தமிழ்த் திரைப்பட உலகில் நாகசுரமும் மனிதக் குரலும் இணைந்து உருவாக்கப்பட்ட பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன. கொஞ்சும் சலங்கையில் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாகசுரமும் எஸ். ஜானகியின் குரலும் செய்த மாயவித்தை இன்றும் மயக்குகிறது.
அதே திரைப்படத்தில் பிலஹரி ராகத்தின் சாயலில் ‘ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற’ என்ற வள்ளலாரின் திருவருட்பா பாடலை சூலமங்கலம் ராஜலட்சுமி பாட, பின்னர் அதே ராகத்தை காருக்குறிச்சி வாசித்திருப்பார். காலையில் தரையெல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து கம்பளம் விரித்திருக்கும் பவள மல்லி போல் அந்த ராகம் விரிகிறது. கூட தவில் வாசித்தவர் பெரும்பள்ளம் வெங்கடேசன்.
பின்னர் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ ஒரு கிளாசிக் திரைப்படம். அத்தனை பாடல்களிலும் இசையாட்சி நடக்கும். மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்கள் நாகசுரத்துடன் திருவிடைமருதூர் வெங்கடேசன் தேவூர் சந்தானம் ஆகியோர் தவில் வாசித்திருந்தனர்.
‘கோயில்புறா’ திரைப்படத்தில் இளையராஜாவும் நாகசுரத்தைப் பயன்படுத்தியிருந்தார். அதில் இடம் பெற்ற பாடல்களான ‘அமுதே தமிழே, ‘வேதம் நீ இனிய நாதம் நீ’ ஆகியவையும் மிக முக்கியமான பாடல்கள். ஆனால் நாகசுரம் தமிழ்த் திரைப்பட உலகத்தைத் தாண்டி இந்திக்கும் சென்றிருக்கிறது. ஆனால் பலரும் அதை அறிந்திருக்கவில்லை. ஏதேச்சையாகத்தான் இதைக் கண்டறிய முடிந்தது.
ஷம்மி கபூர், ராஜேந்திரகுமார் ஆகியோர் நடித்த ‘சச்சாயி’ என்ற இந்தித் திரைப்படம் 1969-ல் தயாரிக்கப்பட்டது. அதன் இயக்குநர் கே. சங்கர். தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகனான எம்.சி. இராமமூர்த்தி. இசையமைத்தவர்கள் சங்கர்-ஜெய்கிஷன் இரட்டையர்.
‘சிங்கார வேலனே தேவா’ பாடல் பாணியில், பெண்குரல் பாட, அதைத் தொடர்ந்து நாகசுரம் ஒலிக்கிறது. பாடலைப் பாடியவர் ஆஷா போன்ஸ்லே. நாகசுரம் வாசித்தவர் திருச்சேறை டி.வி.எஸ். சிவசுப்பிரமணியபிள்ளை.
‘மொரே செய்யான் பகுடே பய்யான்’ என்ற அந்தப் பாடல் இரட்டைத் தவில் வாசிப்புடன் தொடங்குகிறது. திருநாங்கூர் இராமு ஒரு தவில். தேரெழுந்தூர் இராஜரத்தினம் மற்றொரு தவில். இராமுவை எல்லோரும் ‘தா’ இராமு என்று அழைப்பார்கள். “தா தி தொம் நம்” என்ற சொற்களில் ‘தா’ அவருடைய தவிலில் அவ்வளவு சுத்தமாக ஒலிக்குமாம். சிவசுப்பிரமணியபிள்ளை ஒரு காலத்தில் மிகப்பெரிய நாகசுர வித்வான்.
அவருடைய தந்தை திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையிடமும் புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளையிடமும் இசைப் பயின்றவர். இன்று கிடைக்கும் சில இசைப் பதிவுகள் அவருடைய இசைத் திறமையைப் பறைசாற்றுகின்றன. சிவசுப்பிரமணிய பிள்ளை, திரைப்படத் தயாரிப்பாளரான ஜி.என். வேலுமணிக்கு நெருக்கமானவர்.
“அவர் வீட்டுத் திருமணத்தில் வாசித்த போதுதான் எம்.ஜி.ஆர். அவரைக் கேட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயக்குநர் சங்கர் அவருக்கு உறவினரானதால் சிவசுப்பிரமணிய பிள்ளையை அறிமும் செய்திருக்கிறார். அப்படித்தான் சங்கருக்கு அறிமுகம் செய்தார்,” என்றார் சிவசுப்பிரமணிய பிள்ளையின் மகனான சி. அருணகிரி. ‘சச்சாயி’ படத்துக்காக இரண்டு நாட்கள் சிவசுப்பிரமணிய பிள்ளையை அழைத்திருந்தார்கள்.
“ஆனால் அரை நாளிலேயே இசைப் பதிவை முடித்து விட்டு அப்பா ஊருக்குத் திரும்பி விட்டார்,” என்கிறார் அவருடைய இன்னொரு மகன் சி. ரகுவீரன். இந்தித் திரைப்படங்களில் புகழ் பெற்ற நாட்டியக் கலைஞரான ஹெலன் இப்பாடலுக்கு சஞ்சய்குமாருடன் நடனமாடியிருக்கிறார். “கும்பகோணத்தில் இப்படம் திரையிட்ட போதுதான் அப்பா அதைப் பார்த்தார். படத்தில் ஷெனாய் வாசிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது,” என்று நினைவுகூர்கிறார் ரகுவீரன்.