ட்விட்டர் மூலமாக விஷாலுக்கு விஜய் பாராட்டு தெரிவித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் டி.வி.டி. கடைகளில் தனது படங்கள் கிடைக்கின்றனவா என்று சோதனை செய்துவந்தார் விஷால். சமீபத்தில் தனது படத்தோடு ‘கத்தி’ படமும் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸில் ஒப்படைத்தார். விஷாலின் இந்த நடவடிக்கைக்கு விஜய் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விஷால்... உங்கள் செயலை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். சொற்களைவிடச் செயல்கள்தான் சக்தி வாய்ந்தவை என்று நிரூபித்து இருக்கிறீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்” என்று தெரிவித்தார். விஜய் பாராட்டுக்குப் பதிலளித்துள்ள விஷால், “டியர் விஜய்... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. நிச்சயம் மாற்றம் நிகழும். திருட்டு விசிடியை ஒழிப்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.