இந்து டாக்கீஸ்

பாலிவுட் வாசம்: கிறிஸ்துமஸ் விருந்து

வினு பவித்ரா

முன்னாபாய், த்ரீ இடியட்ஸ் ஆகிய படங்களின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் அறிமுகமான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இவரது இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்கும் பிகே படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த எல்லாரும் அந்தப் படத்தின் கதை என்ன, ஆமீர் கானின் கதாபாத்திரம் என்ன என்று ஊடகங்களில் தலையைப் பிய்த்துக்கொண்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். கிறுக்குத்தனமான உடைகளில் சாப்ளின் பாணி அபத்தங்களில் நாயகன் ஈடுபடுகிறான் என்பதைத் தாண்டி எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பிகே படத்தில் அமீர் கானுக்கு வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரம் என்பதுவரை வட இந்திய ஊடகங்கள் கதை சொல்லிவருகின்றன. ஆமீர் கான் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பழைய டூ இன் ஒன் ரெக்கார்டரை இடுப்பில் மறைத்துக்கொண்டிருக்கும் சுவரொட்டி ஒன்று வெளியானதிலிருந்தே பிகே தொடர்ந்த கவனத்தில் இருந்து வருகிறது. இப்படம் கிறிஸ்துமஸின்போது உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ஆமீர் கான், அனுஷ்கா சர்மா, சுசாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சய் தத் எனப் பெரிய நட்சத்திரப் படையே இப்படத்திற்காகத் திரண்டுள்ளது. ராஜ்குமார் ஹிரானியுடன் சஞ்சய் தத்தும், ஆமீர் கானும் சேர்ந்த படங்கள் ஏற்கனவே பாலிவுட்டை மறுவரையறை செய்திருக்கின்றன. இந்தப் படத்திற்காக அமீர் கானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகள் அத்தனையும் பழைய உடைகள். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் சாதாரண மக்களிடம் வேண்டிப் பெற்ற பழைய உடைகளைத் தான் இப்படத்தில் ஆமீர் கான் உபயோகித்துள்ளார். ராஜஸ்தானில் கதை நடக்கிறதென்றால் ராஜஸ்தானிய ஆண்கள் அணியும் உடைகள் கேட்டுப் பெறப் பெற்றுள்ளன.

இந்திய சினிமா வரலாற்றிலேயே நீண்ட நேர முத்தம் ஒன்றை ஆமீர் கானும், அனுஷ்கா சர்மாவும் வழங்க இருக்கிறார்கள் என்ற செய்தியும் இப்படத்திற்குக் கூடுதல் எதிர்பார்ப்பை வழங்கியுள்ளது.

சிறைக்குச் செல்வதற்கு முந்தைய நாள்வரை மிக உற்சாகமான மனநிலையுடன் சஞ்சய் தத் நடித்துக் கொடுத்திருக்கும் படம் பிகே.

பிகே-யின் இசையமைப்பாளர் சந்தனு மொய்த்ராவின் ‘லவ் இஸ் எ வேஸ்ட் ஆப் டைம்’ பாடல் ஏற்கனவே இளைஞர்களிடையே ஹிட் ஆகிவிட்டது. யூடியூபில் ஏற்கனவே ஐந்து லட்சம் பேர் அந்தப் பாடலைக் கண்டு களித்துவிட்டனர். அப்பாடலில் ஆமீர் கான் மற்றும் அனுஷ்கா சர்மாவின் கெமிஸ்ட்ரி மனதைக் கொல்கிறது.

ராஜ்குமார் ஹிரானியின் கதைகளைப் பொறுத்தவரை, எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் நகைச்சுவையோடும் கொஞ்சம் புத்தி சொல்பவையாக இருக்கும். அவரது நாயகர்களும் சற்று விசித்திரமானவர்களாகவே இருப்பார்கள். கொஞ்சம் முட்டாள்தனமும் நிறைய நல்ல குணமும் கொண்டவர்கள். லகே ரகோ முன்னாபாயில் காந்தியையும், அவரது அகிம்சைக் கொள்கைகளையும் ரௌடியாக வரும் நாயகன் மூலம் அழகாகச் சொல்லியிருப்பார். த்ரீ இடியட்ஸ் படத்தில் அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களையும் விட்டுக்கொடுக்காமலேயே, இந்தியக் கல்வி அமைப்பு மாணவர்கள் மீது செலுத்தும் ஒடுக்குமுறையைக் கதையாக அருமையாகச் சொல்லியிருப்பார். இயக்குநர் ராஜ்குமார் இப்படத்தின் மூலம் முதல்முறையாகத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

பிகே படம் என்ன செய்தியைச் சொல்லப்போகிறது? கிறிஸ்துமஸ் வரை காத்திருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT