இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: டோரா

இந்து டாக்கீஸ் குழு

பவளக்கொடியும் (நயன்தாரா) அவரது அப்பாவும் (தம்பி ராமைய்யா) வாடகைக் கார் தொழில் செய்வதற்காகப் பழைய காரை விலைக்கு வாங்குகிறார்கள். அதனுடன் வில்லங்கத்தையும் அவர்கள் விலை கொடுத்து வாங்கியிருப்பது தெரியவருகிறது.

சென்னையில் திட்டமிட்டுக் கொலை செய்து கொள்ளை யடிக்கும் சில குற்றவாளிகளைக் காவல் துறை தேடுகிறது. அந்தத் தேடலுக்கும் இந்தக் காருக்கும் என்ன தொடர்பு? அமானுஷ்யம் நிறைந்த அந்தக் காரில் மறைந்து இருக்கும் முன்கதை என்ன? பவளக்கொடியும் அவர் அப்பா வும் என்ன ஆகிறார்கள்? இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது படம்.

ஆவியை மட்டுமே நம்பும் அமானுஷ்யப் படம்போல் இல் லாமல், புலன்விசாரணை, அப்பா, மகள் உறவு, விலங்குகளுக் கும் மனிதர்களுக்கும் இடை யிலான உறவு, பழிவாங்கும் உணர்வு எனப் பல அடுக்குகளில் கதை சொல்வதில் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் தாஸ் ராமசாமி. முதல் பாதியில் ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கதை சொல்லி, ஆவிக்குப் பதிலாகக் கொட்டாவியை வரவழைக்கிறார். இரண்டாம் பாதி ஒப்பீட்டளவில் வேகமாகச் செல்கிறது. அமா னுஷ்ய சக்தியையும் அதன் பின்னணியையும் நயன்தாரா உணர்ந்துகொண்ட பிறகு படம் வேகமெடுக்கிறது. தனித்து வாழ் பவர்கள் குற்றவாளிகளின் இலக் காக எப்படி மாறுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வையும் படம் ஏற்படுத்துகிறது.

ஆவியின் பழிவாங்கும் கதையை மாறுபட்ட கோணத்தில் யோசித்ததற்காக இயக்குநரைப் பாராட்டாலாம். அமானுஷ்யமான காட்சிகளை வெறும் பூச்சாண்டிக் காட்சிகளாக இல்லாமல் நாய், கார், நிழல், சாவி, படபடப்பு எனக் கற்பனை வளத்தோடும் பொருத்த மான காட்சிகளோடும் படைத் திருக்கிறார். காரில் உள்ள ஆவியை நயன்தாரா தெளிவாக உணரும் தருணம் முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கிறது. இந்த இடத்தில் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் இசைவாக அமைந்து காட்சிக்கு வலு சேர்க் கின்றன. கார் செய்யும் கொலை கள் விறுவிறுப்பாகப் படமாக்கப் பட்டுள்ளன.

கால் டாக்ஸி வியாபாரம் எடுபடாத நிலையிலும் அப்பாவும் பெண்ணும் வசதியாகவே வாழ்வது எப்படி? அவர்கள் வீட்டிலிருக்கும் தரைவழித் தொலைபேசி போன நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருப் பது எப்படி? சம்மன் ஏதும் இல்லாமல் நள்ளிரவில் ஒரு பெண்ணைக் காவல் நிலையத் துக்கு அழைத்துவருவதற்குச் சட்டத்தில் இடமில்லை. நயன்தாரா காவல் துறையைச் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்பும்படி இல்லை.

எல்லாப் படங்களிலும் காத லைத் திணிக்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள், நாயகியை மையப் படுத்தும் படங்களில் மட்டும் காதலை விலக்கிவைப்பது ஏன் என்று தெரியவில்லை.

பிழைப்புக்காக வந்திருக் கும் வெளிமாநிலத் தொழிலாளர் களையே கொடூரமான குற்றவாளி களாகச் சித்தரிப்பது அவர் களுக்கு எதிரான அச்சத்தையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தி விடக்கூடும். இதுபோன்ற சித்தரிப்பு களில் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. சிறுமிக்கு எதிரான வன் கொடுமையைச் சித்தரிக்கும் காட்சியமைப்பிலும் மேலும் கவனம் இருந்திருக்க வேண்டும்.

துணிவும் துடிப்பும் மிக்க பெண்ணாக நயன்தாரா அழுத்த மான நடிப்பை வழங்கியிருக்கிறார். தீவிரமான காட்சிகளில் மட்டுமில் லாமல் இலகுவான காட்சிகளிலும் அனாயாசமாக நடிக்கிறார். காவல் நிலையக் காட்சியில் அவர் எடுக்கும் ‘அந்நியன்’ அவதாரம் அட்டகாசம். தம்பி ராமைய்யாவின் நகைச்சுவை அலுப்பூட்டவில்லை. சிரிப்பும் மூட்டவில்லை. ஹரிஷ் உத்தமன் முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது பொருத்தமாக இல்லை. ஜடாமுடி பாட்டி உட்பட மற்ற கதாபாத்திரங் களில் நடித்திருப்பவர்கள் பரவா யில்லை.

பி.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஹரிஹரசுதனின் மெய்நிகர் காட்சிகள், செங்கை ஏ.ராஜாவின் கலை இயக்கம் ஆகிய மூன்று அம்சங்களும் படத்துக்குப் பெரும் பலம். விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோரின் இசைக் கூட்டணியில் தீம் மீயூசிக், பாடல்கள் ஆகியவை சுமார். பின்னணி இசை பல இடங்களில் நன்றாக உள்ளது.

ஆவியின் பிரவேசத்துக்கு முந்தைய காட்சிகளின் இழுவை யைக் குறைத்திருந்தால் ‘டோரா’ ரசிகர்கள் மனங்களில் ‘டேரா’ போட்டிருக்கும்.

SCROLL FOR NEXT