‘‘‘தனி ஒருவன்’ படத்துக்காக அனைத்து விருதுகளும் வாங்கினேன். அது தந்த உத்வேகத்தில் நல்ல கதைகளைத் தேடினேன். கடந்த இரண்டு ஆண்டுகளுமே எனக்கு வெற்றிகரமான ஆண்டுகள்தான். 2017-ம் ஆண்டும் அவ்வாறே அமையும்’’ என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்கினார் ஜெயம் ரவி.
மீண்டும் இயக்குநர் லட்சுமண் - அரவிந்த்சாமி - ஹன்சிகா என வெற்றிக் கூட்டணியோடு இணைந்துள்ளீர்களே?
‘போகன்' படக் குழுவினர் எனக்குப் பழக்கப்பட்டவர்கள்தான். புதுமையான கதை. மீண்டும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற வெறியோடு பணிபுரிந்துள்ளோம். டீஸர், ட்ரெய்லரைப் பார்க்கும்போது இது என்ன மாதிரியான கதை என்று ஊகிக்க முடியவில்லை என்றார்கள். அதேபோல படம் பார்க்கும்போதும், ரசிகர்களின் ஊகத்துக்குச் சவால்விடும் வகையில் வேறு ஒன்று நடக்கும். சண்டை, காதல், காமெடி, த்ரில் என அனைத்தும் இதில் இருக்கும். இதுபோல் கதைகள் அமைவது கடினம்.
சில காட்சிகளில் நீங்கள் அரவிந்த்சாமி போலும், அரவிந்த்சாமி உங்களைப் போலவும் நடித்துள்ளீர்களாமே?
உண்மைதான். ஆனால், அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. இருவருமே உடல் மொழியை மாற்றி நடித்தது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் ரசிகர்களுக்கு நான் நடிக்கும்போது அரவிந்த்சாமி சார் என்று புரிந்து அதை உணர்ந்து ‘வாவ்’ சொல்ல வேண்டும். அதே சவால்தான் அவருக்கும். கதையைக் கேட்டவுடனே, இருவருமே இப்படி நடிக்கலாம் என்று தீர்மானித்துவிட்டதால் நடிக்கும்போது அதிகம் கஷ்டப்படாமல் நடித்தோம். எனக்கு அவரும், அவருக்கு நானும் உதவி செய்துகொண்டோம். ஒட்டுமொத்தப் படக் குழுவின் உழைப்பும் அக்காட்சிகளில் தெரியும். ரசிகர்களுக்கும் அது நல்ல விருந்தாக அமையும் என நம்புகிறேன்.
புதிய இயக்குநர்களோடும் பணியாற்றுகிறீர்கள், பெரிய இயக்குநர்களோடும் பணியாற்றுகிறீர்கள். என்ன வித்தியாசம்?
புது இயக்குநர், பழக்கப்பட்ட இயக்குநர் என்பதையெல்லாம் விடக் கதையை மிகவும் நம்புவேன். எப்போதுமே கதைதான் நாயகன். அதுமட்டும் சரியாக அமைந்துவிட்டால், மற்ற அனைத்துமே சரியாக அமைந்துவிடும்.
தெலுங்கிலும் 'தனி ஒருவன்' மிகப் பெரிய வெற்றி. எப்படி உணர்கிறீர்கள்?
தமிழில் மட்டுமல்ல எந்த மொழியில் அந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டாலும் வெற்றியடைய வேண்டும் என்ற ஆசையிருந்தது. முதலில் தெலுங்கில் நிரூபித்துள்ளது. இந்தியிலும் உரிமையை வாங்கியுள்ளார்கள். நான் நடித்த படம் பல மொழிகளுக்குப் பயணிப்பதில் எனக்கு சந்தோஷம் இல்லாமலா இருக்கும்?
‘வனமகன்', ‘டிக்:டிக்:டிக்', ‘சங்கமித்ரா' என வித்தியாச மான கதைக்களங்களைத் தேடி ஓடுகிறீர்களே.
தற்போது ரசிகர்கள் எல்லா விதமான கதைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் படம் நலலாயிருந்தால் மட்டும் போதும். முன்பு ஒரே மாதிரியான கதைகளாக இருக்கும், அதை ரசித்துவந்தார்கள்.
‘பேராண்மை', ‘பூலோகம்', ‘நிமிர்ந்து நில்', ‘தனி ஒருவன்' என அனைத்துமே வித்தியாசமான கதைகளாகவே தேர்வு செய்து நடிக்கிறேன். அக்கதைகளில் எல்லாம் நடிக்கப் பலர் தயங்குவார்கள். ‘பேராண்மை' யோசிக்க முடியாத ஒரு விஷயம், அக்கதை என்னிடம் வரும்போது செய்யலாம் என்ற தைரியம் இருந்தது. ‘பூலோகம்' நான் நடித்த படங்களில் மிகவும் கடினமான படம் எனச் சொல்வேன். எந்த மாதிரியான கதைகள் வந்தாலும், புதுமையாக இருந்தால் முன்னுரிமை கொடுத்து நடிக்கத் தயங்குவதில்லை. ‘வனமகன்' கதைக்களம் மிகவும் கடினமானது. புதிய களம், புதிய கதாபாத்திரம் என நல்ல படம் செய்ய வேண்டும், ஒரே மாதிரியான படத்தில் நடித்து போரடிக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக உள்ளேன்.
உங்களுடைய தோல்விப் படங்களிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
வெற்றியடைந்த படத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. 100 மதிப்பெண் வாங்கி விட்டோம் என்றால் அனைத்துமே தெரிந்த மாதிரிதானே. ஒருசில படங்கள் 34, 44 என மதிப்பெண் பெறும்போது கொஞ்சம் பயம் வரும். எதில் நாம் என்ன தப்பு செய்தோம் என்று யோசிப்பேன்.
வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் தோல்விக்குக் காரணமாக என்ன தவறு நடந்தது என கண்டறிவது பெரிய சவால். ஆனால், நான் ஆற அமர யோசித்திருக்கிறேன். அதனால் எனது தோல்விப் படங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டதை அடுத்த படத்தில் சரிசெய்து கொள்வேன்.
‘சங்கமித்ரா' படத்தைப் பற்றி?
இயக்குநர் சுந்தர்.சி சார் எனது உடல் எடையை அதிகரிக்கச் சொல்லியுள்ளார். அப்படத்துக்காக நிறைய பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை ஆரம்பிக்கவுள்ளேன். வேறு எதுவும் இப்போதைக்குச் சொல்ல முடியாது.