இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: ஐம்பது ஆண்டுகளாக ஆட்சிசெய்யும் கதை- ஸ்டார் டிரெக் பியாண்ட்

ஆசை

அயல் கிரகங்களைத் தேடி அண்டவெளியை நோக்கிப் பாயும் அறிவியல் புனைவுகள் ஹாலிவுட்டைப் பொறுத்தவரை எவர்க்ரீன் கதைக்களம். வி.எஃப்.எக்ஸ் எனப்படும் கிராஃபிக்ஸ் துறைக்கு மிரட்டலான கற்பனைக் காட்சிகளுக்கு உயிர்தரும் சவாலைத் தரக்கூடிய தொழில்நுட்பப் படங்களின் உலகம்.

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசைக்கு வெறித்தனமாக ரசிகர்கள் உலகம் முழுக்க உருவானதன் பின்னணியில் அயல் கிரகம் பற்றிய மனித மனதின் தேடலே முக்கியக் காரணமாக இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஹாலிவுட்டின் மற்றொரு முக்கியமான தொடர்வரிசைப் படங்களில் ‘ஸ்டார் டிரெக்’ வரிசையும் ஒன்று.

1979-ல் இந்த வரிசையின் முதல் படமான ‘ஸ்டார் டிரெக்: தி மோஷன் பிக்சர்’ வெளியானது. இந்தக் கதைத் தொடரை நிறைவு செய்வதும் பத்தாவது படமுமான ‘நெமிஸிஸ்’ 2002-ல் வெளியானது. தொடரை முடித்துக்கொள்ள மனமில்லாத தயாரிப்பாளர்களான பாராமவுண்ட் பிக்சர்ஸ் இந்தத் தொடருக்குப் புத்தாக்கம் கொடுத்தது. இந்தப் புத்தாக்கத் தொடரின் முதல் படம் ‘ஸ்டார் டிரெக்’ என்ற பெயரில் 2009-ல் வெளியானது.

இரண்டாவது படம் ‘ஸ்டார் டிரெக் இன்டூ டார்க்னெஸ்’ 2013-ல் வெளியானது. புத்தாக்கத் தொடரின் மூன்றாவது படமாகவும், ஒட்டுமொத்தமாக ‘ஸ்டார் டிரெக்’ வரிசையின் 13-வது படமாகவும் ‘ஸ்டார் டிரெக்: பியாண்ட்’ ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற செய்தி ‘ஸ்டார் டிரெக்’ வரிசைப் படங்களின் காதலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2013-ல் இந்தப் படத்துக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கின. ‘ஸ்டார் டிரெக்’கின் முந்தைய படங்களின் இயக்குநர்கள் உட்படப் பலரும் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் ‘ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ படத்தின் இயக்குநரான ஜஸ்டின் லின் தேர்வுசெய்யப்பட்டார். திரைக்கதையை சிமோன் பெக், டக் யூங் ஆகியோர் அமைத்தனர்.

கிறிஸ் பைன், ஸக்காரி க்விண்டோ, பெக், கார்ல் அர்பன் போன்ற முந்தைய படங்களின் நடிகர்களுடன் புதிதாக இட்ரிஸ் எல்பாவும் சோஃபியா பவுட்டெல்லாவும் இணைந்துகொண்டார்கள். 2015 ஜூன் மாதத்தில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்துக்கான முதல் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த கிண்டலைச் சம்பாதித்துக்கொண்டது. அடுத்த டிரெய்லரின் மூலம் அதைச் சரிக்கட்டிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். 1966-ல் தொலைக்காட்சித் தொடராகப் பிறப்பெடுத்த ‘ஸ்டார் டிரெக்’, பிற்பாடு திரைப்பட அவதாரமும் எடுத்தது.

ஆக, ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது ‘ஸ்டார் டிரெக்’. எனவே, ரசிகர்கள் விசேஷமான விருந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அப்படியென்றால் கதை என்ன?

‘ஸ்டார் டிரெக் பியாண்ட்’ படத்தில், கற்பனைக்கு எட்டாத புதிய வழியில் முதன்மைக் கதாபாத்திரங்கள் அண்டவெளிக்கு மேற்கொள்ளும் பயணம், வேற்றுக்கிரகவாசிகளுடனான நல்லுறவு, அவர்களின் எதிரியாக மாறுவது என்று விண்வெளி சாகசங்களில் சாத்தியமுள்ளதாகக் கருதப்படும் சம்பவங்களின் தொகுப்புதான் இதிலும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

யூ.எஸ்.எஸ். எண்டெர்பிரைஸ் என்ற விண்கலத்தின் குழுவினர் ஐந்தாண்டுகள் பயணமொன்றைத் தொடங்குகிறார்கள். பாதி வழியே அவர்களை இனம்புரியாத சக்தி ஒன்று மூர்க்கமாகத் தாக்குகிறது. இதனால் அவர்கள் விண்கலத்தை விட்டுவிட்டு ஏதோவொரு கோளில் தஞ்சம் புகுகிறார்கள். அங்கிருந்து தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லை என்பதுடன் அங்கும் மூர்க்கமான புதிய எதிரி ஒன்றைச் சந்திக்கிறார்கள். இதையெல்லாம் வென்றார்களா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

அதைத் தெரிந்து கொள்வதற்கு ஜூலை 22 வரை காத்திருக்க வேண்டும், அறிவியல் புனைவு விரும்பும் ரசிகர்கள்.

SCROLL FOR NEXT