“இதுவரை நான் நடித்த, பெண்களை மையப் படுத்தியிருக்கும் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் 'நான்தான் ஷபானா' படமும் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று பேச்சைத் தொடங் கினார் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய்.
உங்களுடைய திரையுலக வாழ்வில் சென்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
19-20 வருடங்களுக்கு முன்னால் டப்பிங் கலைஞராக வேலைக்குச் சென்னை வந்துள்ளேன். ரசிகர்களின் வரவேற்பைப் பார்க்க வேண்டும் என்றே ரஜினிகாந்த் படங்களைத் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். அதையெல்லாம் மறக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் அதிக வாய்ப்புகள் வருவதில்லை. ‘சமர்', ‘அஞ்சான்' படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால்தான் வாய்ப்புகள் வரவில்லை எனச் சிலர் சொன்னார்கள்.
சமீபத்தில் ‘விசாரணை' பார்த்தேன். அது தமிழ்ப் படமல்ல, உலகப் படம். இதுபோன்ற படங்களை நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நம் நாட்டு மக்களுக் காக மட்டுமல்ல. அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் எடுக்க வேண்டும்.
யதார்த்தப் படங்கள், கமர்ஷியல் படங்கள் என இரண்டிலுமே பயணிக்கிறீர்களே?
எனக்குச் சுலபமாகவே இருக்கிறது. மனோஜ் பாஜ்பாய் அனைத்து விதமான படங்களிலும் நடிப்பார் என ரசிகர்கள் நினைக்க வேண்டும் என்றே முதலிலிருந்து திட்டமிட்டுள்ளேன். தனக்குப் பிடித்த வகைப் படம் என எதுவும் ஒரு நடிகருக்கு இருக்கக் கூடாது.
‘அலிகர்' மாதிரியான படங்களுக்கு எப்படித் தயாரானீர்கள். அப்படம் முடித்தவுடன் எப்படி அதிலிருந்து வெளியே வந்தீர்கள்?
‘அலிகர்' வேடம் மிகக் கடினமாக இருந்தது. அதற்குத் தயாராக 20-25 நாட்கள் ஆனது. நடித்து முடிக்க எளிமையான படமும் அல்ல. ஆனால், இதற்குத்தானே பயிற்சி பெற்றுள்ளேன். 10-15 வருடங்களுக்கு முன்னால் வேண்டுமானால் அப்படிப்பட்ட பாத்திரத்தில் நடித்து விட்டு அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருக்கலாம். ஆனால், இப்போது நிலை அப்படியல்ல.
‘சத்யா', ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்பூர்' மற்றும் ‘அலிகர்' ஆகிய படங்கள் இங்கும் திரைப்பட ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இயக்குநர்கள் ராம் கோபால் வர்மா, அனுராக் கஷ்யப் ஆகியோருடனான நட்பைப் பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் அனைவரும் சினிமாவைச் சேர்ந்தவர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக்கொள்கிறோம். கமல் ஹாசனின் ரசிகன் நான். நடிப்புக் கலைக்காக நிறைய அர்ப்பணித்தவர் அவர். ராம் கோபால் வர்மா என்னை நம்பி அறிமுகப்படுத்தியவர். அவருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அவருடன் பணியாற்றியது அற்புதமான, தனித்துவமான அனுபவமாக இருந்தது.
‘சர்க்கார்-3' படத்தில் அவர் இயக்கத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. ராம்கோபால் வர்மா இயக்கும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதே பெருமைதான். அனுராக் காஷ்யப் சிறந்த சிந்தனையாளர், இயக்குநர் மட்டுமல்ல, அவருக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். அவர் என் திறமைக்குச் சவால் விடுபவர். நடிப்புக்கான என் எல்லையைத் தாண்டிச் செல்ல வைப்பவர்.
மக்களால் கவனிக்கப்பட்ட நிறைய படங்களில் நடித்துள்ளீர்கள். ஆனால், விருதுப் பட்டியல்களில் உங்கள் பெயர் இடம்பெறாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முதலில் விருது தருபவர்களுக்கு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். இங்கு அனைத்தும் விருது வழங்கும் ‘நிகழ்ச்சி'களாக மாறிவிட்டன. விளம்பர ரீதியாக மாறிவிட்டன. விருதுகள் இரண்டாம்பட்சமாக மாறி அந்த நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்கள் பிரதானமாகிறார்கள். நடனம் ஒரு அங்கமாகிவிட்டது. பெரிய விளம்பரதாரர்கள் தேவைப்படுகிறார்கள். தொலைக்காட்சி உரிமை விற்கப்படுகிறது.
இவையெல்லாம் பிரதானமாகிவிடுகின்றன. உண்மையிலேயே திறமையானவர்களுக்கு விருதளிக்க வேண்டும். பல விருதுகளில் என் பெயரைப் பரிந்துரைக்கவேயில்லை. சமூக வலைத்தளங்களில் மக்கள் இது குறித்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இவர்கள் விருது வழங்கும் முறையைப் பார்த்து மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர். அதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.