இந்து டாக்கீஸ்

திரைப்பார்வை: வெள்ளை தேவதைகளின் சங்கடங்கள்

மண்குதிரை

ஈராக்கில் 2014-ல் நடந்த உள்நாட்டுப் போரில் கிர்குக் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர். இந்த நகரிலுள்ள அரசு மருத்துவமனைப் பணிக்காக இந்தியச் செவியர்கள் 46 பேர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் செவிலியர்களையும் அவர்கள் சிறைப்பிடித்தனர். இந்தச் செவிலியர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த லெசிமா ஜெரோஸ் மோனிசா தவிர மற்ற அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 23 நாட்கள் நீண்ட இந்தச் சிறைப்பிடிப்புச் சம்பவம், ஒருமாத காலம் அந்த மாநிலத்தின் தலைப்புச் செய்தியாகத் தொடர்ந்தது. மலையாளிகளின் தினசரி சங்கடங்களுடன் ஒன்றாக ஆனது. இந்தச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து அறிமுக இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள படம் ‘டேக் ஆஃப்’.

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள், இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சிறைப்பிடித்துள்ளனர். அவர்கள் யாரும் உயிருடன் நாடு திரும்பியதில்லை. ஆனால் இந்தச் செவிலியர்கள் காயங்கள் எதுவுமின்றி மீட்கப்பட்டனர். இதற்குப் பின்னாலுள்ள காரணங்களை இந்தப் படம் விசாரிக்கிறது. 20-ம் நூற்றாண்டில் கேரளத்தில் செவியர்கள் பெரிய அளவில் உருவாகியதற்குப் பின்னாலுள்ள சமூகக் காரணங்களையும் இந்தக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது.

இந்தப் படம் சமீரா என்னும் இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தை சாரமாக எடுத்துள்ளது. சமீரா, கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். போர்ச் சூழல் கொண்ட ஈராக்குக்குப் போகத் தீர்மானிக்கிறாள். கிர்குக் நகரத்தில் வந்திறங்கும் அவளது தோளில் குடும்பக் கடன், வயிற்றில் புதிய காதலின் பரிசு, நெஞ்சில் மகன் மீதான அன்பு. இவை எல்லாம் போதாது என்று மகேஷ் நாராயணன் மொத்தக் கதையையும் அவள் தலையில் இறக்கிவைக்கிறார். சமீராவாக நடித்திருப்பவர் பார்வதி. அறிவாளிப் பெண்ணுக்குரிய தோற்றத்தைக் கொஞ்சம் களைந்திருக்கிறார். 46 பேர்களில் ஒருவரான கோட்டயம் மரினா ஜோஸ்தான் சமீரா கதாபாத்திரத்துக்கான முன்மாதிரி. உறங்குவதற்குத் தூக்க மருந்து எடுத்துக்கொள்ளும் சமீராவின் கதைதான் படத்தின் முதல் பாதி. இதன் வழியே ‘தெய்வத்தின் தேவதைகள்’ என்ற விளிப் பெயருள்ள செவிலியர்களுக்குப் பின்னாலுள்ள சங்கடங்களைச் சொல்கிறது.

தனியொருத்தியின் பிரச்சினையாகத் தொடங்கிய இந்தப் படம் இரண்டாம் பாதியில் சமூகப் பிரச்சினையாக விருட்சம் கொள்கிறது. காய்ச்சல், தலைவலி, பிரசவம் போன்ற பிரச்சினைகள் கொண்ட எளிய நோயாளிகளை எதிர்கொண்டு பழக்கப்பட்ட செவிலியர்கள், போரால் கை, கால்கள் இழந்து மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. குடும்பக் கஷ்டங்களுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கடமையாற்று கிறார்கள் செவிலியர்கள். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு ஒரு த்ரில்லர் படத்துக்கான தன்மையும் படத்துக்கு வருகிறது.

இந்த மீட்புக் குழுவில் முக்கியப் பங்காற்றிய இந்திய வெளியறவுத் துறை அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்திருக்கிறார். குஞ்சாக்கோ போபனும், ஆசிஃப் அலியும் படம் உருவாக்கியிருக்கும் கற்பனைக் கதாபத்திரங்கள்; சமீராவின் இரு பாதியாக வருகிறார்கள்.

கரும் புகை, குண்டு துளைக்கப்பட்ட கட்டிடங்கள், தணிந்த மண் குகைகள் என ஈராக் போர்க் காட்சிகளைத் தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார் மகேஷ் நாராயணன். ‘விஸ்வரூபம்’ படத்தின் எடிட்டராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். விஸ்வரூபத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் படத்தில் உள்ளன. உண்மைச் சம்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ட்ராஃபிக்’ மலையாளப் படத்திலும் இவர் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார்.

இந்த மீட்புத் திட்டத்தில் வெளியறவுத் துறை அதிகாரி மனோஜ் குமாரும் அன்றைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். இவர்கள் அல்லாது, வளைகுடா நாடுகளில் செல்வாக்குள்ள ஒரு மலையாளித் தொழிலதிபருக்கும் பெரும் பங்கு இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் போராளிகள் குறித்த பொதுக் கற்பனைகளும் இருக்கின்றன. அன்னிய நிலத்தில் பறக்கும் இந்தியக் கொடி தரும் பாதுகாப்பு உணர்வை இந்தப் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மீட்புக்குப் பின்னால் இயங்கிய ‘மலையாளி’ என்ற இன உணர்வையும் சொல்லிச் செல்கிறது.

கள ஆய்வும் கற்பனையும் கொண்டு நிஜ சம்பவத்தை விசாரிக்கும் படம் என ‘டேக் ஆஃப்’ படத்தைச் சொல்லலாம். சமானியர்களின் வாழ்க்கையும் அதில் போர் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பும்தான் படம் கண்டடைந்திருக்கும் முடிவுகள் எனலாம்.

SCROLL FOR NEXT