கற்பனைகளையும் சாகசங்களையும் குழைத்து உருவாக்கப்படும் வரலாற்றுப் படங்களுக்கு உலகெங்குமே வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் ரசிகர்களுக்குப் பெரும் தீனி போட வருகிறது ‘தி கிரேட் வால்’ என்ற பிரம்மாண்டமான சாகசங்கள் நிறைந்த படம்.
சீன, அமெரிக்க சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலக அதிசயமான சீனப் பெருஞ்சுவரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. நம்ப முடியாதக் கற்பனையைக் கலந்து ஹாலிவுட்டுக்கே உரிய பிரம்மாண்டக் காட்சியமைப்புகளுடன் சாகசப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் களிம்பேறிய சீனப் பெருஞ்சுவர் கதைக்களம் என்பதால் கதையின் காலமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நகர்கிறது.
ஐரோப்பாவைச் சேர்ந்த கூலிப்படை வீரனான நாயகன் (டாமன் மேட்) தன் நண்பனுடன் சீனா வருகிறார். அவர்களைப் பிடித்துச் சீனப் பெருஞ்சுவரில் சிறை வைக்கிறார்கள். சிறைப்படுத்தப்பட்ட பிறகு, சீனப் பெருஞ்சுவருக்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே அன்னியக் கொள்ளையர்களால் சீனப் பெருஞ்சுவர் முற்றுகையிடப்படுகிறது. நம்ப முடியாத அளவுக்கு மனிதத் திரள் அலை அலையாக வந்து பெருஞ்சுவரைத் தாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் சீனப் பேரரசர் தவிக்கிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாயகனின் திறமையை அறிந்து, அவரது உதவியை அவர் நாடுகிறார். அவர் களம் இறங்கிய பிறகு அந்த முற்றுகை எப்படி முறியடிக்கப்படுகிறது, அந்தச் சிறை வீரன் கண்டுபிடித்த மர்மம் என்னவானது போன்றவற்றுக்கு விடையைச் சொல்கிறது ‘தி கிரேட் வால்’
கிராபிக்ஸ் உதவியுடன் சீனப் பெருஞ்சுவர் முற்றுகைக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும், நம்ப முடியாத அளவுக்கு காட்சிக் கற்பனையை விரித்திருக்கிறாராம் இயக்குநர். காட்சிகள் கண்களை அகல விரிய வைக்கின்றன. கதையையும், திரைக்கதையையும் ஹாலிவுட்காரர்கள் கவனித்துக்கொள்ள, சீனாவின் புகழ் பெற்ற சாங் இமோயு இயக்கியுள்ளார். சீனப்பெருஞ்சுவர், அமெரிக்கா ஆகிய இரு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரிலேயே சீனாவில் வெளியாகிப் பல மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கும் இந்தப் படம், இந்தியா உட்படப் பிற நாடுகளில் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.