எனக்குத் தூண்டுகோல்!
பாலிவுட்டின் பன்முகக் கலைஞர் அனுபம் கெர், சமீபத்தில் ஹாலிவுட்டின் முக்கிய கலைஞரான ராபர்ட் டி நீரோவைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து “எனது அமெரிக்கப் பயணத்தின் மிக முக்கியமான அம்சம் நான் ராபர்ட் டி நீரோவைச் சந்தித்ததுதான். எனக்குத் தூண்டுகோலாக இருந்த அந்த மாபெரும் கலைஞனைச் சந்தித்தது அதிக சந்தோஷத்தை தந்தது” எனத் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘சில்வர் லைனிங் ப்ளே புக்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நீரோவுடன் அனுபம் கெர் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நர்கீஸின் ஆசை
நர்கீஸ் ஃபக்ரீ ‘பஞ்சோ’ திரைப்படத்தில் ‘டீஜே’வாக நடித்துவருகிறார். நடிக்க வருவதற்கு முன் தனக்கு இசையமைப்பாளராக வேண்டுமென்ற ஆசை இருந்ததாகச் சொல்லி யிருக்கிறார் அவர். “ஆனால், அது சாத்தியமாகவில்லை. அப்போது என்னிடம் இசைக்கருவிகள் வாங்குவதற்குப் பணமில்லை. இப்போது, காலம் மாறியிருக்கிறது. ஆனால், நான் மாறவில்லை. இந்த நட்சத்திர அந்தஸ்து மறுபடியும் ஏழையாகிவிடக் கூடாது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்துடன், நான் ஏழையாக இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதையும் எனக்கு உணர்த்தியிருக்கிறது.
இது முரணாகத் தோன்றுகிறது இல்லையா? ஆனால், இதுதான் உண்மை. நான் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் வேண்டுமென்று ஆசைப்படும் நபரில்லை. எனக்குச் சாப்பிடுவதற்கு உணவும் தூங்குவதற்கு ஓர் இடமும் இருந்தால் போதும்” என்று பேசிக் கலங்கடித்திருக்கிறார் நர்கீஸ். இவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடித்திருக்கும் ‘பஞ்சோ’ திரைப்படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியாகிறது.
வித்யா உருமாற்றம்
இலக்கிய ஆளுமை கமலா தாஸின் வாழ்க்கை திரைப்படமாக விருக்கிறது. இந்தப் படத்தில் கவிஞர் கமலா தாஸ் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். கமலா தாஸ் சுயசரிதையான ‘மை ஸ்டோரி’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதை ஒளிப்படமாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் வித்யா. கமலா தாஸாகத் திரையில் உருமாற்றம் செய்துகாட்ட வித்யா பாலன் காட்டும் ஈடுபாடு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத் திரையுலகின் முக்கிய இயக்குநரான கமல் இயக்கவிருக்கிறார். இதற்கிடையில் வித்யா பாலன் நடித்திருக்கும் ‘கஹானி 2’ திரைப்படம் செப்டம்பர் 25-ந்தேதி வெளிவரவிருக்கிறது.
காஜோலின் பரிந்துரை
பாலிவுட்டில் ஆக்ஷன் நாயகனாக இருந்தாலும் தரமான ஆஃப் பீட் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் அஜய் தேவ்கன். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை கணவர் இப்படிச் செலவிடுவது குறித்து காஜோலுக்கு எப்போதுமே பெருமிதம்தானாம். அஜய் தேவ்கன் இணைத் தயாரிப்பில் இன்று வெளியாகவிருக்கும் ‘பார்ச்டு’ படத்தைப் பிரத்தியேக காட்சியாகப் பார்த்துவிட்டு புகழ்ந்துரைத்திருக்கிறார். “இந்தப் படம் பெண்களின் நட்புலகை மிக எளிமையாக ஆனால் துணிச்சலாக சித்தரித்திருக்கிறது. எந்த மனத்தடையுமின்றி இந்தப் படத்தை நீங்கள் ரசிக்கமுடியும்” என்று பரிந்துரைத்திருக்கிறார். லீனா யாதவ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தே மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பதோடு இதில் அவர் சில ‘டாப்லெஸ்’ காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
ஒரு சமூக திகில் படம்
அமிதாப் பச்சன் நடிப்பில் ‘பிங்க்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. “இது பெண்கள் முன்னேற்றம், பாலியல் வன்புணர்ச்சி பற்றி பேசும் படம் கிடையாது. மாறாக இது ஒரு சமூக திகில் படம். இந்தப் படத்தில், இந்தியப் பெண்கள் ஒழுக்கம், சமூக விதிகள் என்ற பெயரில் எதிர்கொள்ளும் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பெண் களுக்குச் சமூகம் கொடுக்க வேண்டிய மரியாதையை இந்தப் படம் வலியுறுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார் அமிதாப். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தாப்ஸி பன்னூ, கீர்தி குல்ஹாரி, பீயூஷ் மிஷ்ரா போன்றோர் நடித்திருக்கின்றனர்.