இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: குடும்பமும் த்ரில்லரும்

ஆர்.சி.ஜெயந்தன்

‘அரசு’, ‘கம்பீரம்’ உட்படப் பல படங்களை இயக்கிய சுரேஷ் சண்முகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ஜே.கே, ஜாகீன் கதாநாயர்களாக அறிமுகமாக, ‘தர்மதுரை’, ‘றெக்க’ படங்களில் விஜய் சேதுபதியின் தோழியாகவும் தங்கையாகவும் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஜெயன், தேவதர்ஷினி, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

“கால் டாக்ஸி ஓட்டுநரான திருப்பதிசாமி, தனது மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். திருப்பதிசாமியின் மகன்கள் சந்திக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று, அந்தக் குடும்பத்தின் அமைதியை அடியோடு புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை ஒரு குடும்ப த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.

வாள் வீச்சும் சிலம்பமும்

சுந்தர்.சி இயக்கவிருக்கும் பிரம்மாண்டப் படமான ‘சங்கமித்ரா’ வில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதற்காகப் படக் குழுவினரால் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், அங்கே ஆங்கில முறைப்படி வாள் வீச்சுப் பயிற்சி எடுத்துவருகிறார். இதற்கிடையில் சமந்தா சென்னையில் முழுவீச்சில் சிலம்பம் கற்றுவருகிறார். அந்த வீடியோவைத் தனது முகநூல் பக்கத்தில் தரவேற்றி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். ஆனால் எந்தப் படத்துக்காக இந்தப் பயிற்சி என்பதை அவர் குறிப்பிடவில்லை.

வெயிலுக்கு ஏங்கும் வில்லன்

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு பனி படர்ந்த பல்கேரியா நாட்டில் நடந்துவருகிறது. இதில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விவேக் ஓபராய். பல்கேரியாலில் இருந்தபடியே தாம் வெயிலுக்கு ஏங்குவதாக ட்வீட் செய்திருக்கிறார் விவேக். “இங்கு கடும் குளிர்! கொஞ்சம் சூரிய ஒளியையும், கொஞ்சம் அன்பையும் அனுப்பி வையுங்கள்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட நேரம்போலும்; ‘பாகுபலி’யின் நாயகன் பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக ஒப்பந்தமாகிவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்து வரும் ‘விவேகம்’படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

மீண்டும் நிகிஷா

பிரிட்டிஷ் – இந்தியப் பெண்ணான நிகிஷா படேல், பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தார். அழகும் திறமையும் இருந்தும் ஏனோ அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. என்றாலும் ‘என்னமோ ஏதோ’, ‘நாரதன்’ஆகிய படங்கள் அவரைத் திறமையானவராக அடையாளம் காட்டின. கிடைத்தவரை லாபம் என அலைபாயாமல் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறாராம். தற்போது இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு நடித்துவரும் ‘7 நாட்கள்’, ‘100 டிகிரி செல்சியஸ்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

ஜீன்ஸ் போட்ட மந்திரவாதி

`கடுகு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கதைத் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் பரத், மாறுப்பட்ட கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘பொட்டு’. இதில் இனியா, சிருஷ்டி டாங்கே, நமீதா என மூன்று கதாநாயகிகள். இந்த மூவரில் நமீதாவுக்கே மிரட்டலான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான். ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ’சவுகார்பேட்டை’ படங்களின் இயக்குநர். “கொல்லி மலையைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆனால் அவர் மர்மமான முறையில் கொலையாகிறார். கொலையான அந்தப் பெண் திரும்பவும் எந்த உருவத்தில் வந்து பழி தீர்க்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்த மாடர்ன் மந்திரவாதியாக நமீதா நடித்திருக்கிறார். அவருக்கு இந்தக் கதாபாத்திரம் திருப்புமுனையாக அமையும்” என்கிறார் இயக்குநர்.

SCROLL FOR NEXT