இந்து டாக்கீஸ்

திரைவிழா முத்துகள்: ஒளியை நடனமாடச் செய்தவர்

ஷங்கர்

சமகால ஐரோப்பிய நவீன நடன வடிவத்திலும் மேடை ஒளியமைப்புத் தொழில்நுட்பத்திலும் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த நடன மங்கை லூயி புல்லர். இவரது ஒளியமைப்புச் சோதனைகள் ஆரம்பகால சினிமா ஒளியமைப்பிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிறந்த இவரது வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரெஞ்சுத் திரைப்படம் ‘லா டான்ஸியூஸ்’( தி டான்சர்). 14-வது சென்னை சர்வதேசப் படவிழாவை அழகூட்டிய படங்களில் இதுவும் ஒன்று.

அழைத்தது பிரெஞ்சு தேசம்

சிகாகோவுக்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து நியூயார்க்கில் தனது நடன வாழ்க்கையைத் தொடங்கினாலும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்தான் லூயி புல்லரைப் பெரும் கலைஞராக உலகத்துக்கு வழங்கியது. அதனால் இத்திரைப்படம் பிரெஞ்சுப் படமாக வெளிவந்திருப்பது இயற்கையானதுதான்.

19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம். கிராமத்து வீடொன்றில் குடிகாரத் தந்தையுடன் தனது பால்யத்தைக் கழிக்கும் புல்லர், தந்தை இறந்தவுடன் நடிகையாவதற்காக நியூயார்க் நகரத்துக்கு வருகிறார். அப்போதுதான் அவரது விருப்பம் நடனத்தை நோக்கித் திரும்புகிறது. ஒரு நாடக நிகழ்வில் உடைவடிவமைப்பில் ஏற்பட்ட சிறு தவறொன்றைச் சமாளிப்பதற்காக இந்த நடன வடிவத்தை அவர் கண்டுபிடிக்கிறார். வண்ணமயமான மேடை விளக்குகளின் ஒளிஜாலத்தில் அலையலையாக நெளியும் உடைகளுடன் காற்றைப் போல, பாம்பைப் போல ஆடும் சுயம்புவான நடன வடிவம் அது. அதுவே அவரது முத்திரையாகவும் மாறுகிறது. நியூயார்க்கில் பெற்ற வெற்றி அவரை பாரீஸுக்கு அழைக்கிறது.

துரோகம் செய்யும் தோழி

பாரீஸில் அவரது நடனத்துக்குக் கிடைக்கும் புகழ் வெளிச்சமும் வெற்றியும் அவருக்கு மிகுந்த தனிமையையும் கூச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. தன் நடனம் அளவுக்குச் சிறப்பாக இல்லாத முக அழகு குறித்து புல்லருக்கு ஒரு தாழ்வுணர்ச்சி வருகிறது. அழகு குறித்த தாழ்வுணர்ச்சியால் தனது குழுவில் ஒரு வெற்றிடம் இருப்பதாக எண்ணுகிறார் புல்லர். அந்த வெற்றிடத்தை நிறைப்பவராக அவரது தோழி இஸ்டோரா டன்கன் இருக்கிறார்.

தன்னுடன் ஆட அவர் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த இளம் நடனக்கலைஞரும் தோழியுமான இஸ்டோரா டன்கன், முக்கியமான அரங்கேற்றத்தின் போது லூயி புல்லரின் குழுவை விட்டு வெளியேறி துரோகம் செய்கிறார். புகழும் வெற்றியும் வெளிச்சமும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் கலைஞர்களை மெதுவாக அரித்துத் தின்னும் தனிமை மற்றும் அச்சத்தை ‘தி டான்ஸர்’ திரைப்படம் வழியே இயக்குநர் டி கியுஸ்டோ பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். இது அவருக்கு முதல் படம்.

கலைஞர்களின் அகப் போராட்டம்

லூயி புல்லர் தனது நடன வாழ்க்கையில் படிப்படியாக அடையும் நிலைகளை இயக்குநர் கதையாக ஆக்கவில்லை. ஒரு கலை வடிவத்தில் பிறக்கும் பல்வேறு சாத்தியங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்தக் கலையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர் செய்து பார்க்கும்போது சந்திக்கும் போராட்டங்கள் அசாதாரணமாவை. அவை தரும் அழுத்தம் கலைவாழ்வில் வெற்றிபெற்ற பின்னர் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சம்பந்தப்பட்ட கலைஞர் சந்திக்கும் அகப் போராட்டத்தால் எழும் தனிப்பட்ட சூழல்களைச் சித்தரிப்பதில் மட்டுமே திரைக்கதை கவனம் செலுத்துகிறது.

