கிருஷ்ணன் - பஞ்சுவில் ஆரம்பித்து ஜேடி - ஜெர்ரி வரை தமிழ் சினிமாவில் பல இரட்டை இயக்குனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். முதல் முறையாக இரட்டைச் சகோதரர்களான ராம் - லஷ்மணன், விதார்த் ஹீரோவாக நடிக்கும் 'வெண்மேகம்' என்ற படத்தின் மூலமாக இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். படத்தைத் தயாரிப்பது அவர்களது மனைவிமார்களான இரட்டையர்கள் சுனிதா - சுஜாதா. இயக்குனர்கள் ராம் - லட்சுமணனிடம் பேசியதிலிருந்து…
இரட்டையர்களாக உங்களின் பள்ளி நாட்கள் பற்றி?
எங்கள் சொந்த ஊர். பள்ளியில் நாங்கள் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினோம். பள்ளி இறுதித் தேர்வில் இருவரும் ஒரே மார்க் வாங்கி அப்போதே தினசரி செய்திகளில் இடம்பிடித்தோம். அப்போதே எங்கள் இருவருக்கும் ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. படிப்பை முடித்ததும் எங்கள் அப்பா ஒரு ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட்டார். மூன்று வருடம் பயின்று ஓவியத்தில் பட்டம் பெற்றோம்.
ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட உங்களுக்கு சினிமா மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
'பட்டப்படிப்பு முடிந்ததும் ஒரு விளம்பரக் கம்பெனியில் சில காலம் சேர்ந்தே பணியாற்றினோம். விளம்பரப் படங்களுக்கு ஸ்டோரி போர்டு வரைவது நாங்கள்தான். பின்னர் கோவையில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்து நாங்களே விளம்பரப் படங்கள் எடுக்க ஆரம்பித்தோம். இடையில் சினிமா பேனர்களையும் வரைந்திருக்கிறோம்.
தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் ரிலீஸானபோது கோவையில் நாங்கள் வரைந்த பெரிய பேரிய பேனர்கள்தான் தியேட்டர் வாசல்களில் இடம்பிடித்தன. அப்போதிருந்தே சினிமா மீது ஒரு ஆர்வம் இருந்தது. வெண்மேகம் படத்திற்கான கதை உருவானதும் இரண்டு பேர் மட்டுமே அதை மெருகேற்றினோம். மைனா படம் பார்த்த பிறகு எங்கள் கதைக்கு விதார்த் சரியாக இருப்பார் என்று அவரைச் சந்தித்துக் கதை சொன்னோம். அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே நாங்களே தயாரிப்பது என முடிவு செய்தோம். இதற்கு எங்கள் மனைவிமார்களின் ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது. படத்தில் விதார்த் ஓவியராக நடித்திருக்கிறார்.
உங்கள் மனைவிமார்களை எப்படி, எங்கே சந்தித்தீர்கள்?
அவர்களும் பாலக்காடுதான். எங்கள் அப்பாவுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இரட்டையர்களையேதான் ஜோடி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு குடும்ப விழாவில்தான் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தோம். பின்னர் இரண்டு குடும்பத்தார்களும் கலந்து பேசி திருமணத்தை முடித்துவைத்தார்கள். இப்போது எங்கள் இரண்டு பேருக்குமே தலா ஒரு மகன். பார்ப்பதற்கு அவர்களும் இரட்டையர்கள் போலவே இருப்பார்கள்.
இயக்குனர் அனுபவம் எப்படி இருந்தது?
புதியவர்களான எங்களுக்கு விதார்த், ரோகிணி, மற்றும் காமிராமேன் ஜித்து தாமோதரன் உட்பட அனைவருமே மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். திட்டமிட்டபடி அறுபது நாட்களில் சென்னை, விசாகப்பட்டிணம், ஒடிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். முழுப்படத்திற்கும் நாங்கள் ஏற்கனவே ஸ்டோரி போர்டு வரைந்து வைத்திருந்ததால் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அது மிகவும் உதவியாக இருந்தது. படத்தின் கதை அளவுக்கு திட்டமிடுதலும் முக்கியம் என்பதை நாங்கள் இதில் உணர்ந்தோம்.
வெண்மேகம் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
பதின்ம வயதில் இருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்கிற மெசேஜைச் சொல்லி இருக்கிறோம். தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும்.