இந்து டாக்கீஸ்

சினிமா எடுத்துப் பார் 100: நல்லதொரு குடும்பம்!

எஸ்.பி.முத்துராமன்

திரைப்பட தயாரிப்பாளர்கள் இல்லா மல் படமா? வேர்கள் இல்லாமல் மரமா என்று கடந்த வாரம் கேள்வி யோடு முடித்திருந்தேன். தயாரிப்பாளர் கள் சங்கத் தேர்தல் சூடு பறக்கிறது. அடுத்த வாரத்தில் முடிவு தெரியும். புதி தாக தேர்வாகும் வெற்றியாளர்கள் திரைப் படத்துறை ஆரோக்கியமாக இருக்க, என்னென்ன தேவையோ அதை நிறை வேற்ற வேண்டும் என்று எல்லோரது சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை வாரங்களாக பல விஷயங் களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இந்த வாரம் 100-வது வாரம். முழுக்க என் குடும்பத்தை பற்றி எழுதப் போகி றேன். குடும்பம் என்ற வேர் சரியாக இருந்தால்தான் அந்த மரம், அதன் கிளைகள், விழுதுகள் எல்லாம் சரியாக இருக்கும். அதற்கு எங்கள் குடும்பமே ஒரு எடுத்துக்காட்டு!

என் பெற்றோர் இராம.சுப்பையா விசாலாட்சி தம்பதியினர் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தினரோடு இணைந்து பொதுச் சேவை யில் ஈடுபட்டவர்கள். அவர்களது அந்த குணங்களையும், செயல்களையும் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கும் அந்த நல்ல பழக்க வழக்கங்கள் வந்தன. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரி யர் அன்பழகன், எம்.ஜி.ஆர், வீரமணி போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பு அமைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறோம்.

எங்கள் குடும்பத்தில் என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சகோதரர்கள் நான்கு. சகோதரிகள் இருவர். அவர்களில் என் சகோதரி கனகலட்சுமி, அவரது இராம சிதம்பரம் காரைக்குடியில் மெட்ராஸ் ஸ்டோர் என்ற பெயரில் கடை வைத்திருந்தார்கள். அதோடு பல மாவட் டங்களுக்கு ‘ப்ரில் இங்க்’ விநியோகஸ்தர்.

ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அதில் சுற்றியே தன் நான்கு ஆண் குழந்தைகளையும், மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கினார். இன்றைக்கு பிள்ளை கள் எல்லோரும் காரில் செல்லும் அளவுக்கு வாழ்கிறார்கள். பெற்றோர் கள் கஷ்டப்பட்டால் எத்தனை குழந்தை களையும் காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தக் குடும்பம் சாட்சி. இந்தக் குடும் பத்துக்கு ‘கடுமையான உழைப்பாளிகள்’ என்று பெயர்!

அடுத்து, என் தம்பி எஸ்பி.செல்வமணி. பொதுப்பணித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். பதவி உயர்வு வந்தபோது. ‘இந்தப் பதவி உயர்வு தேவையில்லாத சில தவறுகளில் என்னைக் கொண்டு போய் விட்டுவிடும். நான் இப்படியே இருந்துவிடுகிறேன்!’ என்று அதை தவிர்த்து வாழ்ந்தவர். அன்றன்றைக்கு நடக்கும் செலவை எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அவரது மனைவி சரோஜா நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் ஆசிரியை. இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். அவர்களை நன்கு படிக்க வைத்ததால் இன்றைக்கு வாழ்க்கையில் உயரத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் எஸ்பி.செல்வமணி இறந்துவிட்டார். இந்த இழப்பு அவரது மனைவி சரோஜாவுக்கு பேரிழப்பாகும்.

என்னுடைய இன்னொரு சகோதரி இந்திரா. இவர் கு.மா.வெங்கடாசலம் அவர்களுடைய மனைவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்திரா இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.

ஏவி.எம் நிறுவனத்தின் கிளைக் கம்பெனியான ஆரோ (Orwo) பிலிம்ஸில் எல்.வெங்கடாசலம் அவர்களிடம் இரு பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என் சகோதரர் எஸ்பி.சுவாமிநாதன். எந்த வேலை கொடுத்தாலும், அதை அமெரிக்கா சென்று முடிக்க வேண்டும் என்றாலும் வெற்றியோடு திரும்பி வரும் திறமை கொண்டவர். அவர் மனைவி நாகரத் தினம். கணவரின் பக்கபலம். அவர் களுக்கு மூன்று பெண்கள். ஒரு ஆண். எல்லோரும் நல்ல நிலையில் இருக் கிறார்கள்.

என் இளைய தம்பி பற்றி அறிமுகம் தேவையில்லை. அவர்தான் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். உலகம் முழுக்க பயணித்து உரையாற்றி சிறந்த பேச் சாளராக விளங்குகிறார். இலக்கிய விழாக்களுக்குச் சென்றால் சுப.வீ அண் ணன் எஸ்பி.முத்துராமன் என்றும், திரைப் பட விழாக்களுக்குச் சென்றால் எஸ்பி.எம் தம்பி சுப.வீ என்றும் பார்க்கப்படுகிறோம்.

அவர் கருப்புச் சட்டை. நான் வெள்ளைச் சட்டை. கண் விழிகளில் இருக்கும் கருப்பு-வெள்ளை போல் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர் மனைவி வசந்தி முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தலைவி. சுப.வீ பேச்சுக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. ‘சிந்து பைரவி’ படத்தில் சுலக் ஷனாவின் கதாபாத்திரம்தான் வசந்தி. இவர்களுக்கு இரண்டு பையன்கள். ஒரு பெண். மூவரும் வெளிநாட்டில் சிறப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சுப.வீக்கும், வசந்திக்கும் குழந்தைகள் இருந்தும் தனிமை.

எல்லோரையும் பற்றி சொன்னேன். என் குடும்பம் பற்றியும் சொல்ல வேண்டும் இல்லையா? என் மனைவி கமலா. சீர்திருத்தவாதியான கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் அவர்களின் பேத்தி யும், சோலைஅழகம்மை அவர்களின் மக ளும் ஆவார். காரைக்குடியில் நடந்த ‘கம்பன் கழகம்’ விழாவில்தான் கம லாவை பெண் பார்த்தேன். அவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்.

வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் பிள்ளைகள் காலையில் திருக்குறள், திருவாசகமும் கூறினால்தான் சாப்பாடே கிடைக்கும். இந்த மாதிரி வளர்ந்தவர், கமலா. அதனால் எல்லாவிதமான நற்குணங்களும் அவரிடம் இருந்தன. என் கோபத்தை குறைத்து என்னை முழு மனிதனாக உருவாக்கியவர், கமலாதான்.

வீட்டில் பொங்கல் பண்டிகை மட்டும் தான் கொண்டாடுவோம். அப்போதும் எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து விட்டு கடைசியாக மீதமுள்ள பணத் துக்கு ஏற்றாற்போல் ஒரு காட்டன் புடவையை எடுத்துக்கொள்வார். அதில் திருப்தி பெறுவார். கமலா வரவுக்கு ஏற்ற செலவு செய்ததால்தான் எங்கள் வாழ்க்கை நன்றாக இருந்தது. எல்லா இல்லத்தரசிகளும் வரவு பத்தணா, செலவு எட்டணா, சேமிப்பு ரெண்டணா என்று வாழ்ந்தால் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

ஒரு நாள்கூட தான் ஒரு இயக்குநர் மனைவி என்று காட்டிக்கொண்டதே இல்லை. என் பிள்ளைகளை சினிமாத் தனம் இல்லாதவர்களாக வளர்த்தார். “சினிமா ஒரு நிரந்தர தொழிலாக இல்லை. எப்போது முன்னுக்கு வருவோம் என்பதை திட்டமிட்டு கூறமுடியாது. இரவு, பகலாக ஸ்டுடியோவிலேயே இருக்க வேண்டும். குடும்பத்தை கவனிக்க முடி யாது. அதனால் நீங்கள் சினிமா தொழி லுக்கு போக வேண்டாம். சினிமாவுக்கு அப்பா ஒருவரே போதும்!’’ என்று கூறி விட்டார். குழந்தைகளை ஷூட்டிங் பார்க் கக்கூட அனுமதிக்கவில்லை.

எனக்குப் பிறகு என் குடும்பத்தில் ஏன் யாரும் சினிமாவுக்கு வர வில்லை என்பதற்கு கமலாதான் மூலக் காரணம். மற்றவர்களும் இதை புரிந்துகொண்டு, சினிமா தொழிலுக்கு வர வேண்டும் என்பது என் வேண்டு கோள்.

நாங்கள் வளர்த்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள். அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்

SCROLL FOR NEXT