இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: திரைப்படம் உருவாக்கிய மதம்!

ஆர்.சி.ஜெயந்தன்

உலக அளவில் பின்பற்றப்படும் பெரும்பாலான மதங்களைத் தோற்றுவிக்க, ஒரு ஞானகுரு காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் திரைப்படங்களால் மதம் ஒன்றை தோற்றுவிக்கமுடியுமா? அமெரிக்கா உட்பட ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பல ஐரோப்பிய நாடுகளில் ‘ஜெடியிஸம்’என்ற கற்பனையான மதம் உருவாக அடிப்படை அமைத்துக்கொடுத்துவிட்டன ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைத் திரைப்படங்கள். ஹாலிவுட்டை விண்வெளிப் புனைவுக்கதைப் படங்களின் கனவு பூமியாக மாற்றிக்காட்டிய மாபெரும் படைப்பாளி ஜார்ஸ் லூக்காஸ். அவரது படைப்பாக்கத்தில் உருவாகி 1977-ல் வெளியானது ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசையின் முதல் திரைப்படம்.

பால்வெளியில் மனித இனத்தின் உரிமையை நிலைநாட்டும் முதன்மைக் கதாபாத்திரங்களான ஜெடி வீரர்களை(Jedi knights) மையப்படுத்தும் விண்வெளி சாகசக் கதைகளாக விரிந்தன ஸ்டார் வார்ஸ் வரிசைப் படங்கள். இதுவரை 7 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இதன் 8-வது பாகமான ‘ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி’ திரைப்படம் வரும் மே 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

பல பால்வெளிகளால் சூழப்பட்ட பிரபஞ்சத்தை தீய சக்திகளிடமிருந்து காக்கும் உரிமைப்போராட்டத்தில் ஜெடி கதாபாத்திரங்களின் போர்குணம், அவர்களின் குணாதிசயங்கள், தியாகம், ஜெடிக்கள் பேசும் தத்துவங்கள், வசனங்கள், முக்கியமாக ஜெடிக்களின் ஆற்றல் ஆகியவை ஐரோப்பிய வாழ்க்கை முறையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தின.

நான்கு பாகங்கள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் ஐந்தாம் பாகம் கடந்த 2002-ல் வெளியானது. அதற்குமுன் அந்தப் படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் 2001-ல் ஜெடியின் தத்துவங்களை ஒரு புதிய மதமாக ஏற்றுக்கொள்வீர்களா என்ற ஒரு கருத்துக்கணிப்பு மின்னஞ்சல் வழியே நடத்தப்பட்டது. ஐரோப்பாவின் 12-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 4 கோடிப் பேர் ஜெடியிசத்தைத் தங்கள் மதமாக ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டதாக பதில் அனுப்பினார்கள்.

அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். ஐரோப்பாவின் ‘ஜிப்பி’ கலாச்சாரம் தலையெடுக்க ஜெடியிசமும் ஒரு ஊக்கியாக இருந்தது. ஜெடியிசம் திரைப்படக் கதாபாத்திரத்தின் அடிப்படையில் உருக்கொண்ட கற்பனை மதமாக இருந்தாலும், அதைக் கொண்டாட இத்தனை பேர் அப்போது வாக்களித்ததன் மூலம் ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களின் வசூலும் உலக அளவில் முறியடிக்கப்பட முடியாத ஒன்றாகவே தொடர்கிறது.

SCROLL FOR NEXT