தமிழ்த் திரையுலகிற்கு சூடான ‘பீட்சா’வை சமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது ‘ஜில்' ஜிகர்தண்டாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே பல முன்னணி நட்சத்திரங்களின் பாராட்டுகளைப் பெற்றதால் அதை இரண்டாவது படத்திலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருந்தவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
‘பீட்சா’ மாதிரியான த்ரில்லர் படம்தான் ‘ஜிகிர்தண்டா’வா?
இது த்ரில்லர் வகையில்லை. ‘ஜிகிர்தண்டா’ ஒரு ஆக்ஷன் டிராமா. மதுரையைச் சுற்றி நடக்கும் கதையில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா, கருணா, ‘ஆரண்ய காண்டம்' சோம சுந்தரம், சங்கிலி முருகன், அம்பிகா இப்படி பல பேர் முக்கிய பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.
சித்தார்த், லட்சுமி மேனன் என்று ‘பீட்சா'வை விட அதிகமான நட்சத்திரப் பட்டாளத்தை வைத்திருக்கிறீர்களே?
எனக்கு ரொம்ப சவாலான படம் ‘ஜிகிர்தண்டா’. ஏனென்றால் ‘பீட்சா’ படத்தில் குறைவான நடிகர்கள்தான். ஒரு வீட்டுக்குள்ளயே நடக்குற கதை. ஆனால், ‘ஜிகிர்தண்டா’ அப்படியொரு கதை கிடையாது. நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். மதுரையை சுற்றி ரியல் லொகஷன்களுக்கு போய் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். பல விஷயங்கள் எனக்கே புதியதாக இருந்தது. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
மதுரையை பற்றி இதுவரைக்கும் கொலை, திருட்டு, பழிவாங்கல் இதே மாதிரியான கதைகள் தான் வந்துகொண்டிருக்கிறது. ‘ஜிகிர்தண்டா’ அந்த வகை தானா?
மதுரை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கும் படம்தான் ‘ஜிகிர்தண்டா’. இந்தப் படத்தில் எல்லோரும் மதுரையைப் புதியதாகப் பார்ப்பார்கள்.
‘பீட்சா' மாதிரி 'பீட்சா 2' போதிய வரவேற்பை பெறலையே?
‘பீட்சா' தயாரிப்பாளர் என்னைத் தான் 'பீட்சா 2' பண்ணுங்கன்னு கேட்டார். எனக்கு உடனே பண்றதுல உடன்பாடு இல்லை. ஆனால், ‘பீட்சா 2’ எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. ரொம்ப நல்லா பண்ணியிருந்தாங்க. ஏன் போதிய வரவேற்பை பெற லைன்னு எனக்கு தெரியலை.
முன்னணி இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி விட்டால் இயக்குநராகி விடலாம் என்ற காலம் போய், ஒரு நல்ல குறும்படம் இயக்கிவிட்டால் இயக்குநராகி விடலாம் என்ற காலம் வந்து விட்டதே?
அதுக்கு டெக்னாலஜிதான் காரணம் என்று நினைக்கிறேன். ஏன்னா, பத்தாயிரம் ரூபாய் இருந்தா ஒரு நல்ல குறும்படம் பண்ணிரலாம். அந்தளவிற்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு. முன்பு அப்படியில்லை, ஒரு முன்னணி இயக்குநர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து வேலை பாத்து, அவரு இந்த பையன் நல்லா வேலை பாக்குறான், சான்ஸ் கொடுங்கனு சொல்லிதான் இயக்குநராக முடியும்.
ஆனால், இப்போ அப்படி யில்லை. சொல்ல வந்ததை ரொம்ப தெளிவா குறும்படமா பண்ணிட் டோம்ன்னா, இயக்குநராகிற வாய்ப்பு ரொம்ப பிரகாசமா இருக்கு.
இலங்கையை பற்றி ஒரு குறும்படம் இயக்கி இருந்தீங்க. வரும் காலங்களில் இலங்கையை பற்றிய படம் எடுக்கும் எண்ணம் இருக்கா?
கண்டிப்பா பண்ணுவேன். ஆனால், அது எந்த ஒரு வியாபார நோக்கத்தோடு இல்லாமல் இருக்கணும்னும் நினைக்கிறேன். அந்த மாதிரி படம் பண்ணினா, படத்தைப் பார்த்து அதன் மூலமா ஏதாவது மாற்றம் நிகழணும். அதுலதான் அந்த படத்தோட வெற்றி இருக்கு. ஆனால், இலங்கை பற்றிய படம் இயக்குறதுக்கான காலம் இப்போ இல்லை.
நீங்க இயக்கப் போகிற படங்களைப் பத்தி உங்க மனைவிகிட்ட பகிர்ந்து கொள்வீர்களா?
கண்டிப்பா. என்னோட படங்கள் பத்தி யோசிக்க ஆரம்பிச்சு அதை எழுதி முடிக்கிற வரைக்கும் என்னோட மனைவிக்கும் பங்கு இருக்கு.
இப்போ உங்க வீட்டுல என்ன சொல்றாங்க?
நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணமே என்னோட குடும்பத்தினர் தான். எனக்கு எப்போதுமே ஊக்கம் அளிப்பது அவங்கதான். ‘சினிமான்னு முடிவு பண்ணிட்டா வேலையை விட்டுரு... பாத்துக்கலாம்’னு சொன்னாங்க. ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சுட்டு இருக்குறப்ப, இப்படி யார் சொல்லுவாங்க என் மீது அவ்வளவு நம்பிக்கை வைச்சுருந்தாங்க.
‘பீட்சா’ வெளியான அப்போ, என்னை விட ரொம்ப பயந்தது அவங்க தான். இப்போ ‘ஜிகிர்தண்டா’வுக்கும் பொறுப்போட பயந்துக்கிட்டு இருக்காங்க.