இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: நள்ளிரவில் ஒரு சூரியன்

மிது கார்த்தி

ஹாலிவுட்டில் திகில் படங்கள், சாகசப் படங்கள், அறிவியல் புனைவுப் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான காதல் கதையைச் சொல்ல வருகிறது ‘மிட் நைட் சன்’ என்ற படம்.

நாயகி கேட்டி பிரைஸுக்கு (த்ரோன்) விசித்திரமாக ஒரு நோய் உள்ளது. சிறு வயதிலிருந்தே சூரிய ஒளி உடலில் பட்டால் ஆகாது. அதனால் சூரிய ஒளியைக் கண்டாலே ஓடி ஒளிந்துகொள்வாள். உலகம் உறங்கும்போகும்போது இவளுக்குப் பொழுது விடியும். தனக்குப் பிடித்த கிட்டாரை இரவில் வாசித்தபடி ஊரை வலம் வருவது இவளது வாடிக்கை. அப்படி ஒரு நாள் வரும்போது நாயகன் சார்லியை (சுவாஷ்னெகர்) சந்திக்கிறாள். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். தனக்குள்ள விசித்திர நோயைக் காதலனிடம் நாயகி மறைத்துவிடுகிறாள். இந்த விசித்திர நோயால் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினைகளே ‘மிட் நைட் சன்’ படத்தின் கதை.

2006-ம் ஆண்டு ஜப்பானில் வெளியான ‘டையோ நோ உடா’ என்ற படத்தின் உல்டாதான் இந்த ‘மிட்நைட் சன்’. படத்தை ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான ஸ்காட் ஸ்பீர் இயக்கியிருக்கிறார். 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஒரு வழியாக முடிந்து மார்ச் 23 அன்று அமெரிக்கா, இந்தியா உள்பட உலகெங்கும் வெளியாகிறது.

SCROLL FOR NEXT