இந்து டாக்கீஸ்

திரையும் இசையும்: உலகே மாயம், நீ போயே ஆக வேண்டும்

எஸ்.எஸ்.வாசன்

1935ஆம் ஆண்டு வெளிவந்த, தேவதாஸ் இந்திப் படத்தில், தேவதாஸாக நடித்து அதன் சில பாடல்களையும் பாடியவர் கே.எல். சைகல் என்ற குல்தீப் லால் சைகல். நாம் காண உள்ள இந்திப் பாடலை கே.எல். சைகல் பாடவில்லை. பின்னர் வெளிவந்து பெரும் வெற்றி அடைந்த தமிழ் தேவதாஸ் படத்தில், அதன் நாயகன் நாகேஸ்வராவுக்கு குரல் கொடுத்து புகழ் அடைந்த கண்டசாலாவின் ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ என்ற பாடலுக்கு இணையான, தேவதாஸ் இந்திப் பட பாடலைப் பாடியவர் கே.சி டே என்ற கிருஷ்ண சந்த் டே என்பவர்.

புகழ் பெற்ற பின்னணிப் பாடகர் மன்னாடே மற்றும் இசையமைப்பாளர் ஆ.டி. பர்மன் ஆகியோரின் உறவினரான கே.சி. டே தன் பால்ய வயதிலேயே பார்வையை இழந்தவர். தேவதாஸ் படத்தில் பாடிக்கொண்டே போகும் பார்வையற்றவராக இவர் பாடிய தத்துவப் பாடல், படத்தின் சூழலோடு ஒன்றியதுடன் அவர் உணரும் இயல்பான வேதனையை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்து கேட்பவர்களையும் பரவசப்படுத்தியது.

பின்னாளில் இயக்குநராகப் புகழ்பெற்ற கேதார் சர்மா எழுதித் திரை இசையில் சரோட் வாத்தியத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்திய சரோட் வித்வான் தமீன் பாரன் இசை அமைத்த அந்தப் பாடல் இதுதான்:

மத் பூல் முசாஃபிர் துஜே ஜானா ஹீ
படேகா
ஃபுல்வாரி ஜப் ஃபூல் கிலே தோ ஃபூலி
நஹீ சமாத்தி ஹை
அப்னி அப்னி சுந்தர்தா பர் கலி கலி
டதராதி ஹை
சப்னம் ஹை ஜோ ரோ ரோக் கர் ஹர் ஃ
பூல்கோ யே சம்ஜாத்தி ஹை
மத் பூல் முசாஃபிர் துஜே ஜானா ஹீ
படேகா
யேக் முசாஃபிர் ஆனாஹை துனியா
யேக முசாஃபிர் ஜானாஹை
மோஹ்ஜால் மே ஃபஸ்கர் மூரக் ஃபிர்
பாச்சே பஸ்தானா ஹை
காஃபில் யேக் தின் சப்கோ யஹான் ஸே
இத்னா கஹகர் ஜானா ஹை
அஃப்சோஸ் நா ஜானாத் தா ஜானாஹீ
படேகா
மத் பூல் முசாஃபிர் துஜே ஜானா ஹீ
படேகா.

இதன் பொருள்:

மறக்க வேண்டாம் வழிப்போக்கனே
நீ போயே ஆக வேண்டும்.
நந்தவனத்தில் பூக்கள்
மலரும்பொழுது
பூக்கள் மட்டுமில்லாது
அதன் காம்புகளும்
மொட்டுக்களும்கூடத்
தம் அழகைத் தோட்டம் முழுதும்
பரப்பிக் கொண்டிருக்கும்.
பனித் துளிகள் என்ற கண்ணீருடன்
‘நீங்கள் போயே ஆக வேண்டும்’
என அப்பூக்களுக்குப் புரிய வைக்கும்
மறு நாள் உதயம்.
ஒரு வழிப்போக்கன் வருவதும்
ஒரு வழிப்போக்கன் போவதும்தான்
உலக நியதி
மோக வலையில் மூழ்கும் மூடர்கள்,
பின்னர் துன்பம் அடைகிறார்கள்.
எல்லோரும் ஒரு நாள்
இவ்வுலகை விட்டுப் போயே ஆக
வேண்டும்
என்ற உண்மையை அறியாமல்
இருந்துவிட்டேனே
என்ற வருத்தத்துடனே அனைவரும்
இங்கிருந்து செல்ல வேண்டியுள்ளது.
அதனால், மறக்க வேண்டாம்
வழிப்போக்கனே
நீ போயே ஆக வேண்டும்...

தமிழ் தேவதாஸ்

இருபத்தெட்டாம் வயதிலேயே அமரரான இசை வல்லுனர் சி. எஸ். சுப்புராமன் இசையமைத்த தமிழ் தேவதாஸ் பாடல், இந்த விரக்தி உணர்வையும் வாழ்க்கை நிலையாமையையும் இப்படி வெளிப்படுத்துகிறது:

உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
ஆவதும் பொய்யாவதெல்லாம்
ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும்
தன்னாலே அழியும்
நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம்…
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வரார் நாம் செல்லும்
நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகும் இதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்...

உடுமலை நாரயண கவி, கே.டி. சந்தானம் ஆகியோர் தமிழ் தேவதாஸ் படத்தின் பாடலாசிரியர்கள் என்று இப்பட விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும், மொழி, நடை ஆகியவற்றைப் பார்க்கும்பொழுது சந்தானமே இப்பாடலை எழுதியிருக்கக்கூடும் எனக் கருத வேண்டியுள்ளது. வழிப்போக்கன் என்ற பொருள்தரும் ‘முசாஃபிர்’ என்ற சொல் இந்தி தத்துவப் பாடல்களின் தவிர்க்க முடியாத ஒரு சொல்லடையாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT