இந்து டாக்கீஸ்

சர்வதேச சினிமா: வாழ்வின் இசை

செய்திப்பிரிவு

சிற்சில கோடுகள்தானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடிவ தில்லை சில எளிய ஓவியங்களை. மொத்தமே ஐந்தாறு காட்சிகள் என்பதற்காக The Band's Visit எனும் இஸ்ரேலியப் படத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. இசைக் கச்சேரியை நடத்த இஸ்ரேலுக்கு வரும் எகிப்திய இசைக்குழு வழி தவறுகிறது. அந்த அனுபவத்தை அக்குழு எப்படிக் கடக்கிறது என்பதே படம். கான் திரைப்பட விழாவில் 2007இல் சிறந்த படத்திற்கான விருது பெற்ற படைப்பு.

வான் நீலச் சீருடை அணிந்த அவர்கள் எட்டுப் பேர். பேருந்திலிருந்து இறங்கியதும் தங்களை வரவேற்க ஒருவரும் வரவில்லை என்பதை உணர்கிறார்கள். மின் கம்பங்கள் தவிர வெறிச்சோடிய தார்ச் சாலை. அந்தப் பக்கம் ஒரே ஒரு கஃபே. தேடி வந்த இடத்தைப் பற்றி விசாரிக்க வந்தவர்களிடம் கஃபே உரிமையாளர் தினா என்கிற அழகான பெண்மணியும் கஃபேவைச் சேர்ந்த இன்னொரு இளைஞனும் சீறி விழுகிறார்கள், “இங்கே அரபிக் கலாச்சாரமும் இல்ல, இஸ்ரேல் கலாச்சாரமும் இல்ல. கிளம்புங்க” என்கிறார்கள். மேலும் சில வசைச் சொற்கள்; வரவேற்புக்குப் பதிலாக அவமதிப்பு. பசியில் நடை தளர்கிறது. திடீரென்று கஃபேவிலிருந்து எதிர்பாரா அழைப்பு வருகிறது. பின்னர் பரிவோடு பேசும் அவர்களிடமிருந்து சூப்பும் ரொட்டியும் கிடைக்கின்றன.

இஸ்ரேலின் பீடா திக்வாவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அரபுக் கலாச்சார மையத் திறப்பு விழாவுக்கு வந்தவர் களே இந்த எகிப்திய பேண்ட் குழுவினர். ஆனால் வந்துசேர்ந்த இடம் பீட் ஹடிக்வா. விமான நிலையத்திலிருந்து வெகு தொலைவு ஒதுங்கியுள்ள சிறு பாலைவன நகரம்.

இனி மறுநாள்தான் பேருந்து. அதுவரை? சின்ன கஃபேயில் எல்லோரையும் தங்கவைக்க முடியாது. எனவே உள்ளூரில் சற்றுத் தொலைவிலுள்ள வீடு களில் சிலரைத் தங்கவைக்க ஏற்பாடு செய்கிறாள் கஃபே சொந்தக்காரியான அழகும் பெருந்தன்மையும் மிக்க நடுத்தர வயதுப் பெண் தினா.

இசைக் குழு கேப்டனும் டிரம்பெட் கலைஞனும் மட்டும் கஃபேவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்தச் சின்ன நகரின் இரவின் அழகை ரசிக்கக் கஃபே இளைஞனும் டிரம்பெட் கலைஞனும் திறந்த காரில் புறப்பட்டுவிடுகிறார்கள். ரோலர் ஸ்கேட்டிங் டிஸ்கோவில் பங்கேற்க விழையும் கஃபே இளைஞனுக்கு டிரம்பெட் கலைஞன் உதவுகிறான். அவன் வழிகாட்டுதலில் இவன் நடனமாடி ஒரு பெண்ணிடம் நகைச்சுவை கொப்பளிக்கக் காதலை வெளிப்படுத்தும் இடம் அழகு. உள்ளூர் வீடு ஒன்றின் குடும்பத்தினர் தங்குவதற்குச் சென்ற சில இசைக் குழுவினருடன் அங்குச் சாப்பாட்டு மேசையில் வாய்ச் சண்டை போடுகிறார்கள்; பின்னர் அது பாடலாக மாறிவிடுவது வித்தியாசம்.

பிளாட்பாரத்தில் சில கலைஞர்கள் வயலின், சிதார், பாடல் என மாலைப் பொழுதிற்கு ரம்மியத்தைக் கூட்டுகிறார்கள். அப்போது கஃபே உள் முற்றத்தின் மங்கிய வெளிச்சத்தில் இசைக் குழு கேப்டனும் தினாவும் நீள இருக்கைகளில் அமர்ந்திருக் கிறார்கள். அவளின் நயமான கேள்விகளுக்கு அவர், தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் தயங்கித் தயங்கிப் பதில் அளிக்கிறார். அந்தப் பதிலில் மட்டுமல்ல, நடுத்தர வயதைக் கடந்த இசைக் குழு கேப்டனாக நடித்துள்ள சசான் கோபாயின் தோரணை யிலும் இஸ்ரேலின் சிறந்த நடிகை ரோனி எல்காபெட்சின் யதார்த்த நடிப்பிலும் படத்தின் உயரம் பிடிபடுகிறது.

மறு நாள் அரபுக் கலாச்சார மையத்தில் வாழ்வின் இசையை மீட்டும் விதமான ஒரு அற்புதப் பாடலைப் பாடுகிறார் இசைக்குழு கேப்டன் டேபிக்.

அரசியலில் முரண்பட்ட எகிப்து - இஸ்ரேல் நாடுகளின் அரபு - ஹீப்ரு கலாச்சாரங்களின் இழுத்துக் கட்டிய கம்பியில் நடந்துள்ளார் இயக்குநர் எரான் கொலிரின். இரு வேறு முனைகளின் திசைகளை இணைக்கும் நம்பிக்கையுடன் ஹபீ சதாஷின் மேம்பட்ட இசை பேண்ட் விசிட்டைச் சர்வதேசப் படைப்பாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

SCROLL FOR NEXT