தரமணி படத்தை இயக்கிவரும் இயக்குநர் ராமின் அலுவலகம் பூங்கொத்துகளால் நிறைந்து கிடக்கிறது. தங்க மீன்கள் படத்துக்கு தேசிய விருது பெற்ற மகிழ்ச்சி இப்போதைக்குத் தீராது என்ற மனநிலையில் இருந்தார் ராம். குவியும் குறுஞ்செய்தி வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார் சளைக்காமல்.
தரமான படத்துக்காக இயங்கும் ஒரு இயக்குநரை சந்திக்க இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவாக இருக்க முடியும்..
‘தங்க மீன்கள்’ சொல்வதைப்போல இன்றைய அரசு பள்ளிகளில் கல்வித்தரம் ஆரோக்கியமானதாக இல்லையா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்கிறார்களா?
இன்னமும் தவறான புரிதலாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலா அரசுப் பள்ளியிலா என்பதைப் பற்றிப் படத்தில் எங்கும் நான் சொல்லவில்லை. எங்கு நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அதுதான் நல்ல கல்விக்கூடம் என்பதைத்தான் புரிய வைத்தோம். நல்ல ஆசிரியர்கள் இருப்பதும், நல்ல ஆசிரியர்களால் தொடங்கப்பட்டதும், பள்ளிக்கூடமே இல்லாமல் தன்னுடைய ஆர்வத்தினால் செயல்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் சூழ்ந்த இடங்களும்கூட போதுமே. அதைத்தான் ‘தங்க மீன்கள்’ எடுத்துக்காட்டியது.
ஈழம் சார்ந்த ஈடுபாடு கொண்டவர் நீங்கள். தமிழ் சினிமாவில் ஈழம் சார்ந்த படைப்புகள் இன்னும் முழுமையாக சொல்லப்படவில்லையே?
ஈழம் பற்றிய படத்தை இந்தியாவில் எடுக்க எந்த அளவிற்கு அனுமதி கிடைக்கும் என்கிற ஒரு கேள்வி இருக்கே. இன்னொன்று, படம் எடுக்கும் தயாரிப்பாளர் இது தொடர்பான படத்தை எடுத்தால் வெளிவருமா பாதியில் நின்றுவிடுமா என்று யோசிக்கும் நிலையும் உள்ளது. ஈழம் சார்ந்து வரும் படங்களில் இங்கே இந்திய அரசாங்கத்தைக் குறை சொல்லாத படங்கள்தான் வர முடியும். அப்படி வரும்போது அது வரலாற்று பொய்யாக மாறிவிடுகிறது. இயக்குநர் உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியாமல் போய்விடுகிறார்கள். ஆகவே, தணிக்கை பற்றி யோசிக்காமல், ரிலீஸ் பற்றி யோசிக்காமல் படம் எடுக்க வேண்டும். இப்படியான அடிப்படைச் சிக்கல்களை சந்திக்காமல் எடுக்க முற்படும் படங்கள் வியாபார நோக்கத்திற்கான படமாக வந்துவிடுகிறது. அப்படியான படங்களை எடுத்துவிட்டால் அந்தக் குற்ற உணர்ச்சியை வாழ்க்கை முழுவதும் சுமக்க வேண்டியிருக்கும். அது என்னால் முடியாது!
இன்று இளம் இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள். அவர்களது பங்களிப்பு எப்படியிருக்கிறது?
திரைப்படம் எடுப்பது எளிமையான விஷயம். அதை எல்லோருமே எடுக்க முடியும் என்றுதான் நான் நம்புகிறேன். இப்போ எல்லாம் சென்னைக்கு வராமலேயே அவரவர் ஊரிலிருந்தே படம் எடுக்கக்கூடிய வசதி இருக்கிறது. இந்தமாதிரியான விஷயங்கள் வரும்போது பிலிம் மூவ்மென்ட்ஸ் வரும். புதிய ஸ்டைல் வரும். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் தமிழ் சினிமா இன்னும் அழகா இருக்கும்.
தற்போது நீங்கள் இயக்கிவரும் ‘தரமணி’ எதைப் பேசப்போகிறது?
இது ‘ஏஜ் ஓல்டு’ ஸ்டோரி. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து சதா யோசிக்க வைத்த, டார்ச்சர் செய்த, ஏங்க வைத்த, கொல்கிற, வாழ வைக்கிற அதே காதலைத் தான் இந்தப் படத்தின் வழியே பதிவு செய்யவிருக்கிறேன். எனக்குத் தெரிந்த, நான் படித்த, நான் பார்த்த நண்பர்களின், மனிதர்களின் சம்பவங்கள் சேர்ந்ததுதான் இந்த ‘தரமணி’. சென்னை என்கிற மாநகரத்தில், ஒரு பகுதியாக இருக்கும் ‘தரமணி’யில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் எளிமையான காதல் பயணம்.
இதில் உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த காதல் இருக்கிறதா?
என்னுடய காதல் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளையும் நான் சந்தித்ததில்லை. விளையாட்டு மைதானத்தில் எதிர் அணியில் நின்று யாரும் மறுக்கவோ, சண்டை பிடிக்கவோ செய்ததில்லை. அதெல்லாம் அப்போதைய நாட்களில் மிக இயல்பாக நடந்தது. அதனால் அதை சினிமாவாக எடுக்க முடியாது. ஆனால் என் வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக ‘தங்க மீன்கள்’ இருந்தது. அதற்கு முந்தைய ‘கற்றது தமிழ்’ படத்தோடும் என் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியாது. நான் படித்தது மட்டும்தான் தமிழ்த் துறை. மற்றபடி நன்றாக படித்தேனா என்பதெல்லாம் வேறு. அந்த வரிசையில் என்னைச் சுற்றிக் கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த அனுபவங்கள்தான் இது. அதைத் தரமணி நகரத்தில் நின்று சொல்கிறேன். அவ்வளவுதான்.
அஞ்சலி, சாதனா போல அறிமுகப்படுத்தாமல் இம்முறை ஏற்கனவே பிரபலமான ஆண்ட்ரியாவைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறீர்களே?
ஒரு கமர்ஷியல் நாயகி என்பதற்காக ஆன்ட்ரியாவை ஒப்பந்தம் செய்யவில்லை. கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தினாங்க. அவங்க நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தால் நிச்சயம் ஒரு புதிய நாயகியைத் தேடித்தான் போயிருப்போம். அவங்களுக்கும் கதை பிடித்திருந்தது. அவர் காட்டிய ஈடுபாட்டில் படம் நன்றாக வந்திருக்கிறது. அதேபோல அறிமுக நாயகன் வசந்த் ரவி. அவரும் இந்தக் கதைக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
உங்கள் படங்களில் பிரச்சாரத் தன்மை இருப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறதே?
அப்படி எல்லாம் இல்லை. என்னோட படங்களை வியாபார நோக்கமுள்ள படங்களாகத்தான் நான் பார்க்கிறேன். நானும், சினிமா வழியே பணம் ஈட்ட வேண்டும் என்று ஆசைப்படும் ஆள்தான். இங்கே எல்லா குற்றங்களோடும், எல்லாக் சுகங்களோடும் வாழக்கூடிய ஒருத்தன்தான் நானும். அதேபோல, சமூகப் பொறுப்பு இல்லாமல் படம் எடுக்க முடியாது என்ற பிம்பம் உருவாவதெல்லாம் இங்கே இல்லை