இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: நாய்கள் ஜாக்கிரதை

இந்து டாக்கீஸ் குழு

ஒரு நாயைக் களத்தில் இறக்கி நாயகன் ஆடும் ஆட்டம்தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’.

சக காவல்துறை நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை, குடி என்று ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞன் கார்த்திக் (சிபிராஜ்). கடத்திவைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்றப்போன இடத்தில் கடத்தல் கும்பல் தலைவனின் தம்பி கொல்லப்படுகிறான். அதற்காக கார்த்திக்கைப் பழிவாங்க கடத்தல் கும்பல் துடிக்கிறது.

இதற்கிடையே, கார்த்திக்குக்கு எதிர் வீட்டு மிலிட்டரி அங்கிள் வளர்க்கும் சுப்ரமணி என்ற நாய் அறிமுகமாகிறது. தன் அறையைச் சுற்றிச் சுற்றி வரும் சுப்ரமணியைப் பிடிக்காமல் அதை எப்படியாவது விரட்டி அடிக்க வேண்டும் என்று இறங்கும் கார்த்திக் மெல்ல மெல்ல அதன் நண்பனாக மாறுகிறான். அதற்குப் பயிற்சி கொடுத்து காவல்துறை செயலுக்கு உதவி செய்யும் பிராணியாக மாற்றுகிறான்.

இந்த நேரத்தில் கடத்தல் கும்பலால் கார்த்திக்கின் மனைவி கடத்தப்படுகிறாள். கார்த்திக் அந்த கும்பலை எப்படி நெருங்கு கிறான், மனைவியை எப்படி மீட்கிறான், இதில் நாயின் பங்கு என்ன என்று மீதிக் கதை நகர்கிறது.

பாத்திரங்களையும் கதையின் பின்னணி யையும் விரிவாக அறிமுகப்படுத்திவிட்டு கதைக்குள் வருவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடுகிறது. அதன் பிறகு வேகமெடுக்க வேண்டிய திரைக்கதை மந்தமாகவே நடைபோடுகிறது. வேறு சில படங்களையும் அங்கங்கே நினைவுபடுத்துகிறது.

திரைக்கதை முழுவதும் நாயை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது படத்துக்கு பலம். ‘இதோ’ என்னும் பெல்ஜிய ஷெப்பர்டு நாயை நம்பி படம் எடுத்ததற்காக இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனின் முயற்சியைப் பாராட்டலாம். ஆனால், ராம நாராயணன் மேஜிக்கை எல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கக் கூடாது. ‘இதோ’வின் சாகசங்களை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். கார்த்திக் ‘இதோ’ பிணைப்பை வெளிப் படுத்தும் வகையில் ‘நெஞ்சில்’ பாடலைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

சிபிராஜுக்கு இந்த படம் கோலிவுட்டில் பிரேக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நண்பர்களுடன் அரட்டை, சண்டை ஆகிய காட்சிகளில் குறை வைக்கவில்லை. ஆனால், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் இன்னும் நிறைய மெருகேற வேண்டிருக்கிறது.

சிபிராஜ் மனைவியாக அருந்ததி. நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால், கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தியிருக்கிறார். இறந்துவிடப் போகி றோம் என்பதை உணரும் நேரத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியாகப் பேசும் இடத்தில் மிளிர்கிறார்.

வில்லனாக பாலாஜி வேணுகோபால். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ ட்ராக் வில்லத்தனத்தை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

நாயையும் முழுமையான ஒரு பாத்திரமாக உணரும் அளவுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

பாடல் காட்சியில் அறிமுகம் அல்லது நாயகனுடன் மோதல் என்று நாயகியை அறிமுகப்படுத்தாமல், கணவன் மீது யதார்த்தமான அன்பை வெளிப்படுத்தி சண்டை போடும் சராசரி மனைவியாக நாயகி அறிமுகமாவது அழகு. கதாநாயகியைத் திரையில் தன் வயது 32 என்று சொல்லவைத்ததன் மூலம் கதாநாயகிகளின் வயது பற்றிய பிம்பத்தை இயக்குநர் உடைத்திருக்கிறார்.

நாய் வளர்க்கும் மிலிட்டரி அங்கிள் இறந்துவிட்டதாக நாயகனுக்குத் தெரியவரும் இடம் மென்மை.

மரப்பெட்டியில் அடைத்துப் புதைக்கப் பட்ட அருந்ததியை கேமரா பதிவின் வழியே அறிந்துகொள்ளும் சிபிராஜ், மழைத் தண்ணீர் மரப்பெட்டிக்குள் செல்வதைப் பார்த்து ஊட்டி என்று கண்டுபிடிப்பது சினிமாத்தனம். இப்படிப் பல இடங்கள்.

சில வினாடிகள் வந்துபோகும் மனோபாலா அடிக்கும் காமெடி அளவுக்கு, சிபிராஜுடன் இருக்கும் நண்பர்கள் அடிக்கும் நகைச்சுவை மனதில் ஒட்டவில்லை.

நிஸார் ஷஃபியின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்றவைக்கிறது. பிரவீண் எடிட்டிங் கச்சிதம். தரண்குமாரின் இசையில் ‘நெஞ்சில்’ என்ற பாடல் இனிமை. பின்னணி இசை அவ்வளவாகக் கவரவில்லை.

வித்தியாசமான களம், விறுவிறுப்பான கதை... முடிந்தவரை நன்றாக கையாண்டி ருக்கிறார் இயக்குநர். இன்னும்கூட முயற்சித்திருக்க முடியும். நாய்க்கும் நாயகனுக்கும் இடையே நெருக்கம் உருவாகும் விதமும் நாயை நடிக்கவைத்த விதமும் இதை வித்தியாசமான படமாக ஆக்கியிருக்கின்றன.

SCROLL FOR NEXT