இன, மத, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் இசை, நாடகம், திரைப்படம் உள்ளிட்ட கலை வடிவங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றியடைந்த கலைஞர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் டூபாக் என்றழைக்கப்படும் டூபாக் அமரு ஷகூர். புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் . மது ஒழிப்புக்கு எதிராகத் தன்னிச்சையான பிரச்சாரப் பாடல்களைப் பாடி, பொதுமக்களைக் கவர்ந்து, ஆட்சியாளர்களின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்ட நம்மூர் கோவன் போன்றவர் என்று டூபாக்கைச் சொல்லலாம்.
என்ன ஒன்று, நிறவெறிக்கு எதிரான டூபாக்கின் பாடல்கள் அடங்கிய சிடிக்கள் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. கோவன் போன்ற கலைஞர்கள் அங்கீகாரத்துக்குப் பதிலாக அடக்குமுறையையே சந்தித்து வருகிறார்கள்.
சிறந்த கவிஞர், நடிகர், ஹிப் ஹாப், ராப் நடனக் கலைஞர் எனத் தனது திறமைகள் அனைத்தையும் நிறவெறிக்கு எதிராகப் பயன்படுத்திய இவர் 1971-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிறந்தவர். சிறுவயது முதலே அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான நிறவெறி மனோபாவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டவர். பள்ளிப்பருவம் முதலே ராப் இசை மீது கவனத்தைக் குவித்த டூபாக் ‘டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட்’ என்னும் ராப் குழுவில் ஒரு நடனக்காரராகத் தன் கலைவாழ்வைத் தொடங்கினார். 1991-ல் டூபாக்கின் முதல் ராப் இசை ஆல்பமான ‘2 பாக்கலிப்ஸ் நௌ’ வெளிவந்து ராப் இசை விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. ஆனால், அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் நிறவெறியை ஆதரிப்பவர்களின் மத்தியில் கோப மூட்டியது.
1991 முதல் 1996 வரை ஐந்து இசைத் தொகுப்புகளைப் படைத்த டூபாக்கின் ராப் படைப்புகள் 7.5 கோடி சிடிக்கள் விற்று சாதனை படைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் பின்தங்கிய அமெரிக்கப் பகுதிகளில் நடந்த வன்முறை, இனப் பாகுபாடு, போதைப் பொருள் பயன்பாடு போன்ற சமூகப் பிரச்சினைகளை, மிரட்டல்களை மீறி டூபாக் ராப் இசைப் பாடல்களாகப் படைத்து வந்தார்.
1994-ல் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானார். பாலியல் குற்றத்துக்காக 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். ஹிப் ஹாப், ராப் நடனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த டுபாக் ஷகூர் 1996-ம் ஆண்டு செப்டம்பர் 7-ல் லாஸ் வேகஸ் நகரில் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டுத் தனது 25-வது வயதில் மரணமடைந்தார். அவரது வாழ்க்கையை ‘ஆல் ஐஸ் ஆன் மீ’ என்ற விறுவிறுப்பான சம்பவங்கள் நிறைந்த படமாக உருவாக்கியிருக்கிறது ஹாலிவுட். டெமிட்ரியஸ் ஷீப் என்ற இளம் நடிகர், ஹிப் ஹாப் கலைஞர் டூபாக்காக நடித்திருக்கிறார். பென்னி பூம் இயக்கி இருக்கும் இந்தப் படம் இந்தியாவிலும் வெளியாகிறது.