இந்து டாக்கீஸ்

மகளிர் தின சிறப்புக் கட்டுரை: சவுக்குடன் நுழைந்த புரட்சிப் பெண்

பா.ஜீவசுந்தரி

சாந்தா ஆப்தே நூற்றாண்டு நிறைவு

புன்னகை தொலைத்த, மென் சோகம் கப்பிய கண்கள் என்றாலும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோழமை மிக்க தோற்றத்துடன் ‘தோனி’என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார் ராதிகா ஆப்தே என்ற மராத்தி நடிகை. அதன் பிறகு வெற்றியின் வெளிச்சம் எட்டாத பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி பட நாயகியாக ‘கபாலி’யில் குமுதவல்லி கதாபாத்திரம் ஏற்று நடித்த பிறகே தமிழ் ரசிகளுக்குப் பரிச்சயமானார். இன்றைய ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு 75 ஆண்டுகளுக்கு முன்பாகவே வேறொரு ஆப்தே நடிகை தமிழ்ப் படத்தில் நாயகியாக, அதிலும் சொந்தக் குரலில் பாடி நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியம். அவர் சாந்தா ஆப்தே. இன்றைய தலைமுறையினர் அறியாத ஒரு பெயர்.

முதல் வட இந்தியக் கதாநாயகி

வட இந்தியாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வரும் போக்கிற்க்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் நடிகை இவர். 1930-களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், வெள்ளிவிழா கண்ட பல மராத்தி, இந்திப் படங்களில் நடித்து வட இந்தியாவில் பெரும்புகழுடன் ஜொலித்துக் கொண்டிருந்தபோதே அவரைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் முதுபெரும் இயக்குநர் ஒய்.வி.ராவ். 1941-ம் ஆண்டில் வெளியான ‘சாவித்திரி’படத்தை இயக்கி, சத்தியவானாக நடித்தவர். அந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாந்தா ஆப்தேவைத் தேர்வு செய்தார்.

இரவல் அல்ல; அசல் குரல்

இன்றுவரை இங்கே மனம் கவர்ந்த வட இந்தியக் கதாநாயகிகள் பலரும் டப்பிங் கலைஞர்களின் இரவல் குரல் புண்ணியத்தாலேயே தமிழ்த் திரையில் பெரும்புகழைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது சாந்தா ஆப்தே பெரும் சாதனையாளர் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மொழி தெரியாவிட்டாலும் தன் கடும் முயற்சியால் அதை நிகழ்த்திக் காட்டினார். தமிழில் ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்தார். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருப்பாரேயானால், பெரும் சாதனைகளைத் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தியிருப்பார்.

‘சாவித்திரி’ படத்தில் நடிப்பதற்கு ஓராண்டு காலம் தமிழ் எழுதவும் படிக்கவும் பயிற்சி பெற்றார். அவருக்குப் பயிற்சி அளித்தவர் வசனகர்த்தாவான வடிவேலு நாயக்கரும், பூனாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் ஆவர். இந்தப் பெண்மணி சென்னை மயிலாப்பூரிலிருந்து திருமணமாகி பூனாவுக்குச் சென்றவர். இவர்கள் இருவரும் அளித்த பயிற்சியுடன், சாந்தா ஆப்தேவின் கடுமையான உழைப்பு, ஆர்வம் இரண்டும் ஒருங்கிணைந்ததால் ‘சாவித்திரி’படத்துக்காக பாபநாசம் சிவன் எழுதிய பத்து பாடல்களில், எட்டுப் பாடல்களை சாந்தா ஆப்தே பாடியிருக்கிறார். படம் முழுவதும் சொந்தக் குரலில் தமிழ் பேசி நடித்திருக்கிறார்.

கைமாறி வந்த வாய்ப்பு

‘சாவித்திரி’ படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தவர் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. சாவித்திரி வேடத்தில் நடிப்பதற்காக ராயல் டாக்கீஸார் முதலில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைத்தான் அணுகியிருக்கிறார்கள். ‘சகுந்தலை’ படத்துக்குப் பின் எம்.எஸ்.சுப்புலட்சுமி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் தீர்மானமாக இருந்தார். சதாசிவத்துடன் அப்போதுதான் அவருக்குத் திருமணமும் முடிந்திருந்தது. இதனால் வந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதனால் சாவித்திரியாகும் வாய்ப்பு சாந்தா ஆப்தேவுக்குப் போய்ச் சேர்ந்தது.

