ஒரு கதையைத் திரைக்கதையாக மாற்றும்போது, அந்தத் திரைக்கதையை நமது விருப்பத்துக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது நமது கற்பனைத் திறனுக்குச் சவால் விடும் வேலை. அதன் பயணத்தை ருசிகரமான வழியில் கொண்டுசென்று அதற்கு ஏற்றபடி கதையின் முடிவை அமைத்துக்கொள்ள முடியும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் வகையில், ஆனால் அவர்கள் எதிர்பாராத திசையில் அவர்கள் நம்பத் தகுந்த வகையில் திரைக்கதையின் பயணம் அமையும்போது பார்வையாளர்களை அந்தத் திரைக்கதை எளிதில் ஈர்த்துவிடும்.
ஒரு புள்ளி வழியே எண்ணற்ற கோடுகளை வரைய முடியும் என்பதைப் போல் ஒரு கதைக்கு எண்ணற்ற வழியில் திரைக்கதையை அமைக்க இயலும். ஒரே கதை எண்ணற்ற வழியில் பயணிக்கும் சாத்தியம் திரைக்கதையின் மாயத்தன்மையில் ஒன்று. அவரவரது சாமர்த்தியத்தையும் கற்பனையையும் பொறுத்து ஒரே கதையைப் பல படங்களாக மாற்றலாம். கதை ஒன்றாக இருந்தாலும் திரைக்கதை வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் பார்வையாளர்கள் அனைத்தையும் வரவேற்கிறார்கள். பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் படம் அவர்களைத் திருப்தி செய்தால் போதும்; அது ஏற்கெனவே வந்த கதையா, வராத கதையா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. வந்த கதையையே மறுபடியும் மறுபடியும் பார்க்கப் பார்வையாளர்கள் அலுத்துக்கொள்வதே இல்லை. அப்படி அவர்கள் அலுத்துக்கொள்ளத் தொடங்கும்போது தமிழ்ப் படங்களும் புதுவிதமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
ராமாயணக் கதை
ஒன்றைப் போல் மற்றொன்றாக அமைந்த பல தமிழ்ப் படங்கள் உண்டு. இயக்குநர் வஸந்த் ‘ஆசை’ என்றொரு திரைப்படத்தை உருவாக்கினார். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த மு. களஞ்சியமும் எஸ்.ஜே.சூர்யாவும் முறையே ‘பூமணி’, ‘வாலி’ ஆகிய படங்களை உருவாக்கினார்கள். இந்த மூன்று படங்களும் ஒரே விதமான கதையைக் கொண்டவைதான். ‘ஆசை’ மனைவியின் தங்கைமீது ஆசை கொண்டவனின் கதை. ‘பூமணி’யோ தம்பியின் மனைவியின் மீது வேட்கைகொண்டவனின் கதை. ‘வாலி’யும் அதேதான். ஆனால், மூன்று படங்களின் திரைக்கதைப் பயணங்களும் வெவ்வேறானவை.
‘ஆசை’யும் ‘வாலி’யும் நகரத்துப் பின்னணியில் நகர்ந்தன, ‘பூமணி’யோ கிராமப் பின்னணியில் சென்றது. ‘ஆசை’யில் நடித்த பிரகாஷ்ராஜைக் களஞ்சியம் பயன்படுத்திக்கொண்டார், எஸ்.ஜே.சூர்யாவோ அஜீத்தைக் கதாநாயகனாக்கினார். இந்த மூன்று கதைகளுக்கும் அடிப்படை ராமாயணம்தான். ராவணன் சீதை மீது கொண்ட காமத்தையே இவை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் வரித்துக்கொண்டன. ‘ஆசை’ திரைப்படத்தின் தொடக்கத்திலேயே ராவணன் சீதை மீது கொண்ட ஆசை ராவணின் பெண்ணாசை என்னும் தெருக்கூத்து வடிவத்தில் இடம்பெறும். இந்த மூன்று படங்களுக்குமே பார்வையாளர்களின் பெரிய வரவேற்பு கிட்டியது. ‘பூமணி’ படத்துக்காகச் சிறந்த கதையாசிரியர் விருதைத் தமிழக அரசு மு.களஞ்சியத்துக்கு வழங்கியது.
கணவனா, காதலனா?
இதைப் போலவே கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ படத்திலும் பாக்யராஜ் இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ படத்திலும் அடிப்படைக் கதை ஒன்றுதான். ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் நாயகன் கிராமத்துக்குப் பள்ளி ஆசிரியராகப் பணியேற்க வருகிறான். அங்கே கிராமத்துப் பெண் ஒருவர்மீது காதல் வயப்படுகிறான். இருவரும் மணமுடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. மீண்டும் நாயகியை நாயகன் சந்திக்கும்போது நாயகிக்கு மணமாகியிருக்கிறது. இப்போது என்ன செய்வது? அவள் கணவனுடனேயே இருந்துவிடுவாளா அல்லது காதலனுடன் செல்வாளா என்பதே க்ளைமாக்ஸ்.
‘அந்த ஏழு நாட்க’ளிலோ இசையமைக்க வாய்ப்புத் தேடி மெட்ராஸுக்கு வருகிறான் நாயகன். அங்கே தமிழ்ப் பெண்ணான வசந்தியுடன் காதல் ஏற்படுகிறது. மணமுடிக்க வேண்டிய தருணத்தில் எதிர்பாராத வகையில் அவர்கள் பிரிகிறார்கள். மீண்டும் அவளைச் சந்திக்கும்போது அவள் மற்றொருவரின் மனைவியாக இருக்கிறாள். இப்போது அவள் கணவனுடன் இருப்பதா காதலனுடன் செல்வதா என்பதே க்ளைமாக்ஸ்.
