இந்து டாக்கீஸ்

சினிமா எடுத்துப் பார் 99: ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக்காதது ஏன்?

எஸ்.பி.முத்துராமன்

ஆழியார் அணைக்குச் சென்றதும் ஒரு மாற்றம் ஏற்பட வழி பிறந் தது. ஆழியாரில் வள்ளலார் நகரில் அறிவுத் திருக்கோயில் என்ற இடம் இருக்கிறது. அதன் நிறுவனர் தலைவர் தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள். அழகான பசுமையான ஒரு பள்ளத்தாக்கு. கிட்டத்தட்ட 11 ஏக்கர் நிலம். எங்கு பார்த்தாலும் மலைகளும், மரங்களுமாக இருந்தன. அந்த இடத்தை அறிவுத் திருக்கோயிலுக்கு கொடுத்தவர், பொள்ளாச்சி அருட்செல்வர் என்.மகா லிங்கம் ஐயா அவர்கள்.

அங்கு போய் விசாரித்தோம். மன வளக் கலை மன்றம் என்ற பெயரில் உடற்பயிற்சி, மன வளப் பயிற்சி, தவம், காயகல்பம் போன்றவைகளை கற்றுத் தருகிறார்கள். அதன் கிளைகள் தமிழகத் திலும், உலகின் பல பகுதிகளிலும் இருக் கின்றன என்று கூறினார்கள். சென்னை யில் கே.கே. நகரில் இருப்பதாக கூறினார் கள். நான் கே.கே.நகரில் மரியாதைக் குரிய ஆறுமுகம் ஐயா அவர்களிடம் இந்தப் பயிற்சியை பெற்றேன்.

அதன்பிறகு ஆழியார் சென்று வேதாத் திரி மகரிஷி அவர்களிடமே இறுதிப் பயிற்சி பெற்று ‘அருள்நிதி’ ஆனேன். ‘‘மனதை அடக்கினால் அலையும், மனதை அறிந்தால் அடங்கும்’’ என்பது ‘வேதாத்திரியம்’. குழப்பத்தில் இருந்த என் மனம் அடங்கியது. மகரிஷி மறைந்த பிறகும் உயர்திரு. எஸ்.கே.மயிலானந்தம் அவர்களும் உயர்திரு. சின்னச்சாமி மனோரமா அவர்களும் பல பிரமுகர்களும், பேராசிரியர்களும், நிர்வாகிகளும் மன்றத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

ஏவி.எம் எனக்கு ‘தாய்வீடு'. எடிட்டிங் கில் வேலை பழகுபவனாக சேர்ந்து உதவி எடிட்டர், எடிட்டர், உதவி இயக்கு நர், துணை இயக்குநர் என்று படிப்படி யாக வளர்க்கப்பட்டேன். ஏவி.எம் பிள்ளைகள் ஸ்டுடியோவை பிரித்துக் கொண்டாலும் ஏவி.எம் லோகோவை செட்டியாரின் உயிராக காத்து வரு கிறார்கள். சரவணன் சாரும், குகனும், ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தார்கள்.

குகன் நித்யா சிறப்பான தம்பதிகள். நித்யா குகன் அவர்கள் ஏவி.மெய்யப்பன் மெட்ரிகுலேஷன் பள்ளியை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். அரசுத் தேர்வுகளில் இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெறுகிறது என்பது இவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குகன் நித்யாவின் மகள்கள் இரட்டையர். அருணா குகனும், அபர்ணா குகனும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற டெலிஃபிலிமை தயாரித்தார்கள். இப்போது டியாரா ஹேமோஃபிலியா அன்ட் கேன்சர் பவுண்டேஷன் (Tiara Haemophilia & cancer foundation) என்ற டிரஸ்ட்டை ஆரம்பித்து, ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த டிரெஸ்டிகளில் ஒருவனாக நான் இருக்கிறேன். ஏவி.எம்மின் நான்காவது தலைமுறையோடு நான் வேலை செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.

ஏவி.எம்மில் நான் இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. மணிவிழா கொண்டாடிவிட்டேன்.

நான் ஏவி.எம் நகரில் வாழும் நிலம் ஏவி.எம் தந்தது. நான் வீடு கட்ட, வாழ்க்கையை நடத்த, பிள்ளைகள் படிக்க, அவர்களுக்கு திருமணம் செய்ய, கார் வாங்க ஆகமொத்தம் நாங்கள் நலமாக, வளமாக வாழ ஏவி.எம் தந்த செல்வமே காரணம்.

என் காரில் பொருத்தப்பட்டுள்ள டிவிடியை கொடுத்ததே குகன் அவர்கள்தான். நான் எடிட்டிங்கில் வேலை செய்தேன் என்பதற்காக புதிய எடிட்டிங் ரூமுக்கு ‘எஸ்பி.எம் எடிட்டிங் ஷூட்’ என்று பெயர் வைத்தார்கள். பிரம்மாண்டமாக தயாரித்த ‘சிவாஜி’ படத்தில் ‘துணைத் தயாரிப்பு எஸ்பி.முத்துராமன்’ என்று டைட்டில் போட்டு என்னைக் கவுரவித் தார்கள்.

எனக்கும், என் குடும்பத் தாருக்கும் இதயங்கள் ‘லப் டப்.. லப் டப்’ என்று அடிக்கவில்லை.‘ஏவி.எம்.. ஏவி.எம்’ என்று நன்றியோடு கூறு கின்றன. அப்பச்சி ஏவி.எம் அவர் களையும், அம்மா ராஜேஸ்வரி அம்மை யாரையும் வாழையடி வாழையாக வந்துகொண்டிருக்கும் அவர்கள் வாரிசு களையும் இருகரம் கூப்பி வணங்கி எங்கள் நன்றியைக் காணிக்கை யாக்குகிறோம்.

அப்பச்சி அவர்கள் ஒருமுறை, ‘எனக்கு அசையா சொத்து அசையும் சொத்து என நிறைய சொத்துகள் இருக்கின்றன. ஆனால். இதுக்கெல்லாம் மேலே எனக்கு கிடைத்த பெரிய சொத்து என்னிடம் பணியாற்றும் உண்மையான பணியார் கள்தான்’ என்றார்கள். அப்படிப்பட்ட சிறந்த பணியாளர்களோடு நான் பணி யாற்றியிருக்கிறேன்.

முக்கியமாக எம்.ஜி.ஆர், ஆர்.ஆர்.எஸ், லேனா, எஸ்.பி.அர்ச்சுனன், ‘லேப்’ சேத்திசிங், எடிட்டிங் சூர்யா, இயக்குநர் கே.ஷங்கர். எடிட்டர்கள் கே.நாராயணன், ஆர்.ஜி. கோப், ஆர்.விட்டல், பாஸ்கர், சங்குன்னி, புரொடக்‌ஷன் மொய்தின், எம்.எஸ். மணி, அலுவலகத்தில் எம்.டி.எஸ், கண்ணன், விஸ்வநாதன், வீரப்பன், சுவாமிநாதன், சண்முகம், ஐஸ்வர்யா, எடிட்டர் சேகர், தாமஸ், முருகன், ரம்யா இப்படி பல ஊழியர்கள் எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாசம் நிறைந்த வணக்கங்கள்.

