ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இந்தியன் பனோரமா திரைப்பட விழாவை நடத்துகிறது. பிராந்திய மொழிகளில் தயாரான சிறந்த படங்கள், ஏற்கெனவே உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுபெற்ற திரைப்படங்கள் இந்த விழாவுக்கான தேர்வில் கலந்துகொள்ளலாம். பனோரமாவுக்கு ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் படத்துக்குத் தேசிய அளவில் கவனம் கிடைக்கும். அதன் பிறகு ஏனைய இந்திய சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடலுக்கு அவை தகுதி பெற்றுவிடுகின்றன. அதேபோல் உலகத் திரைப்பட விழாக்களில் நுழையவும் அதுவொரு துருப்புச் சீட்டு.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான இந்தியன் பனோரமா திரைப்பட விழா அறிவிப்பு, திரையுலகுக்கு ஒரு சாதகமான செய்தியையும் தாங்கி வந்திருக்கிறது. இதில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்படும் படங்களுக்குத் தணிக்கை செய்யப்பட வேண்டிய விதிமுறையிலிருந்து முதன்முறையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நடைமுறையை இந்தியன் பனோரமாவும் பின்பற்ற முன்வந்திருப்பதை வரவேற்பதாக திரையுலகினர் உற்சாகம் பொங்கத் தெரிவித்துவருகிறார்கள்.
உறுதியாக நிற்கும் இயக்குநர் சங்கம்!
தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் ‘கபாலி’ மட்டுமல்ல! சினிமா தலைப்பைப் பதிவு செய்யும் அதிகாரத்தை யார் கைவசமாக்கிக்கொள்வது என்பதுதான். தற்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் கில்ட் ஆகியவை திரைப்படத்துக்கான தலைப்பைப் பதிவு செய்கின்றன. ஆனால், இந்த மூன்று சங்கங்களுக்குள் போதிய புரிந்துணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள்தானாம். எனவே இயக்குநர் சங்கம் உட்பட நான்கு சங்கங்களில் எந்த ஒன்றிலும் ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மேற்படி மூன்று சங்கங்களின் நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சங்கத்தினர். தலைப்பு விஷயத்தில் முடிவெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் மேற்கண்ட மூன்று சங்கங்களுக்கும் உருவாகிவிட்டது.
கன்னடத் திரைவிழா
சென்னையில் முதன்முறையாக கன்னடத் திரைப்பட விழா நடக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்தில் நேற்று தொடங்கிய இந்த விழா வரும் 31-ம் தேதிவரை நடக்கிறது. நவீன கன்னடத் திரையுலகின் போக்கில் சலசலப்பை உருவாக்கியிருக்கும் ‘திதி’, ‘யூடர்ன்’ உள்ளிட்ட பத்துத் திரைப்படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. சென்னை திரைப்பட ஆர்வலர்களும் ஊடக மாணவர்களும் தவறவிடக் கூடாத நிகழ்வு இது.