இந்து டாக்கீஸ்

தேடல்களின் சாகசங்கள்

மண்குதிரை

வாழ்க்கை, தேடல்களின் தொகுப்பாக இருக்கிறது. ஆயுள் முழுமைக்கும் ஏதோ ஒன்றைத் தேடி வாழ்க்கை அலையவைத்துக்கொண்டே இருக்கிறது. இவை சுவாரஸ்யமான சாகசங்கள். ஆனால் அத்தருணத்தில் நம்மால் அவற்றை அவ்வளவு உவப்பாக எதிர்கொள்ள முடிவதில்லை. தேடல்களும் இழப்புகளும் வாழ்வின் பெரும் துயரங்களாகத்தான் நம்மைச் சூழ்கின்றன.

The Edge of Heaven ஜெர்மானியப் படத்தில் ஆறு கதாபாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை ஒருவரைத் தேடி ஒருவரை அலையவைக்கிறது. அன்பு, குற்ற உணர்வு, தோழமை, புரட்சி, அரசியல், காமம் என எல்லா விதமான உணர்வுகளுடனும் அந்தத் தேடல்கள் விரிவு கொள்கின்றன. வாழ்வின் இந்த முனையில் உள்ள ஒருவர் மறுமுனையில் உள்ளவரைத் தேடி அலைகிறா்ர். இந்தத் தேடல்களின் வழியே நிகழும் இரு மரணங்கள் மூலம் திரைக்கதையை இரு பகுதிகளாக்கியிருக்கிறார் இயக்குநர் ஃபெய்த் அகின். இரு பகுதிகளின் காட்சிகளில் பாத்திரங்கள் விலகிச் செல்லும்போது திரைக்கதையோட்டத்தில் ஒரு புதிய அலை எழுகிறது.

உதாரணமாக யெட்டர் தன் மகளைப் பற்றி நெஜாட்டுடன் பேசும்போது அவள் மகள் அய்டன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறாள். அகின் ஜெர்மன் - துருக்கி என இருமொழிப் பண்பாட்டுப் பின்புலம் உடையவர். இப்படம் அவ்வகையான கலாசாரச் சிக்கலையும் பதிவுசெய்கிறது.

நெஜாட், துருக்கியில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் இரண்டாம் தலைமுறை இளைஞன். ஜெர்மன் மொழிப் பேராசிரியராகப் பணியாற்றுபவன். தந்தை அலியுடன் ஜெர்மன் நகரம் ஒன்றில் வசிக்கிறான். அலி மனைவியை இழந்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தனிமையின் வெற்றிடத்தை நிரப்ப யெட்டர் என்னும் பாலியல் தொழிலாளியை நாடிச் செல்கிறார். அவளைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறார். யெட்டர் துருக்கியைச் சேர்ந்த இஸ்லாமியர். இந்தத் தொழிலைச் செய்வதால் இஸ்லாமியர்கள் இருவரால் ஏற்கனவே அவளுக்கு நெருக்கடி இருக்கிறது. யெட்டருக்குத் துருக்கியில் படித்துக்கொண்டிருக்கும் தன் மகளுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இச்சூழலில் அலியின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறாள். நெஜாட் தந்தையின் பலவீனங்களைச் சகித்துக்கொள்ள முயல்கிறான். அலி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது யெட்டருக்கும் நெஜாட்டுக்கும் இடையே தோழமை உருவாகிறது. தன் மகளையும் பேராசிரியராக்க வேண்டும் என்கிறாள். ஆனால் இவர்களின் நட்பை அலி சந்தேகத்துக்குள்ளாக்குகிறார். இதனால் உருவாகும் சண்டையில் யெட்டர், அலியால் கொலை செய்யப்படுகிறாள். அலி சிறை செல்கிறார். யெட்டரின் மகளுக்கு உதவ அவளைத் தேடி நெஜாட் துருக்கிக்குப் பயணமாகிறார்.

இது ஒரு பகுதி. இங்கிருந்து இயக்குநர் திரைக்கதையை வேறு விதமாகச் சுழற்றுகிறார். அதில் போராளிக் குழுச் செயற்பாட்டாளரான யெட்டரின் மகள் அய்டன் ஜெர்மனுக்குத் தப்புகிறாள். தாயின் தொடர்பு எண்ணைத் தொலைத்து அவளைத் தேடி அலைகிறாள். அய்டனுக்கு லொட்டீ என்னும் ஜெர்மனிய இளம் பெண் அடைக்கலம் தருகிறாள். அவளுக்குப் போராளிகளுக்குரிய காத்திரத்துடன் இருக்கும் அய்டனைப் பிடித்திருக்கிறது. இவருக்குமான உறவு உடல் ரீதியாகவும் வளர்கிறது. இது லொட்டீயின் தாய் சூசன்னேக்குப் பிடிக்கவில்லை.

இச்சமயத்தில் அய்டன் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறாள். தாயின் எதிர்ப்பையும் மீறி அவளைத் தேடி லொட்டீயும் துருக்கி செல்கிறாள். அங்கு எதிர்பாராத விதமாக அவள் கொல்லப்படுகிறாள். மகளின் நினைவுகளைப் பின்பற்றித் தாயும் செல்கிறாள். யெட்டரின் மகளைக் கண்டுபிடிக்க முடியாத நெஜாட், விடுதலைக்குப் பிறகு தன் தந்தை இருக்கும் துருக்கி நகருக்குச் செல்கிறான். தன் தந்தைக்காகக் கடற்கரையில் காத்திருக்கிறான். வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதுபோல அவன் விரிந்து கிடக்கும் கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

திரைக்கதைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படம் கான் உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT