நடிகர் திலகம் எனும் பிறவிக் கலைஞனைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது வேலூர்தான். வேலூர் மண்ணின் மைந்தரான பி.ஏ. பெருமாள் முதலியார், திரைப்பட விநியோகத் தொழிலில் இருந்து, அதன் அடுத்த கட்டமான திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தபோது அவரைக் கவர்ந்தது பராசக்தி நாடகம். இந்த நாடகத்தைத் தனது ‘நேஷனல் பிக்ஸர்ஸ்’ மூலம் திரைப்படமாகத் தயாரித்து, நடிகர் திலகத்தைத் தமிழ்நாட்டுக்கு அளித்தார். புராணப் படங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சமூகச் சீர்திருத்தம் என்னும் புதிய பாதையில் தமிழ் சினிமாவில் புதுயுகமொன்றைத் தொடங்கி வைத்தது பராசக்தி திரைப்படம் . சிவாஜியைப் பராசக்தி படத்துக்கு நாயகனாகத் தேர்ந்தெடுத்த பிறகு, பலரும் அவரை நீக்க வேண்டும், வேறு நாயகன் அமர்த்திக்கொள்ளலாம் என வற்புறுத்தியபோதும், பிடிவாதமாக இருந்து சிவாஜியையே நடிக்க வைத்தாராம் பெருமாள் முதலியார்.
இந்த நன்றியைக் கடைசிவரை மறக்காத சிவாஜி, ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் இரண்டு நாட்கள் முன்பு, பொங்கல் சீரூடன் வேலூர் சென்று பெருமாள் முதலியார் வீட்டில் கொடுத்துவிட்டு அவரிடம் வாழ்த்துப் பெற்றுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். பெருமாள் முதலியார் இறந்த பிறகும் இதை நிறுத்தவில்லை சிவாஜி. அதேபோல “நான் இறந்தாலும் சீர் நீற்கக் கூடாது” என்று சிவாஜி தனது வாரிசுகளுக்கு உத்தரவிட்டதால், சிவாஜியின் மறைவுக்குப் பிறகும் தற்போது பொங்கல் சீர் வழக்கத்தை, சிவாஜியின் வாரிசுகள் பிரபுவும், ராம்குமாரும் தொடர்கிறார்கள்.