இந்து டாக்கீஸ்

திரைப்பார்வை: காத்திருப்பின் பரிமாணங்கள் - வெயிட்டிங் (இந்தி, ஆங்கிலம்)

என்.கெளரி

அன்புக்குரியவர்கள் உயிருடன் திரும்பி வருவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் மருத்துவ மனையில் காத்திருக்கும் இரண்டு பேரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது ‘வெயிட்டிங்’ திரைப்படம் (ஹிங்கிலிஷ் மொழித் திரைப்படம், அதாவது இந்தியும் ஆங்கிலமும் கலந்த கலவை). காத்திருப்பின் பரிமாணங்களை எந்தவித நாடகத்தனமும் இல்லாமல் இயக்குநர் அனு மேனன் இந்தப் படத்தில் இயல்பாகத் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

ஷிவ் நட்ராஜ் (நசிருத்தீன் ஷா), மருத்துவமனையில் எட்டு மாதங்களாக கோமாவில் இருக்கும் தனது மனைவி பங்கஜாவை (சுஹாசினி) கவனித்துவருகிறார். புதிதாகத் திருமணமாகியிருக்கும் தாரா (கல்கி கேக்கிலான்), சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் ரஜத்தை (அர்ஜுன் மாதுர்) பார்க்க மும்பையிலிருந்து கொச்சி வருகிறாள். மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தில் ஷிவ்வும் தாராவும் நட்புடன் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்கிறார்கள்.

அந்த இருவர்

திருமணமாகி நாற்பது ஆண்டு களாகும் பேராசிரியர் ஷிவ், எப்படியும் தன் மனைவி கோமாவிலிருந்து மீண்டு வந்துவிடுவாள் என்று மருத்துவமனையில் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் கழிக்கிறார். ஆனால், திருமணமாகிச் சில வாரங்களே ஆகியிருக்கும் தாரா, இதற்கு நேர்மாறாகச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் கோபத்தோடும் குழப்பத்தோடும் அவநம்பிக்கையோடும் இருக்கிறாள்.

துயரமான நேரத்தில் நண்பர்களோ உறவினர்களோ ஆறுதல் சொல்ல அருகில் இல்லாதபோது இரண்டு அந்நியர்களுக்கு இடையே ஏற்படும் நட்பை மனித வாழ்க்கையின் தத்துவங்களுடன் பதிவுசெய்கிறது ‘வெயிட்டிங்’.

நேர்த்தியான காட்சியமைப்பு

இந்தப் படத்தின் திரைக்கதை (அனு, ஜேம்ஸ் ருஸிக்கா, அதிகா) கசப்பான, நகைச்சுவையான தருணங்களை நேர்த்தியாக நகரவைக்கிறது. ஷிவ்வுக்கும் தாராவுக்குமான நட்பை இயல்பாகக் கையாண்டிருப்பதும், இந்த இருவருக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியை விளக்கும் காட்சிகளும் கச்சிதம்.

எழுபது வயது பேராசிரியர் ஷிவ்வுக்கு, டிவிட்டரை ‘நோட்டீஸ் போர்ட்’ என்று தாரா விளக்கும் காட்சி, துன்பத்தின் பல்வேறு படிநிலைகளை ஷிவ், தாராவுக்கு விளக்கும் காட்சி போன்றவை இந்தத் தலைமுறை இடைவெளியை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

இவர்கள் இருவரின் கதாபாத்திரங்களைப் போல, டாக்டர் நிருபம் மல்ஹோத்ரா (ரஜத் கபூர்), கிரீஷ் (ராஜீவ் ரவீந்தரநாதன்) போன்ற மற்ற கதாபாத்திரங்களும் நம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நசிருத்தீன் ஷாவின் கட்டுப்பாட்டில்

தாராவின் கதாபாத்திரத்தில் கல்கி வெகு இயல்பாகப் பொருந்திப்போகிறார். நசிருத்தீன் ஷா, அமைதியான ஷிவ் கதாபாத்திரத்துக்கு அழகாக உயிர்கொடுத்திருக்கிறார். அவரது நயமான நடிப்பால் படம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

அன்புக்குரியவர்கள் உயிர் பிழைப்பதற்காகக் காத்திருப்பதாகவும், அவர்களுடைய பிரிவின் வேதனையைப் பேசுவதாகவும் இருந்தாலும் இந்தப் படத்தில் பெரிய துயரமான காட்சி எதுவும் இடம்பெறவில்லை. பெரும்பாலான பகுதிகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரிய அயர்ச்சியை ஏற்படுத்தாதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அனு மேனன்.

இந்தப் படத்தில் வாழ்க்கையின் தத்துவங்களை எளிமையான தருணங்களில் விளக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்கு அதிகாவின் வசனங்களும் பெரிய அளவில் உதவுகின்றன. “எனக்கு பேஸ்புக்கில் 1,500 நண்பர்கள் இருக்கிறார்கள், டிவிட்டரில் 5,000 ‘ஃபாலோயர்ஸ்’இருக்கிறார்கள்.

ஆனால், இப்போது எனக்கு நண்பர்கள் தேவைப்படும்போது என்னுடன் யாரும் இல்லை” என்று தாரா சொல்லும் காட்சி. அதே மாதிரி டாக்டர் நிருபம், நோயாளிகளுக்கு எப்படி மோசமான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று ஜூனியர் டாக்டருக்கு விளக்கும் காட்சி போன்றவை படத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றன.

மிக்கி மெக்கிளியரியின் பின்னணி இசை, ஒரு மணி நேரம் நாற்பத்தெட்டு நிமிடங்களே ஓடும் கச்சிதமான படத்தொகுப்பு போன்றவை படத்தில் வசீகரிக்கும் அம்சங்கள்.

நிரந்தரப் பிரிவின் துயரத்தையும் காத்திருப்பின் வலியையும் இணைத்து ஓர் உணர்வுபூர்வமான திரை அனுபவத்தை வழங்குகிறது ‘வெயிட்டிங்’.

SCROLL FOR NEXT