அதனால் ஒரு முழுமையான அனுபவம் கிட்டாத உணர்வு இப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேநேரம் லூயி புல்லரின் கதை, ஒளி மற்றும் வண்ணங்களின் அடர்த்தி அதிகமாவதன் வழியாகவே சொல்லப்படுகிறது. பாரீஸ் ஓபேரா அரங்கேற்றத்துக்கு அதிகமான வெளிச்சம் கொண்ட மின் பல்புகளின் ஒளியில் பயிற்சி செய்து அவரது கண்கள் பாதிக்கின்றன.

ஒளியுடன் இணையும் உடல்

லூயி புல்லராக நடித்திருக்கும் சோகோவின் மேடை நடனம் மட்டுமின்றி அவரும் அவரது தோழியான லைலி ரோஸ் டெப்பின் பாரிஸின் மாளிகைத் தோட்டப் பின்னணியிலான நடனப் பயிற்சி நிகழ்ச்சிகளை அருமையான இசை மற்றும் ஒளி விருந்தாக இந்த பயோபிக் படத்தில் மாற்றியிருக்கிறார்கள்.

உடல் நலிவுற்ற பிரெஞ்சு கோமான் லூயிஸூக்கும் லூயி புல்லருக்கும் இடையிலான காதலுறவு மர்மமும் ரகசியங்களும் மவுனமும் கூடியது. பெண் பித்தனாக அறிமுகமாகும் லூயிஸ், இறுதி நடன அரங்கேற்றத்தில் லூயி புல்லர் தோல்வியடைந்து விடுவாளோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறான். லூயி புல்லரின் கலை மேதைமை என்னும் பீடத்தில் தன்னைப் பலி கொடுத்துப் பார்வையாளர்களின் நெகிழ்ச்சியைப் பெறுகிறார் நடிகர் கஸ்பார்ட் உல்லியல்.

ஒளியும் நடன அசைவுகளும் ஆடையின் ஒத்திசைவும் இணையும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பெனோயிட் டெபியின் பங்களிப்பு சிறப்பாகக் கூறப்பட வேண்டியது.

மேற்குலகில் அறிவியல், ஓவியக்கலை, நிகழ்த்துகலைகள் , இசை ஆகிய அனைத்து மென்கலைகளும் சேர்ந்து சினிமா என்ற வெற்றிகரமான வடிவத்தைப் பிரசவித்தன என்பதை மீண்டும் நினைவுகூரும் திரைப்படம் இது. மார்டின் ஸ்கார்செஸி இயக்கிய ஹியூகோ திரைப்படம், மேஜிக் கலையிலிருந்து சினிமா என்ன பங்களிப்புகளைப் பெற்றது என்பதைக் காண்பித்திருப்பார். ஒபேரா என்ற இசை நாடக வடிவம் சினிமா என்ற நவீன வடிவத்தின் உருவாக்கத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதை அமேடியஸ் திரைப்படம் நமக்கு உணர்த்தும்.

லூயி புல்லர் போன்றவர்கள் தனது நடனத்திறன், ஒளியமைப்புத் திறன் மட்டுமின்றி வண்ண ஒளிகளை உருவாக்குவதற்கான வேதிப்பொருட்களிலும் ஆய்வு செய்திருக்கிறார்கள். நடனம் மற்றும் உடை வடிவமைப்புகளை அவர் ஸ்கெட்ச்களாக வரைந்துள்ளார். மேற்குலகில் சினிமா என்ற நவீன வடிவம் பல கலைகளையும் கொலாஜாகச் சேர்த்து எப்படி வடிவம் கொண்டது என்பதையும் இத்திரைப்படம் மூலம் நாம் உணரமுடியும்.

கலைஞர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் குறித்த திரைப்படங்கள் என்று வரும்போது ‘ப்ரைடா ’, ‘அமேடியஸ்’ போன்ற சிறந்த திரைப்படங்கள் ஞாபகத்திற்கு வரும். லா டான்ஸியூ(தி டான்ஸர்) திரைப்படத்தை அந்த உயரத்தில் வைக்க முடியாவிட்டாலும், லூயி புல்லர் மேடையில் காட்டும் மாயாஜாலம் பார்வையாளர்களை என்றும் மறக்கவிடாது.

SCROLL FOR NEXT