இந்து டாக்கீஸ்

சிறப்பு முன்னோட்டம்: கிராமத்துப் பெண்மையின் சிறகுகள்!

நம்ரதா ஜோஷி

குஜராத் என்றதும் இனி ‘பார்ச்டு’ (Parched) திரைப்படமும் உங்கள் நினைவுக்கு வரகூடும். பாலின ஏற்றத்தாழ்வுகளாலும் ஆணாதிக்கத்தாலும் அடக்கிவைக்கப்பட்ட உலகில், நான்கு கிராமத்துப் பெண்களின் மகிழ்ச்சியையும், பரவசம் நிரம்பிய சுதந்திரச் சிறகடிப்பையும் பதிவுசெய்திருக்கிறது லீனா யாதவ் இயக்கியிருக்கும் ‘பார்ச்டு’ திரைப்படம்.

உச்ச நட்சத்திரங்களைக் கொண்டு ஏற்கெனவே பாலிவுட்டில் இரண்டு ஆஃப் பீட் படங்களை இயக்கியவர் லீனா யாதவ். இம்முறை இவர் இயக்கியிருக்கும் ‘பார்ச்டு’ சர்வதேசத் திரைப்பட விழாக்களை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ‘கிராமத்தில் பாலுறவு’ என்று விவரிக்கிறார் இயக்குநர்.

கிராமத்துப் பெண்களிடம் பாலியல் உணர்வைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போது இந்தப் படத்தின் கருவைத் தீர்மானித்ததாகச் சொல்கிறார் அவர். “இந்தப் படம் தீவிரப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை. பெண்மையின் கொண்டாட்டம், பெண்களின் மகிழ்ச்சி, பரவசம் போன்றவற்றையும் பேசுகிறது. இது ஓர் இருண்ட, சோர்வான படமாக மட்டுமல்லாமல் அழகான படமாகவும் இருக்கும்” என்கிறார் லீனா.

அதேபோல், பாலியலைப் பற்றியில்லாமல் மனிதத்தைப் பற்றியதாகவும் இந்தப் படம் இருக்கும். ஆண் - பெண், பாதிக்கப்பட்டவர்-குற்றவாளி என்ற பிரிவுகள் எல்லாம் கிடையாது. மரபுகள், நெறிகள், கட்டுப்பாடுகள் போன்றவைதான் வில்லன்கள்” என்று சொல்கிறார் அவர்.

குஜராத்தின் கிராம வாழ்வியல்

‘பார்ச்டு’படத்தின் பின்னணி கிராமப்புறமாக இருந்தாலும், சர்வதேசத் திரையிடலின்போது பார்வையாளர்கள் அதைப் புரிந்துகொண்டு வரவேற்றதாகச் சொல்கிறார் அவர். “பிரச்சினைகளை மறுப்பதிலிருந்துதான் அது தொடங்குகிறது. சில பார்வையாளர்கள் குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறை போன்றவையெல்லாம் இன்னுமா இந்தியாவில் நடக்கிறது என்ற முன்னெண்ணத்துடன் படத்தை அணுகுகின்றனர்.

ஆனால், அவர்களும் அந்த மாதிரி நிகழ்ச்சிகளைத் தங்கள் கண்ணால் பார்த்திருப்பதால் கடைசியாக வலியுடன் உண்மையை ஏற்றுக்கொள்கின்றனர். நகரத்தில் வசிக்கும் நாம் பாலினப் பிரச்சினையெல்லாம் வேறு எங்கோ நடக்கிறது என்று நினைக்கிறோம். அவையெல்லாமே நம் வீட்டின் உள்ளேதான் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், நாம் கதவை மூடித் திரைச்சீலையைப் போட்டுக்கொள்கிறோம்” என்கிறார்.

சர்வதேச அங்கீகாரம்

‘பார்ச்டு’ படத்தைப் பற்றி நடிகை தன்னிஷ்டா சட்டர்ஜியிடம் தற்செயலாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். நடிகை தன்னிஷ்டா தன்னுடைய ‘ரோட்’, ‘ஜல்’ போன்ற வரிசையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் இரண்டும் குஜராத்தின் கட் மாவட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது லீனாவின் படமும் கட் மாவட்ட கிராமங்களைப் பின்னணியாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நான்கு முக்கியப் பெண் கதாபாத்திரங்களில் ராதிகா ஆப்தேயும் ஒருவர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேசப் பட விழாக்களில் திரையிட ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் படம் நிறைய பாராட்டுகளைக் குவித்துவருகிறது. டோராண்டோ திரைப்பட விழா உள்ளிட்ட 22 சர்வதேசப் பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்தப் படத்தில் சர்வதேசத் தொழில்நுட்பக் கலைஞர்களான ரஸல் கார்பெண்டர் (ஒளிப்பதிவாளர்), கெவின் டென்ட் (படத்தொகுப்பாளர்) உள்ளிட்டோர் பணியாற்றியிருப்பதும் இந்தப் படத்துக்குச் சர்வதேச அங்கீகாரத்தைத் தேடித்தந்திருப்பதாகச் சொல்கிறார் லீனா.

அனுமதி மறுப்பு

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் பெரிய உதவிசெய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. குஜராத்தின் கட் மாவட்ட கிராமங்களின் நிஜமான வாழ்க்கை முறையைப் பின்னணியாக வைத்துத்தான் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார் லீனா. ஆனால், கிராமத்தினர் தங்களுடைய கிராமத்துப் பெண்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று படப்பிடிப்பை அங்கே நடத்த விடவில்லையாம். அதனால், படப்பிடிப்பை ராஜஸ்தானில் நடத்தியிருக்கிறார் லீனா.

இந்தப் படம் தற்போது பிரான்சிலும், மெக்சிகோவிலும் திரையிடப்பட்டுவருகிறது. நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்தப் படம் விரைவில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது.

தமிழில் சுருக்கமாக: என். கெளரி

SCROLL FOR NEXT