இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: உரு

இந்து டாக்கீஸ் குழு

ஓர் எழுத்தாளர் தனது படைப்புக்காக உருவாக்கும் சைக்கோ கில்லர் கதாபாத்திரம், நிஜமாகவே உருப்பெற்று, மனிதர்களை கொல்வதுதான் உருவின் கரு!

நாயகன் கலையரசன், மேகமலையில் அமைந் துள்ள ஒரு வீட்டில் தங்கி தன் புதிய திகில் நாவலை எழுதத் தொடங்குகிறார். கதையின் முதல் அத்தியாயத்தில், முகமூடி அணிந்த மர்ம மனிதனைக் குறித்து அவர் எழுதிக்கொண்டி ருக்கும்போது, நிஜத்தில் அப்படி ஒரு முகமுடிக் காரன் ஜன்னலுக்கு வெளியே நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் நுழைந்து கலையரசனைக் கொல்ல முயற்சிக்கும் போது, அவரது மனைவி சாய் தன்ஷிகா வந்து விடுகிறார். அவரைப் பார்த்ததும் முகமூடிக்காரன் மறைந்துகொள்கிறான்.

பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் சாய் தன்ஷிகாவைக் கொல்ல வருகிறான். அந்த ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் அவரை அடுத்த ஐந்து மணிநேரத்தில் கொன்றுவிடு வதாக நேரம் குறிக்கிறான். யார் இந்த முகமூடிக் கொலைகாரன், இந்தக் கொலை விளையாட்டில் இறுதி வெற்றி யாருக்கு என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ‘உரு’ படத்தின் கதை.

கடந்த ஆண்டு வெளியான ‘ஹஷ்’ (HUSH) என்ற ஆங்கிலப்படத்தின் மறுவடிவாக்கம்தான் ‘உரு’. எழுத்தாளர் எழுத எழுத அதே நிகழ்வுகள் இன்னொரு இடத்தில் நடப்பது வேறு சில படைப்புளிலும் எடுத் தாளப்பட்ட கருதான். இதை தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஏற்ற விதத் தில் எடுத்தாண்டிருக்கும் விதம் ஈர்க்கவே செய்கிறது.

அறிமுக இயக்குநரான விக்கி ஆனந்த், மிகச்சிறந்த படக்குழுவை தேர்வு செய்து அவர்களை முழுமை யாக வேலை வாங்கியிருக்கிறார். நம்பிக்கை தரும் புது வரவு!

கலையரசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். அவரைவிட அதிகம் கவனிக்க வைப்பவர் சாய் தன்ஷிகா. கொலைகாரனிடமிருந்து ஓடி ஒளிவது, அடிபட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் தப்பித்தலைப் பற்றி சிந்திப்பது, அதை உடன் செயல்படுத்துவது என்று அவர் காட்டும் துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நல்ல விறுவிறு.

மேகமலையின் கொள்ளை அழகை பிரசன்னா.எஸ்.குமாரின் கேமரா பதிவு செய்த விதம் அருமை. படம் இருளிலேயே நகரும்போதும் காட்சி அமைப்புகள் நேர்த்தி.

கிருஷ்ணன் சுப்ரமணியனின் ஒலி வடிவமைப்பு பயத்துக்கு பயம் சேர்க்க்கிறது. ஜோக னின் பின்னணி இசையை குறை சொல்ல முடியாது.

த்ரில்லர் படம் என்பதாலேயே நகைச்சுவை மற்றும் பாடல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது சாமானிய சினிமா பிரியர்களை படத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. கதை முழுக்கவே கலையரசன், சாய் தன்ஷிகாவை மையப்படுத்தியே செல்கிறது. மைம்கோபி, டேனியலை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

எழுத்தாளனாக இருப்பவன் எப்போதும் புகைத்துக்கொண்டே இருப்பான், சிகரெட்டைத் தேடி வெறிபிடித்தவனைப்போல் அலைவான் என்பதும், கஞ்சா சிகரெட் கிடைத்த பிறகு அவனுக்கு கற்பனை பொங்கி வழிவதுபோன்றும் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.

முதல் பாதியின் தேவையற்ற காட்சிகள், இருக்கையில் நம் இருப்பைச் சோதிக்கின்றன. இரண் டாம் பாதி இறுக்கிப் பிடிக்கிறது.

உச்சகட்டத்தை இன்னும் எளிமை யாகப் புரியும்படி அமைத்திருந்தால், முழு உரு கிடைத்திருக்கும்.

SCROLL FOR NEXT