பாரதிராஜா ஓர் இயக்குநர் என்பதற்கேற்பத் தனது திரைக்கதையின் முடிவை அமைத்துக்கொண்டார். கே.பாக்யராஜ் அடிப்படையில் ஒரு திரைக்கதையாசிரியர் என்பதற்கேற்ப அவர் படத்தின் முடிவு அமைந்தது. ‘புதிய வார்ப்புக’ளில் தான் கட்டிய தாலியைத் தானே கழற்றி எறிந்துவிட்டு, தன் மனைவியைக் காதலனுடன் அனுப்பிவைத்துவிடுவான் அந்தக் கணவன். தாலி பற்றிய எந்த வியாக்கியானமும் அங்கே பேசப்படுவதில்லை. மிக இயல்பாக அந்தக் கயிறைக் கணவன் அறுத்துவிடுவான். ஆனால் ‘அந்த ஏழு நாட்க’ளில் கதையே வேறு. அங்கு காதலன் மரபு. பாரம்பரியம், பண்பாடு என்று கதை பேசி, தாலி என்னும் பழமைவாதத்தின் சரடுகளில் முறுக்கேற்றிக் காதலியை அவளுடைய கணவனுடனேயே விட்டுவிட்டு வந்துவிடுவான்.
தாலி செண்டிமெண்ட்
முதலிரவன்றே தற்கொலைக்கு முயன்ற நாயகியை அவளுடைய காதலனுடன் சேர்த்துவைப்பதாகவும் ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளும்படியும் கணவன் கூறுவதில்தான் ‘அந்த ஏழு நாட்கள்’ படமே தொடங்கும். ஆனால், அதன் முடிவோ அதற்கு எதிராக அமைந்திருக்கும். அவள் மீண்டும் தற்கொலைக்கு முயல மாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தாலி செண்டிமெண்ட் என்ற பலமான அஸ்திரத்தை பாக்யராஜ் பயன்படுத்தி க்ளைமாக்ஸை அமைத்துக்கொண்டார். ஆனாலும் இப்போதும் அப்படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் ரசிக்க முடிகிறது. சந்திரபாபுவின் வாழ்க்கைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை என்ற அம்சமும் படத்தின் சுவாரசியத்துக்கு வலுச் சேர்த்திருக்கிறது.
‘புதிய வார்ப்புக’ளில் காதலியும் காதலனும் சேருவதை நியாயமென்று பார்த்த அதே பார்வையாளர்கள்தான் ‘அந்த ஏழு நாட்க’ளில் கணவனுடன் காதலியை விட்டுவிட்டு வரும் காதலனைக் கைதட்டி வரவேற்றார்கள். இந்த இரண்டு படங்களையும் பார்க்கும்போது ‘புதிய வார்ப்புகள்’ இயக்குநரின் படமாகவும் ‘அந்த ஏழு நாட்கள்’ திரைக்கதையாசிரியரின் படமாகவுமே காட்சி கொள்கின்றன.
‘புதிய வார்ப்புக’ளில் கிராமத்து வாழ்க்கையை, அதன் பெரிய மனிதரிடம் காணப்படும் சின்னத்தனங்களை, கிராமங்களில் புரையோடிப் போய்க் கிடக்கும் மூடப் பழக்கவழக்கங்களை எளிய காட்சிகள் மூலம் பாரதிராஜா வெளிப்படுத்துவதில் தென்படும் திரைமொழி நம்மை ஆச்சரியப்படுத்தும். பூக்காரப் பெண்மணி கதாபாத்திரம், சமூக சேவகி கதா பாத்திரம், நாயகியான ஜோதி கதாபாத்திரம் ஆகியவை வெவ்வேறு வகையான பெண்களின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.
சமூக சேவகியின் குடும்பப் பின்னணியை ஒரு கடிதம் மூலமே உணர்த்தியிருப்பார். தாயைக் காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்ற கிராமத்துக்குப் பணிக்கு வரும் அவரது கனவைக் கிராமத்து நிலவுடைமையாளரின் சிற்றின்ப வேட்கை சீரழித்துவிடும். தனது திரைக்கதையில் தமிழ்க் கிராம வாழ்க்கையை, அதன் கீழான மனிதர்களை, அதன் உன்னதங்களைக் காட்சிகளாக மாற்றியதில் பாரதிராஜா தனித்துத் தெரிகிறார்.
ஒரு திரைக்கதையின் அடிப்படை நோக்கம் பார்வையாளர்களின் திருப்திதான். ஆனாலும், சுவாரசியமான, கற்பனையான சம்பவங்களால் மட்டுமே அதை உருவாக்காமல் சமூக அக்கறைக்கும் இடமளித்தால் திரைப்படம் வெறும் கேளிக்கைக்குரியதாக மாறும் அபாயம் தவிர்க்கப்படும். அப்படியான திரைக் கதைகள்தான் காலத்தை வென்று நிற்கும்.
பாரதிராஜா ஓர் இயக்குநர் என்பதற்கேற்பத் தனது திரைக்கதையின் முடிவை அமைத்துக்கொண்டார். கே.பாக்யராஜ் அடிப்படையில் ஒரு திரைக்கதையாசிரியர் என்பதற்கேற்ப அவர் படத்தின் முடிவு அமைந்தது.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in