அஜித்தும் விஜய்யும் அடுத்து நடிக்கும் படங்களில் அவர்களது கதாபாத்திரம் என்ன ‘கெட்அப் என்ன என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். இரண்டு பேருமே இயக்குநர்களை தேர்வு செய்த விதத்தில் எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறார்கள்.
கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. சொந்தப் பட நிறுவனமான ‘ஃபோட்டோன் கதாஸ்’ மூலம் தயாரித்த படங்களும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. திடீர் வழக்குகள், சூர்யாவுடன் இணைய இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்திட்டம் நின்றுபோனது என்று கௌதம் மேனனைச் சுற்றிக் கவலை மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்த நிலையில், அவரை அழைத்து ‘என் படத்தை நீங்கள் இயக்குங்கள்’ என அஜித், கௌதம் மேனனுக்குக் கைகொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே ஒருமுறை அஜித்தும் கௌதம் மேனனும் இணைவதாக இருந்து, பின்னர் கைவிடப்பட்டது. அப்போது, “அஜித் எனக்கு தேவையில்லை” என கௌதம் மேனன் பேட்டியளிக்க அது பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. ஆனால், இது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாத அஜித், தக்க சமயத்தில் தானாகவே முன்வந்து படம் இயக்க வாய்ப்பளித்ததை நெகிழ்வுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.
‘‘உண்மையைச் சொல்லணும்னா அஜித் எனக்கு பெரிய உதவி செஞ்சிருக்கார். வீரம் படம் முடிஞ்சதும் அவர் மூணு பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருந்திருக்கிறார். அதுல என்னோட பேர் இல்ல. ஆனா, என்னோட நிலைமைய தெரிஞ்சுக்கிட்ட அவர், ‘கௌதம் ஃபிரெஷ்ஷா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுங்க... எல்லாத்தையும் பாஸிட்டிவா மாத்திடுவோம்’ என சொன்னது நிச்சயம் மிகப் பெரிய விஷயம்’’ என்று கூறியிருக்கிறார் மேனன்.
அஜித் இப்படிக் கைகொடுக்க முன்வந்த நேரத்தில் கையில் இருந்த அசத்தலான திரைக்கதைதான் தற்போது அவரைக் காப்பாற்றியிருக்கிறது. 15 நாட்களுக்குள் கௌதம் சொன்ன புதிய கதையைக் கேட்டு அஜித் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அவர் வியந்து போனதற்குக் காரணம், அந்தப் படத்தில் அஜித் ஏற்றுக்கொள்ள இருக்கும் புதிய கெட்அப். மங்காத்தாவில் ஆரம்பித்து தனது சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தையே பயன்படுத்தி வந்த அஜித்தை, இந்தப் படத்தின் தோற்றத்தில் தலைகீழாகப் புரட்டிப்போட இருக்கிறாராம் கௌதம் மேனன்.
இந்தப் படத்தின் கெட்அப் வெளியே தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அஜித், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வராமல் தலைமறைவாகவே இருக்கிறாராம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடியோ சாட் மூலம் நண்பர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் அஜித், இனி கௌதம் படம் முடிகிற வறை வீடியோ சாட் செய்ய மாட்டார் என்கிறார்கள் அவரது நண்பர்கள் வட்டதில்.
படத்தில் நடித்திருக்க வேண்டிய அனுஷ்கா இந்தப் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்வது உறுதியாகியிருக்கிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதி படப்பிடிப்பை ஆரம்பிக்கவிருக்கிறது இந்தக் கூட்டணி.