரைக்கதையின் ஊடாகவே பார்வையாளருக்கு அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களையும் ஏற்படுத்துகிறது ‘தி சேல்ஸ்மேன்’ என்ற இரானியப் படம். பாதிக்கப்பட்ட கதாநாயகன் வில்லனைத் தேடிப் பழிவாங்கும் ஏகப்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். மாறாக, குற்றத்துக்குக் காரணமான ஆண் மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த இரானியத் திரைப்படம்.
அசலான திரைக்கதை மற்றும் சிறந்த அயல் மொழித் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் 2012-ல் ஆஸ்கர் வென்ற ‘எ செபரேஷன்’ பட இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதி சென்ற ஆண்டு இயக்கிய படம் இது. காட்சி மொழி மூலமாகவே உலக மனங்களைத் தொட முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஸ்கர்.
யார் எனத் தெரியாமல்…
பழைய அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் உள்ள அத்தனை வீடுகளும் நில அதிர்வு ஏற்பட்டதுபோல ஆட்டம் கண்டு விரிசல்விடுகின்றன. அக்கம்பக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்டக் கட்டிட வேலைதான் இதற்குக் காரணம். அங்கு வசித்தவர்கள் ஒரே இரவில் வீடுவாசல் இன்றி தெருவுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான இமாத் (ஷஹாப் ஹுசைனி), ராணா (தராநேஹ் அலிதூஸ்தி), தம்பதி அவசர அவசரமாக வேறொரு பழைய அடுக்கு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் ஏற்கெனவே வசித்துவந்த பெண் தன்னுடைய ஆடைகள் உட்படப் பலவற்றை அப்புறப்படுத்தாமலேயே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாக அக்கம்பக்கத்தார் மறைமுகமாகத் தெரிவிக்கின்றனர். இது இமாதையும் ராணாவையும் அசௌகரியம் கொள்ளச் செய்கிறது.
ஒரு நாள் ராணா குளியலறைக்குச் செல்லும்போது வீட்டில் உள்ள இண்டர்காமில் அழைப்புவருகிறது. கடைக்குச் சென்ற தன் கணவர்தான் வீடு திரும்பிவிட்டதாக நினைத்துக்கொண்டு வீட்டின் கதவைத் திறந்துவைத்துக் குளியலறைக்குள் சென்றுவிடுகிறார் ராணா.
மனதில் படரும் பயம்
இமாத் வீடு திரும்பும்போது ராணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராணா குளிக்கும்போது அடையாளம் தெரியாத ஒரு நபரால் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமான தலையில் தையலுடன் உயிர் பிழைத்து வீடு திரும்புகிறார் ராணா. தலையில் ஏற்பட்ட காயம் ஆறினாலும் மனதில் அது பயமாகப் படருகிறது. அவரால் இயல்பு நிலைக்குத் திரும்பவே முடியவில்லை. பள்ளி ஆசிரியரான கணவர் இமாத் தனக்குப் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதேநேரத்தில் இமாத் நெருங்கும்போதெல்லாம் விலகிச் செல்கிறார். தனிமையை நாடுகிறார். இதனால் இமாத் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்.
ராணாவுக்கு அன்று நடந்தது என்ன என்பது இமாதுக்கும் தெரியவில்லை பார்வையாளரான நமக்கும் புரியவில்லை. ஆதர்ச தம்பதிகளின் வாழ்வில் இந்தச் சம்பவம் பேரிடியாகக் குறுக்கே விழுகிறது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்க ராணா மறுக்கவே குற்றவாளியைத் தானே தேட ஆரம்பிக்கிறார் இமாத்.
கோபமும் பரிதாபமும்
பழிவாங்கும் படலத்தைப் பல முறை திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால் இப்படத்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தைவிட தன் அன்பு மனைவியை இயல்பு நிலைக்குத் திருப்பிவிடத் துடிக்கும் கணவரின் தவிப்பு தனித்துவம் காண்கிறது.
வசனத்திலோ, காட்சியிலோ உடனடியாக நெருடல் ஏற்படுத்தக்கூடிய ஒரு திரைக்கதையை மிகவும் கவனமாகவும் யதார்த்தத்தை மீறாமலும் கையாண்டிருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சிகளில் வரும் கிழவர் (பாபக் கரிமி) இறுக்கமான முக பாவனைகளைக் கொண்டே நம்மை நடுநடுங்கச் செய்கிறார். தள்ளாத வயதிலும் ஆண் மனம் கொள்ளும் பாலியல் இச்சை துர்நாற்றமாக வீசுகிறது. அதிலும் அவருடைய வயது முதிர்ந்த மனைவி, “ஐயோ…அவருதான் என்னோட உலகமே” என அப்பாவித்தனமாக அழும்போது, நமக்குக் கோபமும் பரிதாபமும் ஒன்றின் மேல் மற்றொன்று தொற்றிக்கொள்கின்றன.
தன்னிடம் அத்துமீறியவரைக் கணவர் கண்டுபிடித்து அடைத்துவைத்திருக்கிறார் எனத் தெரிந்ததும், “அவரை விட்டுவிடுங்கள்” என்கிறார் ராணா. அங்கு பாதிக்கப்பட்ட பெண் மன்னிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறார் என்பதைவிடவும் அந்த அருவருப்பான பிறவியை ஒரு கணம்கூட அவர் பார்க்க விரும்பவில்லை என்பதையே அவருடைய கண்கள் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன. அந்தக் காட்சியில் ஒரே நேரத்தில் இமாதாகவும் ராணாவாகவும் நாம் மாறுகிறோம்.
எதிர் எதிர் நிலைகள்
இமாதும் ராணாவும் இரவு நேரங்களில் ‘டெத் ஆஃப் சேல்ஸ்மேன்’ என்கிற மேடை நாடகத்தில் நடிக்கிறார்கள். அமெரிக்க வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் அந்த நாடகத்துக்கான ஒத்திகைக் காட்சிகளை அவ்வப்போது காட்டி, இரானிய மக்களின் வாழ்க்கை அதிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும் புரியவைக்கிறார் இயக்குநர். “நான் மீண்டும் ஹாலிவுட் படங்களை எடுக்க வரவில்லை. என் மக்களுடைய வாழ்வைக் காட்சிப்படுத்தவே வந்திருக்கிறேன்” என அஸ்கார் ஃபர்ஹாதி அங்கு சொல்லாமல் சொல்கிறார். ஒளி, ஒலி அமைப்பின் மூலமாகவே எதிர் எதிர் நிலைகளை உணர்த்துகிறார். கட்டிடங்களில் மட்டுமல்ல மனித வாழ்விலும் ஏற்படும் விரிசல்களை அவை நுணுக்கமாகக் காட்டுகின்றன