இசைக் கலைஞர்களின் வாழ்வு பெரும்பாலும் வலி நிறைந்தது என்பதால் அவர்களைப் பற்றிய கதைகளும் துயரம் தோய்ந்த குரலிலேயே சொல்லப்படுகின்றன. மொஸார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லும் ‘அமேடியஸ்’, ப்ளூஸ் இசைக் கலைஞர் ரே சார்லஸின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ரே’ போன்ற படங்கள் இந்த வகையில் முக்கியமானவை.
அந்த வரிசையில் அமெரிக்க நாட்டுப்புற இசைக் கலைஞனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘இன்சைட் லெவின் டேவிஸ்’. ஆப்ரிக்க அமெரிக்கர்களின் ப்ளூஸ் இசை, பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் இசை, குடியேறிய பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சு நாட்டவர் ஆகியோரின் பாரம்பரிய இசை ஆகியவற்றின் கலவையாக வளர்ந்தது அமெரிக்காவின் நாட்டுப்புற இசை. நாடோடிகளான ஜிப்ஸிகளின் இசையில் முக்கியப் பங்கு வகிக்கும் கிட்டார், அமெரிக்க நாட்டுப்புற இசையின் பிரிக்க முடியாத அங்கம் எனலாம்.
1960களில் அமெரிக்க நாட்டுப்புற இசையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் டேவ் வான் ரோன்க். பா டைலான் போன்ற ஜாம்பவான்களுக்குப் பெரிய அளவில் தாக்கம் தந்த இசைக் கலைஞர், பாடகர். இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு புனைவு கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. கிட்டாரைத் தவிரத் தனக்கென எதுவுமில்லாத, சுற்றியிருக்கும் அனைவரிடமிருந்தும் புறக்கணிப்பை மட்டுமே பெற முடிந்த ஒரு இசைக் கலைஞனின் கதை. சோகமான இந்தக் கதையை மெல்லிய நகைச்சுவையுடன் விவரிக்கிறது படம். பனிக்காலத்தில் ஒரு மேலங்கி வாங்கக்கூட வழியில்லாதவன் லெவின் டேவிஸ். வாய்ப்புத் தேடி ஸ்டூடியோக்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் டேவிஸுக்குத் தங்குவதற்கும் நிலையான இடம் கிடைப்பதில்லை. பிறருடன் நட்பைப் பேணுவதில் அவனுக்குச் சிக்கல் இருக்கிறது. பிறரால் வெறுக்கப்படுவதற்கு இது ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது. நண்பனும் சக இசைக் கலைஞனுமான ஜானி பைவ்வும் அவனது மனைவி ஜீன் பெர்க்கியும் டேவிஸுக்கு உதவுகிறார்கள். அதிலும் ஒரு சிக்கல். ஜீனும் டேவிஸும் நெருங்கிப் பழகியதில் அவள் கருவுறுகிறாள். இதற்கிடையே, டேவிஸின் இசை கலந்த காற்றுக்காகவும் ஒரு கதவு திறக்கப்படுகிறது. மெல்லத் மெல்ல தனது இசை வாழ்வில் புகழ்பெறத் தொடங்குகிறான் டேவிஸ்.
கோயென் சகோதரர்கள் இயக்கியிருக்கும் இப்படம், கான் திரைப்பட விழாவில் ‘கிராண்ட் ப்ரிக்ஸ்’ விருதை வென்றுள்ளது. கோயென் சகோதரர்களுக்கு விருதுகள் புதிதல்ல. இதுவரை, மொத்தம் 13 முறை ஆஸ்கர் விருதுகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 4 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கின்றனர். ‘ஃபார்கோ’, ‘நோ கண்ட்ரி பார் ஓல்ட்மென்’, ‘ட்ரூ கிரிட்’, ‘ஓ பிரதர் வேர் ஆர் தோ’ போன்ற படங்களை இவர்கள் இயக்கியிருக்கிறார்கள். ஹாலிவுடின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர்கள். பல்வேறு விதமான கதைக்களங்களைப் படமாக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள். தங்கள் படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், இசைக்கலைஞன் பற்றிய படத்தை எடுத்திருப்பது பொருத்தமானது.
படத்தில் ஆஸ்கர் ஐஸ நாயகனாக நடித்துள்ளார். படத்தின் எல்லாப் பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார். கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் டி போன் பர்னெட் இப்படத்தின் பாடல்களுக்கான இசையைத் தொகுத்திருக்கிறார்.
விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ள இப்படம் டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.