இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: மூன்று நாள் போதுமா விஷால்?

அரவிந்தன்

நடிகரும் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவருமான விஷால் சமீபத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். திரைப்படங்களுக்கான விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து வெளியிடலாமே என்பது அவருடைய கோரிக்கை. எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் வசூலைப் பாதித்துவிடுகின்றன என்பதே இதற்குப் பின் உள்ள கவலை. இதே கருத்தை நடிகர்-இயக்குநர் ராகவா லாரன்ஸ் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். இதைக் கிட்டத்தட்ட ஆமோதித்த மூத்த நடிகர் ரஜினிகாந்த், விமர்சனங்கள் புண்படுத்தாதபடி இருக்க வேண்டும் என்னும் வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கை மிகுதியும் இணைய, சமூக வலைதள விமர்சகர்களை முன்னிட்டுச் சொல்லப்பட்டது என்றாலும் பொதுவாகவே விமர்சனங்கள் சிறிது தாமதமாக வந்தால் நல்லது என்னும் எதிர்பார்ப்பு திரையுலகைச் சேர்ந்த பலருக்கு இருக்கிறது.

ஏன் மூன்று நாள்?

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த மூன்று நாள் என்பது தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாகிவிட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான படங்கள் மூன்று நாள்களோடு சுருண்டுவிடுகின்றன. திருட்டு விசிடி இதற்கு முக்கியக் காரணம். திரையரங்கக் கட்டணம், திரையரங்கில் உணவுப் பொருட்களின் விலை, ஆகிய காரணங்களும் இருக்கின்றன. தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குகளும் திரையரங்குக்கு மக்கள் வருவதைத் தடுக்கின்றன.

இவற்றையெல்லாம் தாண்டி வாரக் கடைசியான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் சிலராவது திரையரங்குக்கு வர விரும்புகிறார்கள். எனவே, வசூல் என்பது அந்த மூன்று நாட்களில் நடந்தால்தான் உண்டு. அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும் சில படங்கள், மாபெரும் நட்சத்திரங்கள் பங்குபெற்ற படங்கள் ஆகிய விதிவிலக்குகள் தவிர அனைத்துப் படங்களின் நிலையும் இதுதான். எதிர்மறை விமர்சனம் படத்தின் வசூலைப் பாதித்து மூன்று நாள் என்பது ஒரு நாளாகச் சுருங்கும் அபாயத்தைத் தவிர்க்கவே இப்படி ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.

உள்ளடக்கம் என்னும் வில்லன்

படம் மூன்று நாள்களில் படுத்துவிடுவதற்கு உள்ளடக்கமும் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை எந்தத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்காமல் சலிப்பூட்டுகின்றன. அதனாலேயே அவை சரிந்து விழுகின்றன தரம், அழகியல், புதுமை, பொழுதுபோக்கு அம்சம், விறுவிறுப்பு என எந்த அம்சமும் சரியாகக் கூடிவராத படத்தை எதற்காகத் திரையரங்குக்குச் சென்று அதிகமாகப் பணம் செலவழித்துப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். ரசிகர்களால் உட்கார்ந்து பார்க்கக்கூடிய எந்தப் படமும் வசூலில் சோடைபோவதில்லை. நட்சத்திர மதிப்பையெல்லாம் தாண்டி இதுதான் படத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது.

மூன்று நாள் அவகாசம் கொடுங்கள் என்று விமர்சகர்களைப் பார்த்துக் கேட்கும் திரைத் துறையினர், கொஞ்சம் நல்ல படம் எடுங்கள் என்று தம் துறையினரைப் பார்த்துக் கேட்பதில்லை. ஒரே மாதிரியான படங்கள் ஒரே மாதிரியான காட்சிகளுடன் வந்துகொண்டிருப்பதைத் தடுக்க எதுவும் செய்வதில்லை. கதையிலோ திரைக்கதையிலோ கவனம் செலுத்தாமல் நாயக பிம்பத்தை மலினமான முறையில் முன்வைக்கும் படங்கள் தரும் எரிச்சல் பற்றிச் சுய பரிசோதனை செய்துகொள்வதில்லை. நட்சத்திரங்களின் சந்தை மதிப்புக்குத் தொடர்பற்றுப் படத்தின் பட்ஜெட் வீங்கிப்போவது படம் நஷ்டமடைவதற்கு முக்கியக் காரணம். இதுகுறித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பல விமர்சகர்கள் ஓரளவு சுமாரான உள்ளடக்கம் கொண்ட படத்தையும் தாராளமாகப் பாராட்டத்தான் செய்கிறார்கள். கதையிலோ திரைக்கதையிலோ காட்சிகளிலோ புதிதாகவோ புதுமையாகவோ எதுவுமே இல்லை என்றாலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு ஆகியவற்றையாவது பாராட்டிவிடுகிறார்கள். ஒரே ஒரு காட்சி நன்றாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டும் விமர்சனங்கள் வருகின்றன. சினிமாவை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் யாரும் விமர்சனம் செய்வதில்லை.

இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சில விவரமற்றவையாகவும் பொறுப்பற்ற முறையிலும் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதே இணையதளத்தில் சில படங்களைக் கொண்டாடித்தீர்க்கிறார்கள். அதற்காக அந்தப் படங்கள் ஓடிவிடுவதும் இல்லை. புதிய தடத்தில் மேற்கொள்ளப்படும் சில நல்ல முயற்சிகளில் பல குறைகள் இருந்தாலும் படம் வெளியானதும் வெளியாகும் விமர்சனங்களில் பெரும்பாலானவை அந்தக் குறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை. நல்ல முயற்சியைப் பாராட்டி ஊக்குவிக்க முயல்கின்றன. இப்படிப்பட்ட விமர்சனங்களாலும் படம் ஓடிவிடுவதில்லை.

குறைகளைச் சொல்ல விமர்சகர்கள் தயங்கினால், ரசிகர்கள் பார்வையில் விமர்சகர்கள் மதிப்பிழந்துவிடுகிறார்கள். ஏதோ ஒரு படத்தை அப்பட்டமாக நகல்செய்து ஒரு படம் எடுக்கப்பட்டால் அதை அம்பலப்படுத்தி இயக்குநரைப் புண்படுத்த வேண்டாம் என ஒரு விமர்சகர் நினைக்கலாம். ஆனால், அதைப் பார்க்கும் ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நகல் வேலை தெரிந்துவிடுகிறது. அதுபோலவே வெளிப்படையான குறைகளை விமர்சகர்கள் சுட்டிக்காட்டாவிட்டாலும் ரசிகர்கள் அவற்றைப் பாராமல் இருந்துவிடப்போவதில்லை.

விமர்சகர்கள் தங்கள் தொழிலுக்கும் மனசாட்சிக்கும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். திரையுலகை வாழவைக்கும் பொறுப்பெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. திரைப்படங்கள் குறித்த ரசனையை வாசகர்கள் கூர்தீட்டிக்கொள்ள உதவும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. புண்படுத்தாமல் இருப்பது நல்லதுதான். ஆனால், வெளிப்படையான கருத்து என்று வந்தால் அதில் ஓரளவேனும் புண்படுத்தும் அம்சம் இருக்கத்தான் செய்யும். அரசியல், வணிகம், கலை, அறிவியல் என எந்தத் துறை குறித்த விமர்சனத்துக்கும் இது பொருந்தும். திரைத் துறை மட்டும் விதிவிலக்கு கோர முடியாது.

கவலை தரும் யதார்த்தம்

மூன்று நாள் விட்டுவிடுங்கள் என்று கேட்பதே மூன்று நாள்தான் ஒரு படத்துக்கான ஆயுள் என்பதை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது. இந்த மூன்று நாள் வசூல் யதார்த்தம் அறிந்துதான் விஷால் இப்படிப் பேசியிருக்கிறார். ஆனால், இந்த நிலை திரையுலகின் யதார்த்தமாக ஏன் ஆனது என்பதை அல்லவா அவர் யோசிக்க வேண்டும்? அவர் ஒரு நடிகர். தயாரிப்பாளர். வலுவான அமைப்புகளில் உயர் பதவி வகிப்பவர். மூன்று நாள் வசூல் என்பதை உடைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து அவற்றை அமல்படுத்தக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார்.

சுய பரிசோதனை, சட்டத்தின் உதவி, கண்காணிப்பு, படைப்பூக்கம், ரசிகர்களை மதித்து உள்ளடக்கத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகிய முயற்சிகளை எடுக்கவும் அவற்றைப் பரவலாக்கவும்கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். விமர்சகர்களுக்குக் கோரிக்கை விடுப்பதற்குப் பதிலாக அவர் நடிகர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள், தயாரிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுக்கலாம். அல்லது விமர்சனமே வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கலாம்.

SCROLL FOR NEXT