இந்து டாக்கீஸ்

புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?

கா.இசக்கி முத்து

தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் தமிழ்த் திரையுலகைப் பல்வேறு பிரச்சினைகள் ஆட்டிப் படைக்கின்றன. அவற்றின் மீதும் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினரிடம் எழுந்துள்ளது. திரையுலகை ஆட்டிவைக்கும் பிரச்சினைகள் பற்றித் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான ஆளுமைகள் பலரிடம் பேசினோம். அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்:

திருட்டு வீடியோ

ஒரு புதிய படம் வெளியாகிறது என்றால் வெளியான தினத்தன்றே இணையதளங்களில் (TORRENT ) அப்படத்தின் திரையரங்க வடிவம் கிடைக்கிறது. அடுத்த 2 நாட்களில் அசல் பிரதி கிடைக்கிறது. மத்திய அரசிடம் பேசி அந்த இணையதளங்களையெல்லாம் எந்த வகையில் கட்டுப்படுத்தலாம் என்று ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

டொரண்ட் இணையதளங்களில் வெளியாகும் பிரதியை வைத்துத்தான் திருட்டு டி.வி.டி. தயாராகிவருகிறது. எந்தத் திரையரங்கிலிருந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்பதைத் திரையுலகினர் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதற்காக நடிகர் சங்கச் செயலாளர் விஷால் உட்படத் தொடர்ந்து பல பிரபலங்கள் போராடியும் வருகிறார்கள். இதற்கான நடவடிக்கையை எடுக்கப் புதிய அரசாங்கம் தற்போது உள்ள சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். இவற்றைக் கட்டுப்படுத்தினால் தயாரிப்பாளருக்கு மேலும் வருவாய் வர வாய்ப்பிருக்கிறது.

டிக்கெட் விற்பனை

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் மால் திரையரங்குகளில் உள்ளதைப் போலத் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் கணினியில் டிக்கெட் பதிவு முறையைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் ஒரு படத்தின் வசூல் என்ன என்பது தயாரிப்பாளருக்குத் துல்லியமாகத் தெரிந்துவிடும். தற்போது ஒருசில திரையரங்குகளைத் தவிர தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் டிக்கெட் விற்பது கிடையாது.

தற்போது அதிக பொருட்செலவில் தயாராகும் படங்கள் வெளியாகும்போது போட்ட பணத்தை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதால் தயாரிப்பாளர்களே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வதாகத் தெரியவருகிறது. மேலும், பல்வேறு திரையரங்குகளில் அதிகமாக இருக்கும் டிக்கெட் விலையால் அடித்தட்டு மக்கள் இவ்வளவு பணம் கொடுத்துத் திரையரங்கில் படம் பார்ப்பதற்கு பதிலாக, 30 ரூபாய் கொடுத்தால் திருட்டு டி.வி.டி. கிடைக்கிறது என்று வீட்டிலேயே படத்தைப் பார்த்துவிடுகிறார்கள் என்பதே நடைமுறை என்கிறார்கள்.

திரையுலக விருதுகள்

திரைத் துறையினருக்கு வழங்கும் விருதுகளைக் கடந்த 8 வருடங்களாகத் தமிழக அரசு வழங்கவே இல்லை. 2008-ல்தான் தமிழக அரசு விருதுகள் கடைசியாகக் கொடுக்கப்பட்டன. விருதுகள் அளிக்கப்படும்போது சிறுமுதலீட்டுப் படங்களுக்கு மானியம் கொடுக்கப்படும். அதுவும் கொடுக்கப்படாமலே இருக்கிறது. தற்போது உள்ள புதிய அரசு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் விருதுகளை அறிவித்துத் திரையுலகக் கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.

காணவில்லை

இந்தியாவில் உள்ள திரைத் துறைகளிலேயே, தமிழ்த் திரையுலகம் மட்டுமே ஒரு நிலையான இடத்திலேயே இல்லை. ஏ.வி.எம்., ஆஸ்கர் பிலிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டன. காரணம், நடிகர், நடிகைகள் சம்பளத்திலிருந்து படப்பிடிப்புச் செலவு வரை அனைத்துமே வெகுவாக உயர்ந்தப்பட்டுவிட்டன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்குத் திரையுலகம் மாறிவிட்டாலும் பொருட்செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் 8 கோடிக்குப் படம் தயாரித்து, அதன் மூலம் 2 கோடி லாபம் அடைகிறார் என்றால் அடுத்த படத்தை 15 கோடிக்குத் தயாரிக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டவுடன் காணாமல் போய்விடுகிறார். உண்மையில் முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்கத் தற்போது தயாரிப்பாளர்கள் அதிகம் இல்லை. நடிகர்களே சொந்தமாகப் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தேக்க நிலை ஏற்படும் என்பது நிதர்சனம்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, முன்னணித் தயாரிப்பாளர்களை அழைத்துக் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலமாக நெறிமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று திரைத் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

வரிச் சலுகை

ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்துத் தணிக்கை முடித்தவுடன்தான் வரிச் சலுகை பிரச்சினை ஆரம்பிக்கிறது. படத்தில் ஆங்கில வசனங்கள் இருக்கின்றன, படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறது, வன்முறை அதிகமாக இருக்கிறது, தணிக்கையில் U/A, A சான்றிதழ் போன்ற காரணங்களால் வரிச் சலுகையை ரத்துசெய்துவிடுகிறார்கள். மேலும், எதிர்க்கட்சிக்காரர்கள் தயாரிக்கும் படங்கள் என்றால் எந்த வகையில் வரிச்சலுகையை ரத்துசெய்யலாம் என்று புதிதாகக் காரணம் தேடுவதாகக் கூறுகிறார்கள் அனுபவப்பட்ட பலர். அவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்.

அவர் நடிப்பில் வெளியான ‘மனிதன்' படத்துக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். படத்தின் தலைப்பாக உள்ள 'மனிதன்' என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல என்று வரிச்சலுகையை ரத்துசெய்ததாக வரிவிலக்குக் குழு தரப்பில் காரணம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், சில காலத்துக்கு முன்பு ஏ.வி.எம். நிறுவனம் தங்களது பழைய படங்களின் மறுவெளியீட்டுக்கு வரிச் சலுகைக்குப் பதிவுசெய்தபோது அவர்களது படமான 'மனிதன்' படத்துக்கு வரிச்சலுகை கொடுத்ததும் இதே வரிச் சலுகைக் குழுதான் என்பதாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தமிழ்த் திரையுலகினரிடம் பேசியபோது, “அரசாங்கம் இந்தக் குழுவைக் கலைத்துவிட்டு அனைத்துப் படங்களுக்கும் 10% வரி என்று அறிவித்துவிட வேண்டும். அதனைக் கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். வரிச் சலுகைக்குப் பதிவுசெய்து, அதிகாரிகள் பார்த்து, சான்றிதழ் வாங்கி முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுகிறோம்” என்று ஆதங்கப்படுகிறார்கள்.

“புதிய அரசு கருணையுடன் இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு காண முயன்றால், இந்திய அளவில் தமிழ் சினிமா இன்னும் பிரகாசமாக ஒளிரும் என்பதில் சந்தேகமில்லை” என்று கெஞ்சும் விதமாகக் கோரிக்கை வைக்கிறார்கள் திரைத்துறையினர்.

SCROLL FOR NEXT