இந்து டாக்கீஸ்

போன் நம்பர் பொதுவுடைமை அல்ல! - இயக்குநர் எம்.மதன் நேர்காணல்

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமான ஆக்‌ஷன் நாயகன் ‘இதுதாண்டா போலீஸ்’ படப் புகழ் டாக்டர் ராஜசேகர். அவருடைய மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் டாக்டர் ராஜசேகர் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எம்.மதன். ‘88’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தை எழுதி, இயக்கி, நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்க வருகிறார் என்பதை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். நீங்கள் சத்தமில்லாமல் வருகிறீர்களே?

கேட்பதால் சொல்கிறேன். டாக்டர் ராஜசேகர் என் தாய்மாமா என்பது யாருக்கும் தெரியாது. என் அம்மாவின் பெயர் விஜயபாரதி. ராஜசேகர் மாமாவுக்குத் தங்கை. அவரது புகழையோ பெயரையோ பயன்படுத்தாமல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவேதான் அவரது உதவியை நாடவில்லை. ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாக அவர்தான் காரணம். நான் சிறுவனாக இருந்தபோது அவரது பல படங்களின் படப்பிடிப்புக்கு என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். அவரது ‘மீசைக்காரன்’படப்பிடிப்புக்கு ஆர்வமாக அவருடன் போய்க்கொண்டிருந்தேன். சண்டைக் காட்சிகளில் டூப் போடுவது அவருக்குப் பிடிக்காது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவருக்குக் கடுமையாக அடிபட்டுவிட்டது. சினிமாவில் ஹீரோவாக இருப்பது விளையாட்டு அல்ல, நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். மாமா விபத்தில் சிக்கியதைப் பார்த்த பிறகு எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை போயிருக்க வேண்டும். நேர்மாறாக எனக்கு ஆசை வந்துவிட்டது.

நடிகர் குடும்பத்திலிருந்து நடிகராக வருவது சரி, கதை எழுதி, இயக்கவும் வந்திருக்கிறீர்களே?

அம்மா, மாமா, அனைவருக்கும் சொந்த ஊர் கோவில்பட்டி. நான் பிறந்து வளர்ந்தது, பள்ளியில் படித்தது எல்லாமே சென்னையில். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு அங்கேயே எம்.பி.ஏ. படித்தேன். இது எல்லாமே அம்மா, அப்பாவுக்காக. படிப்பு முடிந்ததும் மாடலிங் வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு விளம்பரப் படங்களை இயக்கும் வாய்ப்பும் அமைந்தது. சிறுவயது முதல் காமிக்ஸ் தொடங்கி புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை விரும்பி வாசிப்பேன். இப்படித்தான் கதை எழுதும் ஆர்வம் வந்தது. நடிப்பு என்று முடிவு செய்த பிறகு, நிறையக் கதைகள் கேட்டேன். எதுவும் திருப்தியாக இல்லாததால் நானே செல்ஃபோனை வைத்து ஒரு கதை எழுதினேன். பிறகு அதை நண்பர்கள், உதவி இயக்குநர்களுடன் விவாதித்து திரைக்கதையாக உருவாக்கினேன். என நட்பு வட்டத்துக்கு நெருக்கமான இணை இயக்குநர்களை இந்தக் கதையை வைத்து என்னை இயக்குங்கள் என்று அணுகியபோது, ஒவ்வொருவருமே அவரவர் நேசித்து உருவாக்கிய முதல் கதையை இயக்க வேண்டும் என்பதைக் கனவாகவே வைத்திருந்தார்கள். அதை நான் கலைக்க விரும்பவில்லை. எனது கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால் நாமே இயக்கி, நடிப்போம் என இறங்கி ஒரே கட்டமாகப் படத்தை முடித்துவிட்டேன்.

‘88’ என்று எண்ணில் தலைப்பு வைத்திருக்கிறீர்களே, என்ன கதை?

இது கதாநாயகன் செல்ஃபோன் நம்பரின் கடைசி இரண்டு நம்பர். நமக்கோ நண்பர்களுக்கோ கால் வரும்போது அவர்கள் போனை எடுத்துப்பேச முடியாதபோது அவர்களுக்குக் கடைசி இரண்டு நம்பர்கள் 88 என்று முடியுது என்று சொல்வோம் இல்லையா. அப்படியொரு அர்த்தத்தில்தான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன். இன்று தகவல் தொடர்பு அறிவியல் எங்கோ போய்விட்டது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பயன்பாடு எல்லை கடந்துவிட்டது. கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதிலிருக்கும் ‘ஆப்’ வழியே எல்லா வேலைகளையும் முடித்துக்கொள்கிறோம். இதனால் நண்பர்கள், உறவுகள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முகங்களை நேரில் பார்த்து நேசத்தைப் பகிரும் பழக்கத்தை மறந்துகொண்டு வருகிறோம். கைக்குள்ளேயே உலகத்தை கொண்டுவந்த நவீனம் எதையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிக்கக் கூடாதோ, அதையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தூண்டுகிறது. இந்த நவீனத்தால் ஒரு பாசமான குடும்பத்துக்கு விளைந்த சங்கடங்களை இதில் பரபரப்பான திரைக்கதை வழியாக அலசி இருக்கிறேன். நமது போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் பொதுமேடைக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஆராய்ச்சி செய்தே இந்தத் திரைக்கதையை எழுதினேன். குடும்பம், காதல், நிழலுலகம் என மூன்று நிலைகளில் கதை பயணிக்கும்.

உங்கள் படக் குழு?

கதாநாயகியாக மிஸ் இந்தியா ஏசியா உபாஷ்னா ராய் அறிமுகமாகிறார். டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், ஜி.எம்.குமார் அப்புகுட்டி, சாம்ஸ், மீராகிருஷ்ணன், ஜான் விஜய் என முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். செல்வாவின் உதவியாளர் வெற்றிமாறன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘சாகாக்கள்’ படத்துக்கு இசையமைத்த தயாரத்னம் என் நண்பர். அவரது இசை பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அண்ணன் அறிவுமதியும் மதன் கார்க்கியும் சிறந்த பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஆர்.எஸ். இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத் தயாரிப்பாளர், இயக்குநர் எல்ரெட் குமார் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

SCROLL FOR NEXT