'டாய் ஸ்டோரி' படத்தின் நான்காம் பாகம், ஜூன் 16, 2017 அன்று வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. டாய் ஸ்டோரியின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜான் லாஸெடர், நான்காம் பாகத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான பிக்ஸார் நிறுவனம பல அற்புதமான அனிமேஷன் படங்களைத் தயாரித்துள்ளது. கம்ப்யூட்டர் அனிமேஷனை வைத்து முதன் முதலில் தயாரிக்ப்பட்ட முழு நீளத் திரைப்படம் என்ற பெருமை 1995-ம் ஆண்டு வெளியான டாய் ஸ்டோரிக்கு (முதல் பாகம்) உள்ளது.
தொடர்ந்து பிக்ஸார் நிறுவனம் தயாரித்த பல்வேறு அனிமேஷன் படங்களும், டாய் ஸ்டோரியின் அடுத்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. மூன்றாம் பாகத்தோடு டாய் ஸ்டோரி திரைப்பட வரிசை முடிவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்காம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள இயக்குநர் ஜான் லாஸெடர், "டாய் ஸ்டோரி கதாபாத்திரங்கள் எங்கள் குடும்பத்தை போல. அனைத்து பாத்திரங்களும் எங்களுக்குப் பிடித்தமானவை. இதற்கு முன் வெளியாகிய டாய் ஸ்டோரி படங்களை விஞ்சும் விதமாக இருக்க வேண்டும் என்பதால், இதுநாள் வரை, அடுத்த பாகத்தைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை.
டாய் ஸ்டோரியின் பிரதான பாத்திரங்களின் கதை அற்புதமாக முடிக்கப்பட்டது. அந்தக் கதை தந்த நிறைவினால், நான்காம் பாகத்தைப் பற்றி நாங்கள் நீண்ட நாட்கள் சிந்திக்கவில்லை. ஆனால் ஆண்ட்ரூ (வால்-இ இயக்குநர்) மற்றும் லீ (டாய் ஸ்டோரி 3 இயக்குநர்) யோசித்துள்ள புதிய கதைக்கருவைக் கேட்டவுடன் என்னால் அடுத்த பாகத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. கண்டிப்பாக இதை நாங்கள் எடுக்க வேண்டும், அதை நானே இயக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஜான் லாஸெடர்