இந்து டாக்கீஸ்

சர்வதேச சினிமா: இசையால் இணையும் இதயங்கள்

பால்நிலவன்

தி பேலட் ஆஃப் தி வீப்பிங் ஸ்பிரிங் (இஸ்ரேல்)

வெவ்வேறு திசைகளில் சிதறிப்போன இசை நண்பர்களை ஒருங்கிணைக்கச் செல்லும் நல்ல உள்ளங்களின் பயணங்களோடு நம்மையும் அழைத்துச்செல்கிறது ‘தி பேலட் ஆஃப் தி வீப்பிங் ஸ்பிரிங்’.

பிரிவுக் கடலில் விழுந்தவர்களின் இதயத்தை அன்பின் முகங்கள் அலைக்கழித்துக்கொண்டேயிருப்பதுதான் வாழ்வின் நியதி. அந்த அலைக்கழிப்பின் ஏக்கங்கள் கரைகாணா வலிகளாகும்போது பாடல்களே பற்றிக்கொள்ளக் கிடைத்த கிளைகளாகின்றன.

இசையைக் கொல்லமுடியாத விபத்து

ஒரு கார் விபத்து நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குக் காரணமான இசைக் கலைஞன் யாசோப் தவிலா சிறைவாசத்துக்குப் பின் மலைப்பிரதேசம் ஒன்றில் மதுபான அருந்தகம் நடத்திவருகிறார்.

அந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரும் யாசோப்பின் சிறந்த நண்பருமான அவ்ராம் முஃப்ராதி தற்போது படுத்த படுக்கையாகிவிட்டார். எப்போது வேண்டுமானாலும் அவர் இவ்வுலகை விட்டு விடைபெறலாம். அதற்குள் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவ்ராமின் மகன் அம்ரான் எனும் இளைஞன் யாசோபைத் தேடி வந்து இதைத் தெரிவிக்கிறான்.

சிறையிலிருந்து வந்ததிலிருந்தே நண்பர்களைப் பிரிந்த மனவலியால் இசைக் கருவியை இதுவரை தொடாமல் இருந்த யாசோப் அதை எடுத்துக்கொண்டு அவனுடன் புறப்படுகிறார். பழைய இசை நண்பர்கள் ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறார்.

முதலில் யாரையும் சந்திக்க மறுத்தவர் தவிலா. ஆனால் ஒரு அந்நியனாக அங்குவந்த அம்ரான் அவர் தன்னிடம் பேச மறுப்பதை எண்ணி வருந்துகிறான். தன்னிடமிருந்த இசைக்கருவியை அவன் மீட்டும் ஒழுங்கில் ஒருகணம் சிக்கிவிடுகிறார் யாசோப் தவிலா.

“யார் நீங்கள்?” என்று அதிர்கிறார். ஏனெனில் இப்பாடல் அவருக்கும் அவரது நண்பருக்கும் மட்டுமே தெரிந்த பாடல். யாசோப்பும் அவரும் இணைந்து உருவாக்கிய ‘தி வீப்பிங் ஸ்பிரிங் டைம்’ எனும் சிம்பொனி இசைப் பாடலுக்கான அந்த நொட்டேஷன்ஸ் இதுவரை பொதுமேடைகளில் பயன்படுத்தப்படவேயில்லை. நண்பரின் மகன்தான் வந்திருப்பது என்று தெரிந்ததும் தனது பழைய நினைவலைகளில் தத்தளிக்கிறார்.

ஒன்றிணையும் நண்பர்கள்

எங்கிருந்தோ தன்னைத் தேடி வந்திருக்கும் நண்பனின் மகன் அம்ரானின் நோக்கமறிந்து உடனே புறப்படுகிறார். ஒரு காட்டுப் புயலைப் போல பயமுறுத்துகிறது ஒரு மாபியா தலைவனைப் போல மொட்டை அடித்துக்கொண்டிருக்கும் யாசோப்பின் தோற்றம். ஆனால் அந்தத் தோற்றதுக்கு சற்றும் பொருத்தமில்லாத இசை அவருக்குள் இருக்கிறது.