ஏவி.எம் ஸ்டுடியோவை 71 ஆண்டு களாக சிறப்போடு நடத்துகிறார்கள். பணப் பெட்டியோடு வந்தால், படப் பெட்டியோடு போகலாம். அவ்வளவு வசதிகளும் இங்கே இருக்கின்றன. ஏவி.எம் புரொடக்‌ஷன்ஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் சுமார் 175 படங்களை எடுத்திருக்கிறார்கள். சிவாஜி, கமல், வைஜெயந்தி மாலா, வி.கே.ராமசாமி போன்ற சிறந்த நடிகர்களை திரைக்கு அறிமுகப்படுத்தினார்கள். எம்.வி.ராமன், பா.நீலகண்டன், கே.சங்கர், ஏ.சி.திருலோகசந்தர் போன்ற புகழ் பெற்ற இயக்குநர்களை உலகத் துக்கு தந்ததும் ஏவி.எம்தான். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பல கலை ஞர்களுக்கும் ஏவி.எம்தான் பல்கலைக் கழகம்.

மாண்புமிகு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதலமைச்சர்க்ள் பணி யாற்றிய இடம் ஏவி.எம். பல தங்கப்பதக் கங்களையும், மாநில, தேசிய விருது களையும் வாங்கிக் குவித்த கலைக்கூடம். உலக திரையுலக சரித்திரத்தில் ஏவி.எம்முக்கு என்று சிறப்பான இடம் உண்டு.

அப்படிப்பட்ட ஏவி.எம் நிறுவனத்தில் இப்போது படங்கள் எடுப்பதில்லை. அதற்கு காரணம் அளவுக்கு மிஞ்சிய செலவுகள். லட்சங்கள் இல்லை. பலப் பல கோடிகளில் படத் தயாரிப்பு. படத்துக்கு என்ன செலவாகும்? எவ்வளவு வியாபாரம் ஆகும்? என்ற திட்டமிடல் இல்லை.

வரவுக்கு மேல் மிக மிக அதிகமாக செலவு செய்துவிட்டு, நட்டம் நட்டம் என்றால் எப்படி? படத்தைக்கூட தயாரித்து விடலாம். வெளியிட முடியவில்லை. எல்லாப் பாரங்களையும் தயாரிப்பாளரே தலையில் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்போது பாரத்தை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் தியேட்டர் உரிமை யாளர் என்று பங்குப் போட்டுக்கொள் வார்கள். இன்று 100-க்கு 10 சதவீத படங்கள்தான் லாபக்கோட்டை தொடு கின்றன. 90 சதவீதப் படங்கள் பெரிய தோல்வியை தழுவுகின்றன.

இந்த நிலையில் யாருக்கு படம் எடுக்க தைரியம் வரும்? இதற்கு எடுத்துக்காட்டுதான் அனுபவம் மிகுந்த ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக் காதது. ஆக மொத்தத்தில் சினிமா தயா ரிப்பு பாதுகாப்பற்ற சூழலுக்குப் போய் விட்டது. அதனை காப்பாற்ற அனைவரும் ஒன்றுகூடி உரிய நேரத்தில் உரிய முறையில் முடிவெடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரு கிறது. பலக் குழுக்கள் போட்டியிடு கின்றன. ஒவ்வொரு குழுவிலும் திறமை சாலிகள் இருக்கிறார்கள். திறமைசாலி கள் சண்டைப் போட்டுக்கொள் ளாமல் இணைந்தால்தானே நல்ல செயல்களைச் செய்ய முடியும். ஓட்டுப்போடுகிறவர்கள் திறமையான திரையுலகுக்காக செயல்படுபவர் களைத் தேர்ந்தெடுங்கள்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’ - என்ற குறளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள், தேர்தல் முடிந்ததும் போட்டிகளை மறந்து விட்டு, சினிமா தேரும் வகையில் செயல் படுங்கள். செயல்படவில்லை யானால் மீதமுள்ள தயாரிப்பாளர்களும் துண் டைக் காணோம், துணியைக் காணோம் என இந்த தொழிலை விட்டு ஓடிவிடு வார்கள். தயாரிப்பாளர் இல்லாமல் படமா? வேர்கள் இல்லாமல் மரமா?

- இன்னும் படம் பார்ப்போம்.

SCROLL FOR NEXT