இந்து டாக்கீஸ்

ஷாஹித்
 தொடரும் சந்தேகங்கள்

கோ.தனஞ்ஜெயன்

வானம் (2011) படத்தில் ரஹீமை (பிரகாஷ்ராஜ்) தீவிரவாதியென்று சந்தேகப்பட்டு அவரைத் துன்புறுத்துவார் போலீஸ் அதிகாரி சிவராம் (ரவி பிரகாஷ்). கடைசியில் அவர் ஒரு நல்ல மனிதர் என அவரே உணருவார். படம் பார்த்த யாரும் இந்தத் தருணத்தை மறந்திருக்க மாட்டார்கள். வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஷாஹித் ஆஸ்மி வாழ்நாள் முழுதும் தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்பட்டவர். அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒர் அற்புதமான படம்தான் கடந்த அக்டோபரில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளிய இந்திப்படமான ‘ஷாஹித் - வாழ்க்கைச் சரித்திரம்’.


2012ஆம் ஆண்டு டொரொண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பெரிதும் பாராட்டு பெற்ற இந்தப் படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷியப் தயாரித்து, யூடிவி நிறுவனம் மூலம் வெளியிட்டார். 2010இல் கொலை செய்யப்பட்ட ஷாஹித் ஆஸ்மியின் வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து, ஹன்ஸல் மெஹ்தா எழுதி இயக்கிய படம் இது.


ஷாஹிதின் வாழ்க்கையில் என்ன நடந்தது?


முஸ்லிம் பெயரைத் தாங்கியதாலேயே தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு, தீவிரவாதத்திற்குத் துணை போகிறவராகக் கருதப்படும் ஒருவரின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படம்.


கல்லூரியில் படிக்கும்போது, மூன்று சகோதரர்களோடும் அம்மாவுடனும் ஒரு சேரியில் வசிக்கும் ஷாஹித் (ராஜ்குமார்), 1993இல் நடந்த ஹிந்து - முஸ்லிம் கலவரத்தைப் பார்க்க நேரிடுகிறது. முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளைப் பார்த்துக் கோபம் அடையும் அவன், ஒரு நண்பனின் உதவியால், காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தில் சேருகிறான். அங்கு பயிற்சி எடுக்கும்போது, தீவிரவாத இயக்கம் நடத்தும் அராஜக செயல்கள் பிடிக்காமல், சில மாதங்களில் திரும்பிவிடுகிறான். அவன் அண்ணன் ஆரிஃப் அவனை அரவணைத்து நல்ல பாதையில் செல்ல ஆதரவு தருகிறான். ஆனால் அவன் கடந்த காலம் விரைவில் அவனைப் பிடிக்கிறது.


ஜூலை 1993இல், ஒரு தீவிரவாதியின் டைரி குறிப்பில் ஷாஹிதின் நம்பர் இருக்க, அவனை போலீஸ் கைது செய்கிறது. காஷ்மீர் சென்று பயிற்சி எடுத்தது அவனுக்கு எதிராக நிற்கிறது. தீவிரவாதிகளுடன் தொடர்புகொண்டதை அவன் ஒப்புக்கொள்ள, தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் தீவிரவாதிகளால் கட்டம் கட்டப்பட்ட குலாம்நபி வார்ஸாப் (கே.கே. மேனன்) அவனுக்கு ஆதரவாக இருக்கிறார். பேராசிரியர் சக்சேனாவின் உதவியுடன் ஷாஹித் சிறையில் படித்துப் பட்டம் பெறுகிறான். சிறையிலிருந்து வெளிவரும் வார்ஸாப், ஷாஹிதின் வழக்கை நடத்த, அவன் நிரபராதி என பிப்ரவரி 2000இல் தீர்ப்பு வருகிறது. அவன் விடுதலை அடைகிறான்.