யுகங்களில் உறைந்துகிடக்கும் பாறைபோன்ற யாசோப் தவிலாவாக நடித்துள்ள யூரி காவ்ரின் நடிப்பு பிரிவின் வலியை உணரவைக்கிறது. படத்தில் வரும் பயணத்தில் நம்மையும் பங்கேற்க வைக்கிறது. பயணத்தின் வழியே நிறைய சம்பவங்கள். வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களைத் தேடிப்பிடித்து ஒன்றிணைக்க முயலும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை.

மது அருந்தகக் கூடங்கள், பெருஞ்செல்வந்தர்கள் புழங்கும் இடங்கள், சிவப்புவிளக்குப் பகுதிகள், சின்னஞ்சிறிய கிராமங்கள் என ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கண்தெரியாத புல்லாங்குழல் இசைஞன் ஒரு முரட்டு ஆசாமியிடம் சிக்கியிருக்க அவனிடமிருந்தும் இசைஞனை மீட்டெடுக்கிறார்கள். இசைக்குழுவின் முக்கிய பாடகியான மார்க்கெரெட் ஏற்கெனவே நேர்ந்த கார் விபத்தால் தற்போது சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடப்பவள். அவளை ஒரு மலைக்குன்று வீட்டில் சந்தித்துப் பேசுகிறார்கள். அவளுடைய மகளும் பாடகியாதலால் தமராவை அனுப்பிவைக்கிறாள்.

இசையனுபவம்

நம் ஊரின் முன்னணி நாயகர்கள்போல் அல்லாமல் இப்படத்தின் கதாபாத்திரங்கள் கதையின் இயல்பான போக்குக்கு வழிவிட்டுக் கதைக்குள் புதிதாக நுழையும் சக கதாபாத்திரங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பவர்கள்.

திரைப்படத்தின் நிலம் இஸ்ரேல் என்றாலும் அப்படம் முன்னிறுத்தும் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டவில்லை.

இப்படத்தில் இடம் பெறும் சூழல்களுக்குக் குறிப்பிட்ட காலம் எதுவும் இல்லை. இதன்மூலம் படத்துக்கு ஒரு காவிய அழகைத் தந்துவிடுகிறார் இயக்குநர் பென்னி டொராட்டின்.

ஒரு நதியின் திருப்பத்தில் பாயும் ஓசையில் ஒரு லயம் இருப்பதுபோல மொத்தப் படமுமே சீரான இசையலையில் மிதந்து செல்வதை உணர்கிறோம். இசையமைப்பாளர் மார்க் எலியாஹூ. இந்தப் பாடல்கள் ஏற்கெனவே அவர் பலமுறை பல மேடைகளில் பாடிப் பரவியவை. அவற்றைத் தகுந்த பின்னணியோடு பயன்படுத்தியது மட்டுமல்ல; சாகக் கிடக்கும் தந்தைக்காக எப்போதோ திட்டமிட்டு நடக்காமல்போன சிம்பொனியை அவருடைய முக்கிய நண்பரான யாசோப் தவிலாவைத் தேடி அதை நிறைவேற்றப் படம் முழுவதும் இசைக்கலைஞர்களைத் தேடி அலைந்துதிரியும் அம்ராமாக நடித்துள்ள அவரது நடிப்புப் பங்களிப்பும் படத்தைத் தகுதிவாய்ந்த கலைப்படைப்பாக மாற்றித் தந்துள்ளது.

சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜனல் சவுண்ட் ட்ராக், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம் ஆகியவற்றுக்காக விருதுகளைப் பெற்றுள்ள இந்த இசைக்காவியத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெறும் பாடலுக்கான >https://www.youtube.com/watch?v=FA2Xku_THv0 எனும் இந்த யூடியூப் இணைப்பில் (50க்கும் மேற்பட்ட கான்செர்ட்நிகழ்வுகளில்) நுழைந்து வாழ்நாளின் புதிய கதவுகளைத் திறந்து இசையாறுங்கள்.

SCROLL FOR NEXT