1916-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் துத்னியில் பிறந்த சாந்தாவின் தந்தை பிரிட்டிஷ் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றினார். நல்ல இசை ரசனை கொண்டவர். பணி நிமித்தம் குடும்பம் பந்தர்பூருக்கு இடம்பெயர்ந்தது. அங்கே வளர்ந்த சாந்தா, தனது தந்தையால் ‘மஹாராஷ்டிர சங்கீத் வித்யாலாயா’வில் சிறு வயதிலேயே சேர்க்கப்பட்டார். சாந்தாவின் பாடும் திறன் அவர் சிறு வயதிலேயே சினிமா நட்சத்திரம் ஆகக் காரணமாக அமைந்தது.

‘அமர்ஜோதி’யில் மிளிர்ந்த திறமை

அவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்கள். 1936 -ல் சாந்தராம் இயக்கிய ‘அமர்ஜோதி’ அவரின் திரையுலக வாழ்வில் முக்கியமான ஒரு படம். இந்தியின் முதல் வெள்ளி விழாப் படமும் கூட. அந்தப் படத்தில் இளவரசி நந்தினியாக சாந்தா ஆப்தே ஏற்றிருந்த வேடம் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இந்தக் குணங்களைப் புறந்தள்ளிய பெண்ணாக அவர் மிக இயல்பாக அந்தப் படத்தில் நடித்திருப்பார்.

தன் வாழ்வில் முதல்முறையாகப் பார்க்கும் அறிமுகமற்ற இளைஞன் ஒருவனிடம் கூட நீண்ட நாள் பழகியதைப் போல குறும்பும், எள்ளலும் தொனிக்க அவர் பேசுவதும், பாடுவதுமாக அந்தக் காட்சியையே இளமைத் துள்ளல் மிக்கதாக மாற்றியிருப்பார். சொந்தக் குரலில் மரங்களடர்ந்த கானகப் பகுதியில் மனிதர்களுடன் உரையாடும் பாவனையில் மரம், செடி, கொடிகள் மற்றும் பறவைகளுடன் உரையாடுவது போல் சொந்தக் குரலில் அவர் பாடும் ‘சுனோ சுனோ பன் கி ப்ரனி’ பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நாட்டின் விடுதலை வேண்டிப் போராடும் காட்சிகளிலும் வீரம் தொனிக்க அவர் பேசும் வசனங்களும் நடிப்பும் என்றும் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை.

1932-ல் வெளியான ‘ஷியாம் சுந்தர்’ படத்தின் மூலம் இந்திப்படவுலகில் அறிமுகமாகி ‘சிங்கிங் ஸ்டார்’என்ற அந்தஸ்தைப் பெற அவரது குரலும் பாடும் திறனும் இயல்பான நடிப்பும் அவரை வெகுவிரைவாகப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றன. சாந்தாவின் திறன் கண்டு மராத்திப் படவுலகமும் அவரை ஆரத் தழுவிக்கொண்டது. மராத்தி, இந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரான ‘துனியா நா மனே’ படத்தில் வயதான ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் பாத்திரத்தில் நடித்துப் பெரும்புகழ் பெற்றார். அந்தப் படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ளார்.

குதிரையில் வந்த வீராங்கனை

1930-களில் தொடங்கி 40-கள் வரையிலும் அவரது இனிய குரலில் அமைந்த பாடல்களும் அவர் நடித்த படங்களும் நாடு முழுவதும் புகழ்பெற்றன. இந்தித் திரையுலகின் ‘புரட்சிப் பெண்’ என்றும் கொண்டாடப்பட்ட அவர் தாம் ஏற்ற கதாபாத்திரங்களால் மட்டுமல்ல, அசல் வாழ்க்கையிலுமே அவர் துணிச்சல் நிறைந்தவராகவே இருந்திருக்கிறார். பிரபாத் ஸ்டூடியோஸ் தன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு விரோதமாகச் செயல்படுவதாக எண்ணிய ஆப்தே, ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து சாந்தா ஆப்தே விலகியதும், ஸ்டுடியோவின் தூண்டுதலால் பாபு ராவ் படேல், தனது ‘ஃபிலிம் இந்தியா’ இதழில் ஆபாசமாகவும் அவரது கண்ணியத்தைக் குறைக்கும் விதமாகவும் எழுதி வந்தார்.

வீரம் மிக்க ஒரு மராத்திய பெண்ணாகக் குதிரையேற்ற வீரரைப் போல் கையில் சவுக்குடன் உடையணிந்து அந்த அலுவலகத்துக்குச் சென்ற சாந்தா ஆப்தே, ஆறு முறை வரிவரியாக விளாசியதாக மறைந்த எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான சாதத் ஹசன் மண்டோ தனது ‘Stars From Another Sky’ என்ற நூலில் எழுதியுள்ளார். இதன் பிறகுதான் அவர் தமிழில் ‘சாவித்திரி’ படத்தில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT