கடந்த ஆண்டு ஆறு படங்களில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது ‘புரியாத புதிர்’. இந்நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து…
கடந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் நீங்கள். வெற்றி - தோல்வி எப்படி?
நான் நடித்த படங்கள் வெவ்வேறு கதைகள் என்பதால் மக்களுக்கு போரடிக்கவில்லை என நினைக்கிறேன். ஒரு கதாபாத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் சம்பந்தமே கிடையாது. இந்த ஆண்டு மக்களின் ரசனை மீது பெரிய நம்பிக்கை கிடைத்துள்ளது. இனி நான் வருடத்துக்கு எட்டுப் படங்கள்கூட நடிக்கலாம்.
மக்களின் ரசனை மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது என்கிறீர்கள். ‘காதலும் கடந்து போகும்’ நேர்த்தியான படைப்பு. ஆனால், மக்களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லையே?
‘காதலும் கடந்து போகும்’ நல்ல படம்தான். வழக்கமானப் படங்களில் நாயகன், நாயகி, காதல், வில்லன், இது பிரச்சினை எனக் கடந்துவிடும். நாயகன் - நாயகி அறிமுகமானவுடன் இவர்களுக்குள் எப்படிக் காதல் வரப்போகிறது என்றுதான் நினைக்கிறோம். லோக்கலாக இருக்கும் ஒருவனுக்கும், பணக்காரப் பெண்ணுக்கும் காதல் வரணும் என்றால் என்ன காரணமாக இருக்க முடியும். அனைவரும் லோக்கலாக இருப்பவனைப் பார்த்து ஒதுங்குவார்கள், ஆனால் அவர்களோடு பழகிப் பார்த்தால் மட்டுமே, எவ்வளவு நல்லவர்கள் என்று தோன்றும். இதைப் புரிந்து கொண்டவர்கள் அப்படத்தைக் கொண்டாடினார்கள். இளைஞர்களை மிகவும் அப்படம் கவர்ந்தது. அப்படத்தின் திரைக்கதை அனுபவம் புதிது.
கதாபாத்திரங்களுக்காக என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறீர்கள்?
எந்தப் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. நான் மனிதர்கள் பார்க்கும் வேலையை மட்டுமே வெவ்வேறாகப் பார்க்கிறேன். மனிதர்களின் அடையாளம் அவர்களுடைய குணம்தான் என நினைக்கிறேன். நான் எந்த ஒரு படத்துக்கும் யாரையும் குறிப்பு எடுத்துச் செய்வதில்லை. ‘சேதுபதி’யில் 35 வயதைத் தாண்டிய ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்தேன். அந்த வயதில் ஒரு போலீஸ் அதிகாரி இருந்தால் என்னவாக இருப்பார் என்பதை மனதில் வைத்து நடித்தேன்.
இயல்பு வாழ்க்கையில் அவரும் ஒரு சாதாரண மனிதர்தானே, பார்க்கிற வேலை மட்டுமே போலீஸ். இதேமாதிரிதான் நான் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களும். அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகள்தான் வேறுபடுகின்றன. எனக்கு அந்தக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்தான் முக்கியம். அதை நான் என் இயக்குநரிடம் தெளிவாகக் கேட்டு உள்வாங்குவேன். கதாபாத்திரத்தின் தன்மை குறித்து இயக்குநர்களுக்கு என்னைவிட நன்றாகத் தெரியும். எங்கேயாவது அதை மீறி நடித்தால், உடனே இயக்குநர் சுட்டிக்காட்டுவார். எனக்குப் பயிற்சியில் உடன்பாடில்லை.
மக்களுக்கு போரடித்துவிடக் கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் உங்களை அப்டேட் செய்துகொள்கிறீர்கள்?
எனக்குத் தெரியவில்லை. என்னை மெருகேற்றுதலுக்கான பணி என் இயக்குநர்களோடு பணியாற்றும்போதுதான் நடக்கிறது என நினைக்கிறேன். புதிய புதிய காட்சிகள் வைக்கும்போதுதான் நடக்கிறது. என்னை மெருகேற்றிக்கொள்ள நிறையப் பணிகள் இருக்கின்றன. நிறையப் படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றால் மெருகேற்றிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். இளைஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சில விஷயங்களை அறியச் சமூக வலைத்தளமும் உதவுகிறது.
உங்கள் படங்களில் திரைக்கதையில் ஏதோ ஒரு வகையில் உங்களது பங்களிப்பு இருக்குமா?
அது எல்லா நடிகர்களுக்கும் இருப்பதுதான். நீங்கள் பார்க்கும் வேலையில் “ஏன் இப்படிப் பண்ணலாமே” என்று சொல்ல மாட்டீர்களா? கதாபாத்திரத்தை உருவாக்கி வடிவமைத்தவர்களுக்கும், அதை உள்வாங்கி நடிப்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. நடிக்கும்போது “இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே” எனத் தோன்றினால் சொல்வேன். அதை ஈடுபாடு என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, பங்களிப்பு எனச் சொல்லக் கூடாது. தற்போது கேமராவும் டிஜிட்டலாகிவிட்டதால்
நிறைய சுதந்திரம் இருக்கிறது. இயக்குநர் சொல்வது, எனக்குத் தோன்றுவது என இரண்டையுமே எடுத்துப் பார்ப்போம். எது நன்றாக இருக்கிறதோ, அதை அப்படியே படத்தில் வைத்துக்கொள்வார்கள். அதை என் இயக்குநர்தான் தேர்ந்தெடுப்பார். அதில் நான் தலையிடுவதில்லை.
பொதுவாக, உங்கள் படங்களில் நகைச்சுவை இழையோடுவதைக் கவனிக்க முடிகிறது. இதுவும் திட்டமிடல் சார்ந்ததா?
ஒரு கதையை இயக்குநர் அப்படித்தான் சொல்ல விரும்புவார். சுவாரசியம் குறையத் தொடங்கினால் படம் பார்த்துக்கொண்டே ஸ்மார்ட்போனை நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால் நகைச்சுவை தேவை. அதற்காக காமெடி திணிக்கப்படுவது இல்லை. கதையோடு சேர்ந்துதான் காமெடி இருக்க வேண்டும்.
நீங்கள் வசனம் எழுதும் உத்தி புதிதானது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அதுபற்றி..?
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு இயக்குநர் பிஜு விஸ்வநாத் காட்சி சொன்னார். அதை நடித்துப் பார்த்துத்தான் வசனம் எழுதினேன். அந்தக் காட்சியின் உடலமைப்பை எல்லாம் வைத்து வசனங்கள் மாறும். எனக்குக் காட்சியமைப்போடு வசனத்தைப் பார்த்துப் பழகிவிட்டது. இயக்குநர்கள் அறைக்குள் உட்கார்ந்து, ஒரு தனி உலகத்தையே உருவாக்குவார்கள். அதை சினிமாவாக மாற்றுகிறார்கள். எனக்கு அந்த அனுபவம் இல்லை. நானும் பேப்பர் எடுத்துக்கொண்டு போய் உட்கார்ந்தேன். ஆனால், எனக்கு ஒரு காட்சிக்குக்கூட வசனம் எழுதவரவில்லை. என்னுடைய அலுவலகத்தில் பேச ஆரம்பித்து, ஒரு நாளைக்கு ஏழு, எட்டுக் காட்சிகள் வரை வசனம் எழுதினேன். சில சமயம் ரொம்ப போரடிக்கும். ஒன்றுமே தோன்றாது.
சின்சியராக இருந்தால் சினிமாவில் ஜெயித்துவிடலால் என எண்ண வைக்கிறது உங்களைப் போன்ற கலைஞர்களின் வெற்றி. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சினிமா மட்டுமல்ல; அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருந்தால் ஜெயிக்கலாம். படித்தால் தேர்வில் ஜெயித்துவிடலாம்; ஆனால், எதைப் படிக்கிறோம் என்ற விஷயம் இருக்கிறது. நேர்மையாகத் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் கற்று முடித்துவிட்டேன் என்று நினைப்பது முட்டாள்தனம். முடிவெடுக்கும்போது, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இப்படி எல்லா விஷயங்களும் சேர்ந்ததுதான் நேர்மை. நேர்மை மட்டும் இருந்தால் போதாது. ஆனால், நேர்மைதான் முக்கியம்.
டைரக்ஷன் ஆசை?
முழுக் கதைகளாக இல்லாமல், நிறைய ஒருவரிக் கதைகளாக எழுதி வைத்துள்ளேன். எனக்குத் தைரியம் வரும்போது இயக்குநர் விஜய் சேதுபதியைப் பார்க்கலாம்.
(அடுத்த இதழில் நிறைவடையும்)