இலக்கியப் புத்தகங்களை ஆய்வு செய்து ஆராய்ச்சிப் பட்டம் பெறுவது வழக்கம். சினிமாவை ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார் ஸ்ரீதேவி. சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் ‘சாகர சங்கமம்’ திரைப்படத்தைத்தான் அவர் ஆராய்ச்சிக்கெனத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெலுங்கு மொழித் துறையில் ‘கே.விஸ்வநாத்தின் திரைப்படங்களில் வெளிப்பட்ட சமூகக் கருத்துகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வில் தற்போது ஈடுபட்டுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து…
‘சாகர சங்கமம்’ படத்தை உங்களின் எம்.ஃபில். பட்ட ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தது ஏன்?
எல்லாக் கலைகளும் நதிகளைப் போல் வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் அனைத்தும் பண்பாடு என்னும் கடலில் கலப்பவைதான் என்னும் கருத்து அந்தப் படத்தில் அடிநாதமாக ஒலிக்கும். மேற்கத்திய பாணி கலை வடிவங்களில் இளைய சமுதாயம் மூழ்கியிருந்த காலத்தில் வெளிவந்த ‘சாகர சங்கமம்’, நமது பாரம்பரிய இசை, நடனத்தின் பெருமையைக் கலாபூர்வமாகக் காட்சிப்படுத்தியது.
இந்தப் படம் வெளிவந்த காலத்தில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கர்னாடக இசை போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு இளைஞர்களைத் தூண்டியது. அந்தப் படத்தில் மாறுபட்ட கலை வடிவங்களின் மீது எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்காமல், நம்முடைய கலை வடிவங்களின் மேன்மையை மட்டும் சொல்லியிருப்பார். நானும்கூட அந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டுதான் குச்சிப்புடி நடனத்தைக் கற்றுக்கொண்டேன். இந்தத் தாக்கமே என்னை அந்தப் படம் குறித்து ஆய்வு செய்யத் தூண்டியது.
உங்களின் எம்.ஃபில். பட்ட ஆய்வு குறித்து கே.விஸ்வநாத் என்ன சொன்னார்?
பெரிய இயக்குநர் என்பதைவிட மிகச் சிறந்த மனிதநேயர். அவரிடம் ஆய்வு குறித்துச் சொன்னவுடன், “அந்தப் படம் எடுக்கும்போது, பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் பேசப்படும் படைப்பாக அது இருப்பதும், அந்தப் படைப்பைக் குறித்து நீங்கள் ஆய்வு செய்வதும் சந்தோஷம் அளிக்கிறது” என்றார்.
தற்போது உங்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கு நெருக்கமாக கே.விஸ்வநாத்தின் எந்தெந்தப் படங்களைக் குறிப்பிடுவீர்கள்?
என்னைப் பொறுத்தவரை கே.விஸ்வநாத்தை இந்தியாவின் பண்பாட்டுத் தூதுவர் என்றே சொல்வேன். அந்த அளவுக்கு அவரின் படங்களில் இசை, நடனம், இலக்கியம் எனக் கலையின் அனைத்து வடிவங்களும் முதன்மை இடம் பிடித்திருக்கின்றன. அவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களைப் பார்ப்பவர்கள் அந்தப் படங்களில் வெளிப்பட்டிருக்கும் ஆதாரமான கருத்தைத் தங்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க முயல்வார்கள்.
ஸ்ரீதேவி தனது கணவருடன் கே.விஸ்வநாத்தை சந்தித்தபோது
கே.விஸ்வநாத்தின் படங்களில் பொதுவாக முன்னிறுத்தப்படும் அம்சங்களின் முக்கியத்துவம் பற்றி...
நம் எல்லாருக்குமே வரதட்சிணை வாங்குவது சட்டப்படி குற்றம் எனத் தெரியும். கே.விஸ்வநாத்தின் ‘சுபலேகா’ என்னும் படத்தில் வரதட்சிணைப் பிரச்சினையை மிகவும் நுட்பமாகவும் நையாண்டி செய்யும் விதத்திலும் அணுகியிருப்பார். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதை அவர் அவர் கையாண்ட விதத்தால், வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்னும் எண்ணம் ரசிகர்களின் மனதில் தோன்றும்.
‘சூத்ரதாரலு’ என்னும் படத்தில் அரசியல்வாதிக்குப் பயப்படாமல் மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியரின் கதையைச் சொல்லியிருப்பார். மக்களின் சேவகனாக ஓர் அரசு அதிகாரி இருப்பதென முடிவெடுத்துவிட்டால், அரசியல்வாதியின் அச்சுறுத்தலிலிருந்து, அவரைக் காப்பதற்கு மக்களே திரண்டுவருவார்கள் என்பதைப் புரியவைத்திருப்பார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி அவரின் தொழிலின் மீது வைத்திருக்கும் பக்தி, மரியாதையைச் சொல்லும் படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஸ்வயம் க்ருஷி’.
குரு, சிஷ்ய பாணியின் பெருமையைச் சொல்லும் அதே நேரத்தில், குருவின் பொறாமை ஒரு திறமையான சீடரின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவரின் பொறாமைக் குணத்தாலேயே அவருக்கு வீழ்ச்சி எப்படி வருகிறது என்பதையும் ‘ஸ்வாதி கிரணம்’ படத்தில் உணர்ச்சிபூர்வமாகக் காட்டியிருப்பார். கடைசியில் அந்தக் குரு தன்னுடைய தவறுக்கு வருந்துவவார். ‘ஸ்வாதி முத்யம்’ படத்தில் விதவை மறுமணத்தை ஆதரித்திருப்பார்.
இப்படி கே.விஸ்வநாத்தின் படத்தில் சமூகத்துக்குப் பயன்படும், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய பல கருத்துகளும் பிரச்சார தொனியில் இல்லாமல் வெகு இயல்பாக இடம்பெற்றிருப்பதுதான், அவருடைய தனி முத்திரை.