மாறுபட்ட படங்களுக்கான ஹீரோவாக மாறியிருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் பண்ணையாரும் பத்மினியும். எஸ்.யு.அருண்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் மாணவர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். குட்டி சகலகலாவல்லவராக இருப்பார் போலிருக்கிறது. இசையமைப்பு மட்டுமில்லாமல் முதல் படத்திலேயே பாட்டெழுதவும் பாடவும் செய்திருக்கிறார். அமரர் வாலி இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.
முதல் பாடலே பத்மினி காரைப் பற்றிய "எங்க ஊரு வண்டி" கிராமத்துத் துள்ளல் நிறைந்த கோரஸ் பாடல். இரண்டு முறை ஒலிக்கும் "உனக்காகப் பொறந்தேனே" முதல் முறை ரெட்ரோ இசையுடன் (பழைய இசையுடன்) வசீகரிக்கிறது. குறிப்பாக சந்தியாவின் குரல் பி.சுசீலாவை ஞாபகப்படுத்துகிறது. அதே பாடல் பின்னால் எஸ்.பி.பி.சரண், அனு ஆனந்த் குரலில் மாடர்னாகவும் அசத்துகிறது. கார்த்திக், பிரசாந்தினி பாடியுள்ள "காதல் வந்தாச்சோ" இனிமையான டூயட். ஆடியோவில் இதில் மட்டுமே மாடர்ன் இசை அதிகம்.
"பேசுறேன் பேசுறேன்" பாடல் யுவன் சங்கர் ராஜாவின் பாதிப்பில் உருவான பாடல் போலிருக்கிறது. ஆனால், ஜஸ்டினின் குரல் அமெச்சூராக இருக்கிறது.
குரு ஹாரிஸ் ஜெயராஜின் அடையாளங்கள், ஜஸ்டினின் முதல் படத்தில் அதிகம் தலைகாட்டவில்லை. மாறாக இனிமையான கிராமத்து இசை பாடல்களைத் தந்திருக்கிறார். ரசிக்கத்தக்க பாடல்கள் மூலம் முதல் படத்திலேயே கவனிக்க வைத்திருக்கிறார் ஜஸ்டின்.