இந்து டாக்கீஸ்

மாயப் பெட்டி- 13: அம்மாவுக்கு பயந்துதான் டி.வி. பக்கம்...

ஆபுத்திரன்

அம்மாவுக்கு பயந்துதான் டி.வி. பக்கம்…

ஜீ டி.வி. சானலில் ‘ஜீன்ஸ்’ நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குவதன் காரணம் என்ன? நடிகை சுலக்‌ஷனா பங்கேற் பாளராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இதற்கான காரணத்தைக் குறிப்பிட்டார் ரோஜா. “நீங்களும், நானும் ரஜினிக்கு ஜோடியா நடிச்சவங்க. இப்போ அப்படி நடிக்கக் கூப்பிடுவாங்களா? வயசு குறைந்த ஹீரோயின்களோட அவங்கள்ளாம் இன்னமும் டூயட் பாடறாங்க. நம்மை அம்மா ரோலுக்குத்தான் கூப்பிடுவாங்க. அந்த சங்கடமெல்லாம் வேண்டாம்னுதான் டி.வி. பக்கம் வந்துட்டேன்” என்றார்.

கின்னஸ் சுருட்டு

கலைஞர் செய்திகளில் கியூபாவைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் சாதனையை நீட்டி முழக்காமல் காட்டினார்கள். 18 மீட்டர் சுருட்டு ஒன்றை உருவாக்கி கின்னஸில் இடம்பிடித்திருக்கிறார். ஏற்கெனவே 15 மீட்டருக்கு ஒரு சுருட்டைச் செய்து கின்னஸில் இடம் பிடித்தவராம். இது போன்றதொரு சுருட்டை அவர் பிடித்திருக்காததால்தான் அவர் 72 வயதைத் தாண்டியுள்ளார் என்று தோன்றுகிறது.

குழந்தையின் மகிமை

ஸ்டார் மூவிஸ் சானலில் ‘பேப்ஸ் டே அவுட்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஒரு சின்னக் குழந்தை தன்னைக் கடத்திய மூன்று பேரை எப்படி அலைக்கழிக்கிறது என்பதை நகைச்சுவை பொங்கப் பொங்கக் காட்டிய படம். ஒளிபரப்பின் நடுவே ஒரு சுவையான தகவலையும் வெளியிட்டார்கள். ‘இந்தப் படம் 50 மில்லியன் டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட படம். அப்போது பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்காத எந்தத் திரைப்படத்துக்கும் இவ்வளவு செலவு செய்ததில்லை.’

குழந்தையின் மகிமை

விஜய் டி.வி.யின் கலக்கல் சாம்பியன்ஸில் ஒரு பேராசிரியர் பங்கு கொண்டார். அவர் வெளிப்படுத்திய நகைச்சுவையைவிட அவர் கூறிய சீரியஸ் வாக்கியம் ஒன்று பார்வையாளர்களிடமிருந்து அதிகமாகக் கைதட்டலைப் பெற்றது. ‘’பிரச்சினைன்னு ஒண்ணு இல்லேன்னா கடவுளுக்கு அர்ச்சனைன்னு ஒண்ணு இருக்காது.”

குழந்தையின் மகிமை

வெகு நேரம் குழந்தைகள் செல்போனில் கேம்ஸ் விளையாடுவதால் உண்டாகக் கூடிய விளைவுகளைப் பற்றி சன் நியூஸில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ‘’கைவிரல்களில் மூட்டு வலி உண்டாகும். எப்போதும் கண்களில் ஒரு சோர்வு தெரியும். தகவல் பரிமாற்றம் மாறுபடத் தொடங்கும். ‘ஆமாம். செய்றேன், தெரியாது’ என்பது போன்று ஒற்றை வார்த்தைகளில்தான் அவர்கள் பிறருடன் தகவலைத் தெரிவிப்பார்கள்’’ என்று ஒரு மருத்துவர் கூறினார். பெற்றோர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது.

பயம் தந்த பயணம்

மக்கள் டி.வியில் ‘அச்சம் தவிர். உச்சம் உணர்’ என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் 2,500 அடி உயரமுள்ள மலை ஒன்றில் பைக் ஓட்டினார். அப்போது அந்தப் பயணம் முழுவதும் அவர் கண்களை மூடிக்கொண்டே ஓட்டினார். அதற்கு ஆதாரமாகத் தன் மூடிய கண்களின் மீது இரு பிளேடுகளைப் பொருத்திக்கொண்டு ஓட்டுவதைக் காட்டினார். ‘அடுத்த முறை நீங்கள் மேலும் பெரிதாகச் செய்ய வேண்டும்’ என்று சானல்காரர் வாழ்த்த, ‘’பிளேடுகளுக்குப் பதிலாகப் பெரிதாக வேறு எதைப் பொருத்திக்கொள்வாரரோ!’ என்ற வேண்டாத சிந்தனை நமக்குத் தோன்றியது.

SCROLL FOR NEXT