திகில் நகைச்சுவைக்காகக் காத்திருக்கிறேன்
அக்ஷய் குமார் தன்னுடைய 20 ஆண்டு திரைவாழ்க்கையில் தனக்கு எந்த வருத்தங்களும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். “ஒரு நடிகனாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்தத் துறையில் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய இந்தத் திரைவாழ்க்கைப் பயணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்கிறார் அவர்.
1987-ல் பாலிவுட்டில் அறிமுகமான அக்ஷய், நகைச்சுவை, ஆக்ஷன் எனப் பல வகையான படங்களில் நடித்திருக்கிறார். “எனக்கு மிகவும் பிடித்தது திகில் நகைச்சுவைப் படங்களில் நடிப்பதுதான். ‘பூல் பூலையா’ படத்துக்குப் பிறகு, எனக்கு அந்த மாதிரியான திரைக்கதை கிடைக்கவேயில்லை. திகில், நகைச்சுவை என்ற இரண்டு அம்சங்களையும் இணைப்பது கடினமான வேலை என்று நினைக்கிறேன். இந்த வகைப் படங்களை நடிகர் மஹ்மூத் வெற்றிகரமாகக் கையாண்டார். அதற்குப் பிறகு, யாரும் அதைச் செய்யவில்லை. நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்கிறார் அவர்.
அக்ஷய் குமார் நடிப்பில் ‘ருஸ்தம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளிவரவிருக்கிறது. கடற்படை அதிகாரி கே. எம். நானாவதி வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநராகும் எண்ணமில்லை
நடிகை ஆலியா பட் தனக்கு எப்போதும் இயக்குநராகும் கனவில்லை என்று சொல்லியிருக்கிறார். “ஒருநாள், என்னால் படங்களைத் தயாரிக்க முடியும். ஆனால், என்னால் ஒருபோதும் ஒரு படத்தை இயக்க முடியும் எனத் தோன்றவில்லை. இயக்குநராவதற்கு நிறைய திறமைகள் வேண்டும். என்னிடம் அவ்வளவு திறமைகள் இல்லை. அத்துடன், ஒரு படத்தில் நடிக்கும்போது, என் பெற்றோரிடம் அந்தப் படத்தைப் பற்றி எந்த ஆலோசனையும் கேட்க மாட்டேன். எந்த ஆலோசனை தேவைப்பட்டாலும் அதை அந்தப் படத்தின் இயக்குநரிடம்தான் கேட்பேன்” என்கிறார் ஆலியா.
ஆலியா 2012-ல் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தில் தொடங்கி ‘ஹைவே’, ‘2 ஸ்டேட்ஸ்’, ‘ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹானியா’, ‘கபூர் அண்ட் சன்ஸ்’, ‘உட்தா பஞ்சாப்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தில் ஆலியாவின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
தற்போது, ஆலியா கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஷாருக் கானுடன் ‘டியர் ஜிந்தகி’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படம் நவம்பர் 25 அன்று வெளியாகிறது.
தோல்வியும் தேவைதான்
நடிகை யாமி கவுதம் 2012-ல் அறிமுகமான ‘விக்கி டோனார்’ வெற்றிப்படமானது. ஆனால், அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகால திரை வாழ்க்கையில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. படங்களின் தோல்வி அவரைப் பாதித்திருக்கிறதா என்ற கேள்விக்கு, “எல்லாத் துறைகளிலும் தோல்வி இருக்கிறது. எடுத்து வைக்கும் எல்லா அடிகளிலும் தோல்வி இருக்கிறது. நாங்கள் வேலைபார்க்கும் துறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் இங்கே தோல்விகள் பெரிதாக்கப்படுகின்றன. தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதிதான்” என்று சொல்கிறார் யாமி.
‘பதளாபூர்’ படத்துக்குப் பிறகு வெளிவந்த அவருடைய படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. “‘விக்கி டோனார்’ வெற்றிப் படமாக இருந்தாலும், அதற்குப் பிறகு வெளிவந்த என்னுடைய இரண்டு படங்கள் தோல்வியடைந்தன. அந்த நேரத்தில் அது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய தோல்விகள் என்னை மேலும் வளர்த்துக்கொள்ள உதவிசெய்கின்றன” என்கிறார் யாமி.
யாமி கவுதம், அடுத்து ரித்திக் ரோஷனுடன் சஞ்சய் குப்தா இயக்கும் ‘காபில்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தப் படம் வெளியாகிறது.
நவாஸுத்தீன் நடனமாடப் போகிறார்
நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கீ பாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் வெளியான ‘ரமன் ராகவ் 2.0’ படத்தில் அவருடைய நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால், அவர் எந்தப் படத்திலும் இதுவரை நடனமாடியதில்லை. இப்போது, முதன்முறையாக ‘முன்னா மைக்கேல்’ என்ற படத்தில் நடிகர் டைகர் ஷ்ராஃபுடன் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார்.
‘முன்னா மைக்கேல்’ ஒரு காதல்-இசை படம். இதில் டைகர் ஷ்ராஃப் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். நவாஸுத்தீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “இந்தப் படத்தில் நவாஸுத்தீன் நடனமாடுவதைப் பார்க்கப்போகிறீர்கள். இதற்கு முன்னர், அவர் நடனமாடுவதை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். அவர் ஒரு தனித்துவமான நடிகர். அதனால் அவருக்கு எப்போதும் சவாலான கதாபாத்திரங்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கதாபாத்திரமும் அப்படிப்பட்டதுதான்” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஷப்பீர் கான்.
இந்தப் படத்துக்காக நவாஸுத்தீன் நடனப் பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து பயிற்சிபெறவிருக்கிறார்.