சரவணனும் (உதயநிதி), தேன்மொழியும் (ரெஜினா) பள்ளிப் பருவ நண்பர்கள். சதா மோதிக்கொண்டே இருக்கும் இருவரது குடும் பங்களும் வேலை நிமித்தம் பிரிந்துவிடுகின்றன. உதயநிதி வளர்ந்து இளைஞரான பிறகு, வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டே இருக்கிறார். ஒரு லெட்டர்பேடு கட்சியில் சேர்ந்து அரசியலில் இறங்குகிறார். இந்தச் சம யத்தில், ஊரை விட்டுப் போன ரெஜினாவின் குடும் பம் திரும்ப வருகிறது. ரெஜினாவைக் கண்டதும் உதயநிதி காதல் கொண்டு உருக, ரெஜினாவோ பழையபடி சீறுகிறார். அவரை வேறொரு மாப் பிள்ளைக்கு நிச்சயமும் செய்கிறார்கள். இந்தச் சூழலில் சரவணனுக்கு உதவ வருகிறது ஒரு அமானுஷ்ய சக்தி. அது யார், சரவணனின் காதல் என்ன ஆச்சு என்பதுதான் இப்படத்தின் கதை.
ஆவி, அமானுஷ்யம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு கலகலப்பான நாடகம் ஒன்றைத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் எழில். நகைச்சுவை யைப் படம் முழுவதும் தூவுகிறேன் என்ற பெயரில் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் லாஜிக் என்ற கட்டுக்குள் சிறிதும் அடங்காத கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறார்.
திருமணப் பஞ்சாயத்துக் காட்சியில் மட்டும் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது. யோகி பாபு வரும் சில காட்சிகளில் நகைச்சுவை லேசாக இழை யோடுகிறது. மற்றபடி, பெரும்பாலான காட்சிகளில் புன்முறுவலுக்குக்கூட இடம்தராத கற்பனை வறட்சி, பார்வையாளர்களை நெளிய வைக்கிறது.
கதையின் முக்கியத் திருப்பமாக இருக்கும் அமா னுஷ்ய சக்திக்குத் தரப்படும் அறிமுகம் நன்றாக இருக்கிறதே தவிர, அதன் பிறகு மற்றவர்களின் உடலுக்குள் அது வருவதும், செல்வதும் மிகவும் பலவீனமான சித்தரிப்பாக இருக்கிறது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படக் கூடாதோ, அப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆவி வரும் காட்சிகளில் எந்த த்ரில்லும் இல்லை. சிருஷ்டி டாங்கே வரும் பின்னோட்டக் காட்சிகள் பரவாயில்லை.
கடந்த இரு படங்களில் சற்றே அர்த்தமுள்ள பாத்திரங்களை ஏற்கத் தொடங்கிய உதயநிதி இந்தப் படத்தில் மீண்டும் காமெடி, காதல் பக்கம் திரும்பியிருக்கிறார். இந்தக் கதையில் உதயநிதிக்கான வேலை குறைவு. நண்பர்களுடன் அரட்டை, காதல், டூயட், குத்தாட்டம், சண்டை என்ற கலவையைத் தன்னால் முடிந்தவரை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.
ரெஜினாவும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத் திரத்தை ஒழுங்காகச் செய்திருக்கிறார். காதல், பாடல் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது. சிருஷ்டி டாங்கே சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களை ஈர்த்துவிடுகிகிறார்.
சூரி, மதுமிதா, ரவி மரியா, ரோபோ சங்கர், ஜி.எம். குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் என்று நகைச்சுவை நடிகர்களின் கூட்டம் நெருக்கித் தள்ளினாலும் சிரிப்பு மட்டும் வரவில்லை!
இமான் இசையில் எல்லாப் பாடல்களும் மிகத் தெளிவாகப் பழைய மெட்டுகளில் ஒலிக்கின்றன. ‘எம்புட்டு இருக்குது ஆசை’ பாடல் காதுகளில் ரீங்கரிக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
காமெடி படமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு கதை, மனதில் நிற்கும் பாத்திரங்கள், சிறிதளவாவது தர்க்கம் ஆகியவை தேவை என்பதை, அவற்றின் இன்மையின் மூலம் உணர்த்தும் படம்.