காலம் காலமாக சினிமா எதிர்கொள்ளும் கேள்வி இது: ஒரு கதை பிடித்து, அதைப் படமாக எடுக்க எவ்வளவு செலவாகுமோ, அதைக் குறைக்காமல் படம் எடுப்பது, அல்லது, கதை பிடித்திருந்தாலும், அந்த இயக்குநர் + கதாநாயகனுக்கான வியாபார எல்லையை உணர்ந்து அந்த எல்லைக்குள் அக்கதையைப் படமாக எடுக்க முயற்சி செய்வது. இதில் எது நல்லது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது அதன் இயக்குநருக்கு ஒரு கலை. அதை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்யத்தான் ஆசைப்படுவார். ஆனால், தயாரிப்பாளர்களுக்குக் கதை பிடித்திருந்தாலும், படத் தயாரிப்பு என்பது தொழில் மட்டுமே. லாபம் வர விட்டாலும் பரவாயில்லை. போட்ட அசலையாவது எடுக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் மேலும் படங்கள் எடுத்து சினிமாத் துறையில் இருக்க முடியும். அதிக பட்ஜெட்டால் ஒரு படத்திற்கு முதலுக்கே மோசம் வரும் என்று திட்டமிடலின்போதே தெரியவந்தால் அந்தப் படத்தை ஆரம்பிக்கவே கூடாது. என் அனுபவத்தில் கண்ட உண்மை இது.
அனுபவப் பாடம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெயர் பெற்ற இயக்குனரின், பெரிய நடிகர்களின் படத்திற்கு பட்ஜெட் போட்டபோது பெரிய அளவு வந்தது. ஒரு பிரபலமான தயாரிப்பாளர் நண்பர் என்னிடம் பேசும்போது, அப்படத்தை ஒரு குறிப்பட்ட பட்ஜெட்டுக்குள் எடுக்குமாறு ஆலோசனை சொன்னார். நான் எவ்வளவோ முயற்சி செய்தும், அப்படம், நாங்கள் முதலில் திட்டமிட்ட பட்ஜெட்டையும் மீறிச் சென்று, கடைசியில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. சக தயாரிப்பாளர் சொன்ன பட்ஜெட் அளவுக்குள் எடுத்திருந்தால், நஷ்டம் தவிர்க்கப்பட்டிருக்கும். பட்ஜெட்டுக்குள் படம் எடுப்பதின் சிறப்பை அப்படம் உணர்த்தியது.
சமீபத்தில் மறைந்த பிரபலமான ஹிந்தி இயக்குனர்- தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா ஒரு நேர்காணலில் இவ்வாறு சொன்னார்: “பெரும்பாலான நல்ல படங்கள் தோற்பதில்லை. அவற்றின் பட்ஜெட்தான் அவற்றை வணிக ரீதியில் தோல்விப் படங்களாக்குகின்றன.” எவ்வளவு அருமையான கருத்து!
இரண்டு முன்னுதாரணங்கள்
சினிமா வரலாற்றில் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள் என் நினைவுக்கு வருகின்றன. ஒன்று, பெரிய நடிகர் படமானாலும், சிறிய நடிகர் படமானாலும், குறித்த பட்ஜெட்டுக்குள் படங்களை முடித்து, 75 வருடங்களுக்கு மேலாக, இன்றும் படங்களைத் தயாரித்துவரும் ஏ.வி.எம். ஸ்டூடியோ. மற்றொன்று, இந்திய சினிமா காணாத அளவு பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து, பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திய எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டூடியோ.
பட்ஜெட்டுக்குள் படங்களை எடுத்து ஏ.வி.எம். நிறுவனம் இன்றும் நிலைத்து இருக்கிறது. வியாபார எல்லைகளை மீறிப் படங்களைத் தயாரித்த ஜெமினி நிறுவனம் இன்று சினிமாவில் எந்தத் துறையிலும் இல்லாமல் ஒதுங்கியிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்த எஸ்.எஸ். வாசன் அவர்களே ஒரு அறிக்கையில், “கூட்டிக் கழித்துப் பார்த்தால், வரலாறு படைத்த, ஒரு மிகப் பெரிய பட்ஜெட் படத்தால் எனக்கு எந்த விதத்திலும் பெரிய பொருளாதாரப் பயன் கிடைக்கவில்லை” என்று சொன்னார்.
