விஜய் டிவியில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியின் மூன்றாவது சுற்று தொடங்கியிருக்கிறது. இம்முறை அரவிந்த் சாமி. அலட்டலோ செயற்கையான தன்னடக்கமோ இல்லாமல் ரசிக்க வைக்கிறார். ஒரு ரூபாய்கூட வெல்லாமல் வெளியேற நேர்ந்த ஓர் இளைஞருக்கு அவர் முதலில் தேர்ந்தெடுத்திருந்த உறுதிப் பணமான 80,000 ரூபாயைத் தன் சொந்தப் பணத்திலிருந்து அவருக்குத் தருவதாகச் சொன்னார்.
டிஸ்கவரி சானலில் கணினி மவுஸ் உருவாக்கப்படுவதைக் காட்டினார்கள். அதிலுள்ள சிறு கேமரா, அரிசி அளவு மின் கூறுகள், தயாரிப்புக் கட்டத்தில் மவுஸின் பாகங்கள் ஒருங்கிணைக்கப்படுவது, எண்பது லட்சம் கிளிக்குகளைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு மின்பொருள்கள் அமைக்கப்படுவது என்று பல தகவல்கள். மவுஸின் மவுசு தெளிவானது. 1984ல்தான் மவுஸோடு கூடிய கணினி அறிமுகமானது என்பது கூடுதல் தகவல்.
**************
சூரிய வணக்கத்தில் (சன் டி.வி.) பின்னணிப் பாடகி சின்மயியின் நேர்காணல். “உங்கள் கணவரை முதலில் எப்படிச் சந்தித்தீர்கள்?, எப்படிக் காதல் மலர்ந்தது? உங்கள் கணவரின் குணம் எப்படி?’’ என்று கேள்விகள் அடுக்கப்பட, இவற்றில் கடைசிக் கேள்விக்கு மட்டும் பதிலளித்தார் சின்மயி. “ராகுலிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் அவர் பலவிதமான கருத்துகளையும் மதிப்பதுதான்.
யாரைப் பற்றியும் தீர்ப்பு வழங்க மாட்டார். அவர் ஒரு நடிகரும்கூட. தனது அத்தனை வெளியுலக அனுபவங்களையும் என்னிடம் அவர் பகிர்ந்துகொள்ள மாட்டார். அதற்கு அவசியமும் இல்லை. எனக்கும் எல்லாவற்றையும் நோண்டி நோண்டிக் கேட்பது பிடிக்காத விஷயம். ஒருவரை ஒருவர் மதிக்கிறோம்’’ என்றார். சினிமாப் பாடல் பாடத் தொடங்கிய பிறகுதான் சங்கீதத்தை முறையாகக் கற்றுக்கொண்டாராம்.
**************
சுவையான விம்பிள்டன் இறுதிச் சுற்றுப் போட்டிகளை ஒளிபரப்புகிறார்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸில். ‘விம்பிள்டன் ஃபைனல்ஸ்’ என்ற நிகழ்ச்சி. விம்பிள்டன் சரித்திரத்திலேயே மிக அதிக நேரம் எடுத்துக்கொண்ட இறுதிச் சுற்றைக் காட்டினார்கள் (4 மணி 48 நிமிடங்கள்). ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருக்கிடையே நடைபெற்ற போட்டி. நிகழ்ச்சியின் சுவையை மேலும் அதிகரித்தது நடாலின் நவரச முகபாவங்கள்.
ஃபெடரர் முகத்தில் ஏனோ தொடக்கத்திலிருந்தே ஓர் இனம் புரியாத சோகக் கீற்று உணர்வு (இறுதியில் தோற்றார்). “என் டென்னிஸ் வாழ்க்கையிலேயே இது மறக்க முடியாத வெற்றி’’ என்றார் நடால். அவர் அதை உணர்ந்துதான் கூறியிருக்க வேண்டும். அதற்குச் சாட்சி போட்டியில் வென்றவுடன் தடாலென்று மல்லாக்கக் கீழே விழுந்ததும் கை கால்களை அடித்துக்கொண்டதும்.
**************
ஜீ தமிழில் ‘கொஞ்சம் காபி, நிறைய சினிமா‘ நிகழ்ச்சியில் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் தொடர்பானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். மெட்ராஸ் திரைப்படத்தில் பங்கெடுத்துக்கொண்ட பல கலைஞர்களை கபாலியிலும் பயன்படுத்திக்கொண்டதைக் குறிப்பிட்டார் இரண்டிலும் உள்ள ரித்விகா.
‘’ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டீர்களா?’’ என்ற ஆங்கரின் தவிர்க்க முடியாத(!) கேள்விக்கு “அவர்கூட சேர்ந்து நடிக்கிறது இயல்பாக நடந்தது. அவர்கூட புகைப்படம் எடுத்துக்கொள்வதுதான் கொஞ்சம் சிரமம் ஆயிடுச்சு. தினமும் அவர் சுமார் 500 பேரோடு புகைப்படம் எடுத்துக்கும்படி ஆயிடுது’’ என்றார். ரஜினியின் நிலை பாவம்தான்!