தனது இயக்குநர் நாற்காலியை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கி இம்முறை நாயகனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் நம் காதுகளை எட்ட, “இந்த வயசுல ஹீரோவா?” என்று அதையே முதல் கேள்வியாகக் கேட்டால், “இது ஹீரோ ரோல் கிடையாது. 75 வயசுல ஒரு கதாபாத்திரம். கதைதான் ஹீரோ. நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். கதாநாயகனுக்கும், கதையின் நாயகனுக்கும் வித்தியாசம் இருக்கு” என்று வெள்ளை தாடிக்குள்ளிருந்து சிரித்தபடி பேச ஆரம்பித்தார் எஸ்.ஏ.சி.
இந்தக் கதையில் நீங்கள் நாயகனாக நடிக்கக் காரணம் என்ன?
கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் நடித்தேன். ஆரம்ப காலத்தி லிருந்தே, சின்னச் சின்ன வேடங்கள் மற்றும் பாடல் காட்சிகள் ஆகியவற்றில் நடித்து வந்தவன் நான். ஆனால் நடிகனாக வேண்டும் என்று வரவில்லை. சினிமாவுக்கு வந்ததே இயக்குநராக வேண்டும் என்றுதான். நல்ல நல்ல விஷயங்களை நாட்டுக்குச் சொல்ல வேண்டும். அதில் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அதற்காக சினிமாவை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டேன்.
மூன்று ஆண்டுகள் கழித்து படம் இயக்கியுள்ளீர்கள். இந்த இடைவெளியில் கற்றுக் கொண்டது என்ன?
இன்றைக்கு ஜெயிக்கிற இளைஞர்கள் எப்படி எல்லாம் ஜெயிக்கிறார்கள் என்பதைப் படித்து, ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை இயக்கி இருக்கிறேன். படங்களை உடனே இயக்கி முடித்து, உடனுக்குடன் வெளியிட்டு விடுவதுதான் எனது வழக்கம். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் ஒரு வருடம் கதை பண்ணினேன், ஒன்பது மாதம் படப்பிடிப்பு நடத்தினேன். வெற்றி மட்டுமே என் கண் முன்னால் இருந்ததே தவிர, நாட்கள் போனதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைக்களங்கள் வருகின்றன. ‘டூரிங் டாக்கீஸ்’ எதில் வேறுபடும்?
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இரண்டு கதைகள் கொண்ட ஒரு படம். இடைவேளை வரை ஒரு கதை, அதற்குப் பிறகு ஒரு கதை. இரண்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு கதை ஆண்டிப்பட்டி என்றால், ஒரு கதை அமெரிக்கா. முதல் பாதி சிம்லாவில் ஆரம்பித்து டெல்லி, ஜெய்ப்பூர் இப்படி எடுக்கப்பட்ட படம். இரண்டாம் பாதி முழுவதும் தேனி, மதுரை, கம்பம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.
75 வயதைக் கடந்த ஒரு எனர்ஜெடிக் இளைஞனின் காதல் தேடுதல்தான் முதல் பாதி. இரண்டாம் பாதி ஒரு கிராமத்தில் இருக்கக் கூடிய ஏழைப் பெண் தனக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்துப் போராடுகிறாள், எப்படி ஜெயிக்கிறாள் என்பது. இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறதோ, அதைப் பொழுதுபோக்கு அம்சத்தோடு சொல்லியிருக்கிறேன்.
உங்கள் கதைக்குப் பெரிய நடிகர்கள் தேவைப்பட வில்லையா?
பெரிய ஸ்டார் நடிக்கிறார் என்றால், அவர் முகத்தை இரண்டரை மணி நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது வெற்றிக்கு ஒரு காரணம். ஸ்டார் இல்லையென்றால் காட்சிகளில் புதுமை செய்துதான் ஜனங்களை உட்காரவைக்க வேண்டும். இரண்டரை மணி நேரம் எப்படிப் புதுமுகத்தை பார்க்க முடியும். அதனால்தான் ஒரு மணி நேரம் ஒரு புதுமுகம், அடுத்த ஒரு மணி நேரம் இன்னொரு முகம் என்று முடிவு செய்து இரண்டு கதைகளை ஒரே படத்தில் வைத்தேன்.
ஒரு முழு நாவலைப் படிப்பதைவிட, இரண்டு சிறுகதைகளைப் படிப்பதில் சுவாரஸ்யம் அதிகம். இரண்டு கதைகளுமே ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணிதான் பண்ணினேன். இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்வதுபோல் இரண்டு கதைகளையும் ஒரு சின்ன இழையால் இணைத்துச் சொல்லியிருக்கிறேன்
உங்கள் மகன் விஜயை வைத்து மீண்டும் படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா?
அனைவருமே என்னிடம் கேட்கிறார்கள். நானே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு விஜய் சென்றுவிட்டார். அவரை வைத்துப் படம் எடுத்தால் நிச்சயமாக ஜெயித்துவிடுவேன். வெற்றி என்பது நிச்சயம். அதுல த்ரில் கிடையாது. நான் பண்ற படங்களில் ரிலீஸாகி அடுத்த நாள் வரைக்கும் அந்த த்ரில் இருக்கும். என்னதான் உழைத்தாலும், நல்ல கதை பண்ணினாலும் வெற்றி என்பது படம் வெளியான அடுத்த நாள் தீர்மானிக்கப்படுகிறது. ஸ்டார்களை வைத்துப் படம் பண்ணும்போது வெற்றி என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது. எப்போதுமே த்ரில் இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்.
‘கத்தி’ பெரும் சிக்கலைச் சந்தித்த சமயத்தில் விஜயிடம் என்ன பேசினீர்கள்?
எந்தத் தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள் வளர வளர பொறாமை அதிகமாகிக் கொண்டே போகிறது. அந்த நேரத்தில் நாம் மவுனமாக இருக்க வேண்டும். நாங்கள் அதைத்தான் கடைப்பிடித்தோம். எங்களை வைத்துப் படம் எடுக்கிற தயாரிப்பாளர் கோடி, கோடியாக முதலீடு பண்ணுகிறார். அதனால் தயாரிப்பாளரைக் காப்பாற்றுவதுதானே முதல் வேலை. நம் ஏதாவது பேசி, தயாரிப்பாளர் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. மவுனம்தான் அதற்குப் பரிகாரம் என்பதால் அமைதியாக இருப்பா என்றேன்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றனவே?
அதுதான் எனக்கே புரியவில்லை. அவரு எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா, நான் எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா. இரண்டு பேருமே சொல்லவில்லை. வரப்போகிறார், வரப்போகிறார் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார் கள். எப்படி என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசியலுக்கு வரும் வயது விஜய்க்கு இல்லை. எனக்கும் அரசியலுக்கு வரும் வயது தாண்டிவிட்டது