82 வருட சினிமாவில், இந்த இரு நிறுவனங்களும் நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?
எப்பேர்ப்பட்ட சிறப்பான கதையாக இருந்தாலும், ஒரு இயக்குநர் + கதாநாயகனின் வியாபார எல்லைகளை முதலில் தெரிந்துகொள்வது அவசியம் (புது இயக்குனர் + புது (அ) பிரபலமான நடிகர் கூட்டணி என்றால், அது போல ஏற்கனவே வந்த படங்களின் வியாபார எல்லைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்). அவர்களின் வெற்றிப் படங்களின் வியாபாரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தோல்விப் படங்களின் வியாபாரத்தையும் கருத்தில் கொண்டு, அவை இரண்டுக்கும் மத்தியில் ஒரு வியாபார அளவை நிர்ணயிக்க வேண்டும். அந்த வியாபாரத்தில், படத்திற் கான விளம்பரம், வட்டி, விநியோகச் செலவு களைக் கழித்துவிட்டு, மீதி உள்ளதுதான், அப்படத்தின் நிகர வருமானம் என்பதைக் கருத்தில் வைக்க வேண்டும். அந்த நிகர வருமானத்திற்க்குள் அந்த இயக்குநர் + கதாநாயகன் படத்தை எடுக்க முடிந்தால் மட்டுமே, அத்தகைய படங்களைத் தொடங்க வேண்டும்.
கற்பனையும் முதலீடும்
ஒரு படத்தின் பட்ஜெட் அளவை நிர்ணயித்து, அதற்குள், அப்படத்தை எடுக்க இயக்குநர் உட்பட ஒவ்வொருவரும் போராட வேண்டும். அப்போதுதான், நஷ்டங்கள் தவிர்க்கப்பட முடியும். தீவிர ஆய்வுக்குப் பின், ஒரு படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அதைக் கருத்தில் கொள்ளாமல், கதைக்குத் தேவைப்படுகிறது; எனவே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தால், அப்படத்திற்கான நஷ்டக் கணக்கையும் அப்போதே தொடங்கி விட வேண்டும்.
ஒரு இயக்குநரின் படைப்புத் திறனுக்கும் எண்ணங்களுக்கும் எல்லையே இல்லை. வாய்ப்பும் வசதியும் இருந்தால், ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்கவே ஒரு இயக்குநர் ஆசைப்படுவார். ஆனால் பாலிவுட் ரேஞ்சுக்குக்கூட நம் படங்களுக்கு வியாபாரங் கள் இல்லை என்பதைத் தயாரிப்பாளர்கள்தான் தொடர்ந்து வலியுறுத்தி, நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அனேக இயக்குநர்கள், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், படைப்புத் திறனுடன் ஒரு படத்தை எப்படி எடுப்பது என்பதை அறிந்தவர்கள். எத்தனையோ பட்ஜெட் சிரமத்துக்குள் எடுக்கப்பட்ட பல படங்கள் மாபெரும் வெற்றி கண்டுள்ளன. சமீபத்திய உதாரணம் கோலி சோடா. அந்தத் திறமையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்போது, படங்களின் வியாபார வெற்றியின் வாய்ப்பும் கூடுகிறது. பட்ஜெட்டுக்குள் படங்களை எடுத்து தொடர்ந்து வெற்றி கண்டுவரும் சி.வி. குமாரின் திருக்குமரன் பட நிறுவனம் இதுபோன்ற அணுகுமுறைக்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று.
சில தயாரிப்பாளர்கள் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று, தேர்ந்தெடுத்த கதையை அழகாவும் பிரமாண்டமாகவும் செய்ய விழைபவர்கள். நஷ்டங்களைத் தாங்கக்கூடியவர்கள். பெரிய முதலீடு, பெரிய வியாபாரம், பெரிய ரிஸ்க் என்று அவர்களால் செயல்பட முடியும். இங்கே முன்வைக்கப்படும் எண்ணங்கள் அவர்களைப் போன்றவர்களுக்கானது இல்லை. வியாபாரப் பந்தயத்தில் சறுக்கி விழாமல் தாக்குப் பிடித்துத் தொடர்ந்து ஓட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கானது. நஷ்டம் ஏற்பட்டால் தாங்க முடியாமல் அடுத்த படத்தை எடுப்பதற்குத் திணறுபவர்களுக்கானது.
(dhananjayang@gmail.com)