ஒரு பிக்பாக்கெட்டுக்கு திடீ ரென்று அவரது இடதுகை சொல் பேச்சு கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டால் என்ன ஆகும்? இதுதான் ‘பீச்சாங்கை’ திரைப்படத்தின் ஒரு வரிக்கதை.
தன் சகாக்களுடன் சேர்ந்து பிக்பாக்கெட் அடித்து பிழைத்து வருகிறார் நாயகன் (ஆர்.எஸ்.கார்த்திக்). அதிலும் கொஞ்சம் நேர்மையைப் பின்பற்றும் அவர், ஒருகட்டத்தில் தன் சகாக்கள் ‘அபேஸ்’ செய்த பணத்தை மீட்டு, அதற்கு சொந்தக்காரரான நாயகியிடம் (அஞ்சலி ராவ்) சேர்க்கிறார். கோலிவுட் விதிப்படி இந்த சம்பவம் அவர்களுக்குள் காதலை வளர்க்கிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கார்த்திக் விபத்தில் சிக்குகிறார். அதில் அவருக்கு இடது கை தன்னிச்சையாக செயல்படும் ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ எனும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தக் குறையை சரிசெய்ய 3 லட்சம் ரூபாய் தேவை என்பதால் குழந்தைக் கடத்தல் கும்பலிடம் சேர்கிறார். அவர்கள் சொல்லும் வேலையை முடித்தால், அவருக்கு அந்த தொகை கிடைக்கும். இதற் கிடையில், மனதில் இருக்கும் கொஞ்சநஞ்ச நேர்மை காரணமாக அந்தக் கும்பல் கடத்தி வைத் திருக்கும் குழந்தையைக் காப்பாற்ற நினைக்கிறார். இன்னொரு பக்கம், நாயகனின் சுயரூபம் தெரிந்து நாயகி அவரைப் பிரிகிறார். கடத்தல் கும்பல் சொன்ன வேலையை நாயகன் முடித்தாரா, குழந்தையைக் காப்பாற்றினாரா, நாயகியுடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதுதான் கதை.
படம் முழுவதும் புதுமுகங்கள். அவர்களை வைத்து இரண்டரை மணி நேரம் லாஜிக் எல்லாம் பார்க்காமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷோக். ‘வலது மூளை சொல்வதை இடது கை கேட்காது’ என்ற விஷயத்தை பார்வையாளர்கள் நம்பும்படி திரைக் கதை அமைத்திருக்கிறார். ஆனால் நாயகன், குழந்தைக் கடத்தல் கும்பலிடம் சேரும் வரை நேராகப் பயணிக்கின்ற திரைக்கதை, அதற் குப் பிறகு கண்ணாமூச்சி காட்டு கிறது.
ஹீரோவாக தயாரிப்பாளர் கார்த் திக். அலட்சியமான பார்வை, உடல் மொழி என நன்றாக நடித்திருக்கிறார். பீச்சாங்கையால் லாவகமாக பிக்பாக்கெட் அடிக்கும் காட்சிகளிலும், அந்தக் கையில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு போலீஸாரிடம் சலம்பும் காட்சிகளிலும் ஈர்க்கிறார்.
அறிமுக நாயகி அஞ்சலி ராவுக் குப் படத்தில் பெரிய வேலை இல்லை. ‘கு.ஜ.க’ கட்சித் தலைவர் தமிழ்மகனாக, எம்.எஸ்.பாஸ்கர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், வரும் காட்சிகளில் எல்லாம் நம்மைக் கலகலக்க வைக்கிறார். அந்தக் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் நல்லதம்பியாக வரும் விவேக் பிரசன்னாதான் படத்தின் ‘ஷோ ஸ்டீலர்’. கழிவறையில் அமர்ந்து ஆபாசப் படம் பார்க்கும் காட்சி, இரங்கல் கூட்டத்தில் தான் விட்ட ஏப்பத்தை சமாளிக்கும் காட்சி என காமெடியில் கைதட்டல் அள்ளுகிறார்.
கடத்தல் கும்பலின் இருப்பிடத்தை அதன் இருளுடன் அழகாகப் பதிவு செய்திருக்கிறது கவுதம் ராஜேந்திரனின் கேமரா. பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறது. வசனங்களாலான நகைச்சுவையை விட காட்சியமைப்பின் மூலமாகவே நம்மை சிரிக்க வைத்து அதில் பெரும்பாலும் வென்றிருக்கிறார் இயக்குநர் அசோக்.
செய்திக்கேற்றவாறு உணர்ச்சி யுடன் செய்தி வாசிப்பவர்கள், விநோத பழக்கமுள்ள வில்லன், மனைவிக்கு பயப்படும் தாதா, அடிக்கடி பவுடர் போட்டுக்கொள்ளும் அவனது அடியாள் என படத்தில் புதிய நகைச்சுவை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன.
குறும்படப் பாணி எளிமை சில இடங்களில் கை கொடுத்தாலும், சில இடங்களில் அதுவே படத்தை பின்னால் இழுக்கிறது. இதுபோன்ற களத்தில் இன்னும் இறங்கி அடித் திருக்கலாமோ என்று தோன்றுகிறது. படத்தின் இடைவேளைக்கு முன்பு வரும் சில காட்சிகளில் தொனிக் கும் இரட்டை அர்த்த வசனங் களுக்குக் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
குழந்தைக் கடத்தல், திருட்டு, எம்எம்எஸ் என கலந்துகட்டி சத்தமாக ஒரு பிளாக் காமெடி வகையை முயற்சி செய்திருக்கிறார்கள். ‘பீச்சாங்கை’ சிரிப்புப் படம் என்று சத்தமாக ஒவ்வொரு காட்சி யிலும் சொல்வதால் சிரித்துத்தான் ஆக வேண்டும். சிரிக்கிறார்கள் மக்கள்.
ஒரு வித்தியாசமான படத்தை, சுவாரசியமாக தந்ததற்காக ‘பீச்சாங் கை’ படத்தை வலதுகை குலுக்கி வரவேற்கலாம்.