அண்ணன் ஆரிஃபின் உதவியுடன், வேலை செய்துகொண்டே சட்டம் படிக்கிறான். 2003இல் பிரபல வக்கீல் மக்பூல் மேமனிடம் (டிக்மான்ஷு துளியா) வேலைக்குச் சேர்கிறான். கொஞ்ச நாட்களிலேயே தனியாக வக்கீல் தொழிலைத் தொடங்குகிறான். ஆதரவற்றவர்களுக்காக வாதாட ஆரம்பிக்கிறான். பணமே பிரதானம் என மேமன் எடுக்க மறுத்த மரியத்தின் (பிராப்லீன் சாந்து) வழக்கை எடுத்து நடத்துகிறான். மரியத்தின் வழக்கை வெல்கிறான். அவள் மனதையும் கவர்கிறான். விவாகரத்து ஆகி, ஒரு சிறுவனுக்கு அம்மாவான மரியத்தைத் திருமணம் செய்துகொண்டு அவள் வீட்டில் வசிக்க ஆரம்பிக்கிறான்.


ஷாஹித், காட்கோபார் வெடிகுண்டு நாச வழக்கில் பல மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாஹீரின் வழக்கை எடுத்து வாதாடுகிறான். நிரபராதியான ஜாஹீர் செய்ததெல்லாம், தன் நண்பனுக்கு லாப்டாப்பைக் கொடுத்தது மட்டுமே. அந்த லாப்‌டாப்பின் மூலம் நண்பன் தீவிரவாதத் தன்மை கொண்ட மின்னஞ்சலை அனுப்பியதற்கு ஜாஹீரைச் சிறையில் அடைத்தது தவறு என வாதிடுகிறான். ஜாஹீர் நிரபராதி என விடுவிக்கப்படுகிறான். ஷாஹிதீன் திறமையை அனைவரும் பாராட்ட, மேலும் பல வழக்குகளை எடுத்து நடத்துகிறான், தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காகப் போராடுபவனாக உருவாகிறான். 7 ஆண்டுகளில், 17 வழக்குகளில், தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கிறான்.


மும்பையில் நடந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக பாஹீம் கான் கைது செய்யப்படுகிறான். தீவிரவாதிகளுக்கு வரைபடம் தந்து உதவி செய்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில், தன் திறமையான வாதங்களை ஷாஹித் எடுத்து வைக்க, அரசின் வாதங்கள் பலவீனமாகின்றன. இந்த வழக்கிலிருந்து வெளியேற ஷாஹிதுக்கு மிரட்டல்கள் வர, மரியம் பயந்துபோய் தன் மகனுடன் வெளியேறுகிறாள். பயப்படாமல் வழக்கைத் தொடரும் ஷாஹித், அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்படுகிறான். ஷாஹிதின் நண்பன் பாஹீமின் வழக்கை எடுத்து நடத்துகிறான். பாஹீம் விடுவிக்கப்படுகிறான். ஷாஹிதின் போராட்டம் வெற்றி அடைகிறது.

படத்தின் சிறப்புகள்


ஹன்ஸல் மெஹ்தா மிகவும் உண்மையாகப் படைத்திருப்பதுதான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். எந்த சினிமாத்தனமும் இல்லாமல், வணிக சமரசங்கள் செய்யாமல், உண்மைகளை அழகாகவும் நேர்த்தியாகவும் துணிவுடனும் படைத்திருக்கிறார்.


போலீஸ் அடக்குமுறைகள், சிறைச்சாலை நிகழ்வுகள், நீதிமன்ற வழக்காடுகள், மரியம் மீது ஷாஹித் கொள்ளும் அன்பு, அண்ணனுக்கும் தம்பிக்கும் நடுவில் உள்ள அன்பு என எல்லாமே மென்மையாகவும் நம்மைக் கலங்க அடிப்பதாகவும் இருக்கின்றன.


ராஜ்குமாரின் நடிப்பு மிகவும் அற்புதம். ஃபில்ம்ஃபேரின் சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருதை 2013ஆம் ஆண்டுக்கு இப்படத்திற்காக அவர் பெற்றது மிகவும் பொருத்தம். பாத்திரத்தின் குணங்களை நன்கு உள்வாங்கி, அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 


ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவில், ஒன்பது மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஊடகங்களின் பாராட்டுக்களுடன், வணிக வெற்றியும் பெற்றது. இந்தப் பாராட்டுக்களும் வெற்றியும், தன் வாழ்க்கையைச் சொல்லாமல் விட்டுச் சென்ற ஷாஹித் ஆஸ்மியின் மீது தவறாகக் களங்கம் கற்பித்தவர்களுக்கு ஹன்ஸல் மெஹ்தாவின் சிறந்த பதிலடி என்று சொல்லலாம்.


dhananjayang@gmail.com

SCROLL FOR NEXT